Date: June 25, 2025
 
'தேசமே! தேசமே! தேசமே!  கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.' (எரேமியா 22:29)

நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கும்போதே, உலகம் முழுவதுமுள்ள நாடுகள் ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டிருக்கின்றன. நடைபெறுகின்ற யுத்தத்தை  சற்று கற்பனை செய்து பாருங்கள் – இனிமேல் நமக்குப் பாதுகாப்பில்லை என்ற சூழ்நிலையில் வீடுகளை விட்டு வெளியேறும் பொதுமக்கள்; கடுமையான போரில் ஈடுபடும் ராணுவங்கள்; தங்கள் அன்புக்குரியவர்கள் இறப்பதை கண்முன்னே பார்த்து, உதவியற்ற நிலையில் தவிக்கும் குடும்பங்கள்; மனிதாபிமான சேவையை வழங்க தங்கள் உயிரையும்  பணயம் வைத்துச் செயல்படும்  மீட்புப் பணியாளர்கள்; காற்றைக் கிழித்துக்கொண்டு விண்ணில் பாயும் ஏவுகணைகள், கண்ணிமைக்கும் நேரத்தில் மிக உயர்ந்த  கட்டடங்கள் குப்பைமேடுகளாக மாறிப்போகும் இடிபாடுகள்.  இவை அனைத்திற்கும் மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள், நெரிசலான அகதி முகாம்களில் குவிந்து, தெரியாத எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். வாழ்க்கை ஒரு நிமிஷத்தில் மங்கலாகிப்போகின்றன. 'சமாதானம்' என்ற வார்த்தை அவர்களுக்கு இனி எந்த அர்த்தமும் இல்லாததாக மாறுகிறது. இந்த நேரத்தில்  இறைவன் எங்கே?  என்ற முக்கியமான கேள்வி அவர்களுக்குள் எழும்புகிறது.

இயேசுகிறிஸ்துவுக்கு சுமார் 700 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஏசாயா என்ற எபிரெய  தீர்க்கதரிசி,  கர்த்தருடைய பிறப்பைக் குறித்து, கன்னி மரியாளின் மூலம் இந்த உலகத்திற்கு ஒரு குழந்தையாக வருவதை முன்னறிவித்தார்.  அந்த வேதாகம வசனம் இவ்வாறு கூறுகிறது: "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன்  கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன்,  நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்." (ஏசாயா 9:6)

அரசியல் ஸ்திரமற்ற நிலையில் பயத்தால் பீடிக்கப்பட்ட நேரத்தில் இருந்த ஒரு தேசத்திற்கு நம்பிக்கையை வழங்குவதற்காக, இயேசுவை சமாதான பிரபுவாக நேரடியாக முதன்முதலில் தீர்க்கதரிசி ஏசாயாவால் குறிப்பிடப்பட்ட வசனம் இது.  ஏசாயாவுக்கு சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு, சகரியா என்ற மற்றொரு தீர்க்கதரிசி, “தேசங்களுக்குச் சமாதானத்தைக் கூறப்போகும்” ஒரு ராஜாவாகவும், இரட்சகராகவும்,  நியாயாதிபதியாகவும்  இயேசு வருவார் என்று அறிவித்தார். (சகரியா 9:10)

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, எருசலேமுக்குள் இயேசு வெற்றிகரமாகப் பிரவேசித்த தீர்க்கதரிசனத்தின் ஒரு சுவாரஸ்யமான நிறைவேறுதல்தான் இது. இதைக் குறித்து, "இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும்,  கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்." (சகரியா 9:9)  என்று இந்த சம்பவத்தை முன்னறிவிக்கிறது.

மகிமையான மேசியாவாகிய ஒரு ராஜா வருவார் என்றும், அவர் வரும்போது, அது கொண்டாடத்தக்க மாபொரும் ஒரு மகிழ்ச்சியின் நாளாக இருக்கும் என்றும் சகரியா மக்களுக்கு நினைப்பூட்டினார். ஜனங்கள் தங்கள் நம்பிக்கையை இழக்காமல், சமாதானத்தைக் கொண்டுவரும் ராஜாவுக்காகக் காத்திருக்கும்படி தீர்க்கதரிசி அவர்களை ஊக்குவித்தார். ஆனால், ஏன் ஒரு ராஜா கழுதையின்மேல் ஏறி வர வேண்டும்?

தாவீதின் நகரம் என்று பிரபலமாக அழைக்கப்படும் எருசலேம், ராஜாக்களின் நகரமாக இருந்தது. அங்கு ஆட்சியாளர்கள் போரில் தங்கள் எதிரிகளை எதிர்கொள்ள குதிரைகளின்மேல்  சவாரி செய்தனர். இயேசு ஒரு யுத்தத்திற்கு வரவில்லை, மாறாக சமாதானத்தின் ராஜாவாகவே வருகிறார் என்பதை அறிவிக்கவே இயேசு கழுதையின்மீது ஏறி வந்தார்.  "இதோ, உன்  ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும்  ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார்" (மத்தேயு 21:4)  என்ற வசனம்  அதை உறுதிப்படுத்துவதன் மூலம், பாவமுள்ள மக்களுக்கு தேவனோடு நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஒரே ஒருவர் இயேசுவாகிய மேசியாதான் என்பதை நாம் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம்.  

“குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு: அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா…” (யோவான் 12:13) என்று ஜனங்கள்  வந்தார்கள் என வேதம் இந்தச் சம்பவத்தை இன்னும் விவரிக்கிறது. ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் சமாதானத்தின் ஆதரமாக இருப்பது தாம் ஒருவர்தான் என்பதை ஜனங்களுக்கு உணர்த்தவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இயேசு “ஜெய பவனி” சென்றார் என்பதை இதிலிருந்து நாம் உணர்ந்துகொள்கிறோம்.

இயேசு பிறந்த நேரத்தில், புதிதாகப் பிறந்த குழந்தை சமாதானத்தைக் கொண்டு வருகிறார் என்பதை தேவதூதர்களும் அறிவித்தனர் (லூக்கா 2:14). இயேசு பூமியில் மனிதனாக நடந்த 33 வருடங்களில், அவர் பரிசுத்த ஆவியாலும் தேவனுடைய வல்லமையாலும் அபிஷேகம் பண்ணப்பட்டு, நன்மை செய்கிறவராயும், பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்து, சமாதானத்தின் ஒரு ஸ்தானாபதியாக அவர் விளங்கினார். (அப்போஸ்தலர் 10:38)

“அவர் வந்து  சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்”  என்று எபேசியர் 2:17-ல் வாசிக்கிறோம். அது எவ்வளவு பெரிய உண்மை!

ஆகவே, ஆண்டவராகிய இயேசுதான் பூமியிலே சமாதானத்தை  நிலைநாட்டக்கூடிய  சமாதான பிரபுவும் சமாதான ராஜாவுமானவர் என்பது மறுக்கமுடியாத ஒன்று.  கொந்தளிக்கும் உங்கள் இருதயத்திற்கும் சமாதானத்தைக் கொண்டுவரக்கூடியவர் அவரே.

இயேசுவை நீங்கள் உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, அவருடைய சமாதானம் உங்கள் இருதயத்தை நிரப்பி, அவரைப்போலவே உங்களையும் சமாதானம்பண்ணுகிறவர்களாக மாற்றும். “சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.” (மத்தேயு 5:9) என்று இயேசுவே கூறுகிறார்:

சமாதானம் வல்லமையுள்ளது. தேவனுடைய சமாதானம் சாத்தியமற்றதை சாதித்து நிறைவேற்றும். சமாதானம் என்பது உண்மையிலேயே தேவனுடைய  மிகப்பெரிய ஆசீர்வாதம்.

“அவரே நம்முடைய சமாதான காரணராகி” என்று எபேசியர் 2:14 கூறுகிறது. இந்த இரட்சகர்தான் யுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவர முடியும். இதை உறுதிப்படுத்துகிறது: "அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்" என்பதை சங்கீதம் 46:9 உறுதிப்படுத்துகிறது.  அவருடைய சமாதானத்தின் பிள்ளைகளாகிய நாம் யுத்தங்களினால் சீர்குலைந்த நாடுகளின்மேல் தேவனுடைய கரம் அமரும்படியாக ஜெபிக்கும்போது, தேவன் பூமியின்மீது சமாதானத்தை ஊதுவார். “நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் நாம் ஜெபம்பண்ணவேண்டும்” என்று 1 தீமோத்தேயு 2:2  நம்மை வலியுறுத்துகிறது.  நமது ஜெபம் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் சமாதானப் பிரபுவுக்கு முன்பாக அடிபணியச் செய்யும், ஏனென்றால் "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம்  கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக." (யோவான் 14:27)  என்று இயேசு கூறுகிறார்.

ஆண்டவருடைய சமாதானத்தை இன்றே பெற்றுக்கொள்ளுங்கள். அது இலவசம்.  ஜெபத்தில் உறுதியாகத் தரித்திருங்கள். அவருடைய சமாதானம் உலகத்தை மாற்றுவதைப் பாருங்கள்.

~ Dr. பால் தினகரன்