எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். வேதத்தில், கர்த்தர், "என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்" (நீதிமொழிகள் 4:20-22) என்று கூறியிருக்கிறார்.

ஆம், எனக்கு அன்பான தேவ பிள்ளையே, அனுதினமும் வேதத்தை வாசிப்பது முக்கியம். ஏன் தெரியுமா? உபாகமம் 8:3; மத்தேயு 4:4 மற்றும் லூக்கா 4:4 ஆகிய வசனங்களில் வேதம் தெளிவாக, "மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்றும், "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங்கீதம் 119:105) என்றும் கூறுகிறது. தேவனுடைய வசனம் வெளிச்சத்தையும் வழிகாட்டுதலையும் மட்டும் கொடுப்பதில்லை; அது ஞானத்தையும் தருகிறது. "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்" (சங்கீதம் 119:92) என்றும், "உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்" (சங்கீதம் 119:99) என்றும் கூறுகிறது. ஏன்? எவ்வளவு அதிகமாக தியானிக்கிறோமோ, அந்த அளவுக்கு அறிவில் பெருகுவோம்.

"நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்" (சங்கீதம் 119:107) என்பது அருமையான வசனம். ஆம்! தேவனுடைய வார்த்தை உங்கள் ஆத்துமாவை, மனதை, சரீரத்தை எப்படியாய் உயிர்ப்பிக்கிறது! தேவனுடைய வசனத்தை அனுதினமும் வாசிப்பது எவ்வளவு முக்கியமாயிருக்கிறது. அது ஆரோக்கியத்தை, சமாதானத்தை, ஞானத்தை, சந்தோஷத்தை அளிக்கிறது. இப்போது உங்கள் வாழ்க்கையை சீர்தூக்கிப் பாருங்கள். நீங்கள் சொந்தமாக வேதாகமத்தை வைத்திருக்கிறீர்களா? தினமும் எவ்வளவு நேரம் செலவழித்து வேதத்தை வாசிக்கிறீர்கள்? ஆண்டவர் உங்களைக் கண்ணோக்கிக் கொண்டிருக்கிறார்.

நீங்கள் தேவனுடைய வசனத்தை தினமும் வாசித்தால், ஆண்டவர் உங்களை பூரணமாய் ஆசீர்வதிப்பார்; நீங்கள் ஆசீர்வாதமாகவே இருப்பீர்கள். நீங்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லையென்றால், இன்றே ஆரம்பியுங்கள்; இதுவே புதிய ஆரம்பமாயிருக்கட்டும். இன்றுமுதல் நீங்கள் நற்சுகத்தை, சமாதானத்தை, கர்த்தருடைய சந்தோஷத்தை அவருடைய ஜீவனுள்ள வார்த்தைகள் மூலமாக பெற்றுக்கொள்வீர்கள்.

ஜெபம்:
கிருபையும் அன்பும் நிறைந்த தகப்பனே, ஜீவனும் வல்லமையும் நிறைந்த உம் வசனத்தை ஈவாக தந்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்று என் இருதயத்தை திறந்து, என் காதுகளை உம்முடைய சத்தத்திற்கு நேராக திருப்புகிறேன். என் இருதயத்தின் ஆழத்திற்குள் உம் வார்த்தைகளை மறைத்துவைக்க எனக்கு உதவிசெய்யும். ஆண்டவரே, நான் அப்பத்தினால் மட்டும் பிழைக்க விரும்பவில்லை; உம்மிடத்தில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்க விரும்புகிறேன். உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கக்கடவது. அது என்னை வழிநடத்தட்டும்; பெலப்படுத்தட்டும்; சந்தோஷத்தினால் நிரப்பட்டும். உம்முடைய வார்த்தை என் உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதுக்கு சமாதானத்தையும், ஆவிக்கு ஞானத்தையும் தரட்டும். ஆண்டவரே, உம்முடைய வார்த்தையை நாள் தவறாமல் தினமும் வாசிப்பதற்கான பசியை எனக்கு தந்தருளும். அதன் மூலம் என் வாழ்க்கை கனிநிறைந்ததாகவும், ஆசீர்வாதமானதுமாக மாறுவதாக. வேதமாகிய பொக்கிஷத்திற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன், ஆமென்.