அன்பானவர்களே, இன்றைக்கு, "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்" (ஏசாயா 40:29) என்ற வாக்குத்தத்தத்தை தியானிப்போம்.
நீங்கள் களைத்துப்போயிருக்கிறீர்களா? அதிகமாக பிரயாசப்பட்டும் பலனை காண இயலவில்லையே என்று எண்ணுகிறீர்களா? தினமும் அதிகமாய் பிரயாசப்பட்டு, அதிகமான பாரத்தை சுமப்பதுடன், "காரியங்கள் எப்போது மாறும்?" என்று கலங்குகிறீர்களா? இன்றைக்கு தேவன் உங்களுக்குப் பெலனை தருவார். உங்கள் ஆவியை உயர்த்துங்கள்; அப்போது காரியங்களை எளிதாய் செய்ய முடியும். ஆனால், தேவனால் எப்படி இந்தப் பெலனை தர முடியும்? தினமும் தேவனுடைய வசனத்தை தியானிக்கும்போது, அவர் உங்கள் இருதயத்துடன் நேரடியாக பேசி, ஆவிக்குரிய பெலனை அளிப்பார். நீங்கள் ஜெபிக்கும்போது, அவர் உங்கள் ஆத்துமாவை தேற்றுவார்; உங்களுக்குப் புதுப்பெலனை தருவார். தெய்வீக ஆலோசனையின் மூலம் அவர் ஞானத்தையும், வழிகாட்டுதலையும் உங்களுக்குத் தந்து பெலப்படுத்துவார்.
இதை நாம் மோசேயின் வாழ்க்கையில் தெளிவாகப் பார்க்கிறோம். தேவன், மிகுந்த அழுத்தத்திற்குள்ளாக மோசே இருக்கிற வேளையில் அவன் மாமனாராகிய எத்திரோவை தெய்வீக ஆலோசனையை கொடுக்கும்படி அனுப்புகிறார். மோசே, இஸ்ரவேல் ஜனங்களை நடத்திக்கொண்டிருந்தபோது, கணக்கற்ற மக்கள் அவனிடம் ஆலோசனையையும் தீர்வையும் பெற்றுக்கொள்வதற்காக வந்தார்கள். அவனால் முடியவில்லை. பாரம் கடினமாயிருந்தது. அதை அவனால் தனியே தாங்க இயலவில்லை. எத்திரோ, மோசே, மன அழுத்தத்திற்குள்ளாகி, களைத்துப்போகிறதை காண்கிறான். அவன் அன்போடு, "நீர் செய்கிற காரியம் சரியானதல்ல. நீர் மட்டுமே தனியாக இதைத் தொடர்ந்து செய்தால் களைத்துப்போவீர்; பெலவீனமாவீர்," என்று கூறுகிறான். பிறகு, மோசேக்கு காரியங்களை பிரித்துக்கொடுக்கும்படியும், தகுதியானவர்களை அமர்த்தும்படிக்கும், பெரிய காரியங்கள்மேல் அவன் கவனம் செலுத்தும்படிக்கும் ஞானமாய் ஆலோசனை கொடுத்தான். அதேவண்ணமாக, தேவன் ஏற்ற பாதையில் நடக்கும்படி, உங்களைப் பெலப்படுத்தும் பக்தியுள்ள ஆலோசனை கொடுப்பதற்கான மக்களை அனுப்புவார்.
ஆகவே இன்று அன்பானவர்களே, நீங்கள் பெலவீனமாய் உணரும்போது தேவன் உங்களைப் பெலப்படுத்துவார் என்று நம்பி தைரியமாயிருங்கள். அவர் தம் வார்த்தையின் மூலம் பேசுவார். ஜெபத்தின் மூலம் உங்கள் ஆத்துமாவை தேற்றுவார். "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்" (ஏசாயா 40:31) என்று வேதம் கூறுகிறபடி, ஏற்ற மக்களை ஏற்ற சமயத்தில் அனுப்புவார். ஆகவே, ஆண்டவரை நம்புங்கள்; அவர்மேல் உங்கள் நம்பிக்கையை வைத்திடுங்கள். அவருக்காக அனுதினமும் காத்திருங்கள். அவர் உங்களுக்குப் புதுப்பெலனைக் கொடுத்து, காரியங்களை எளிதாக செய்ய உதவுவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னுடைய பெலவீனத்தோடு, பாரமான சுமையை சுமந்து களைத்துப்போய் உம் முன்னே வந்திருக்கிறேன். சோர்ந்துபோகிறவனுக்கு பெலனையும் சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தையும் கொடுப்பதாக நீர் அளித்திருக்கும் அன்பான வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னுடைய ஆவியை உம்மிடம் உயர்த்துகிறேன். உம்முடைய வசனத்தின் மூலம் என்னோடு பேசும்; ஜெபத்தில் என்னை சீர்ப்படுத்தும்; உம்முடைய சமுகத்தில் அனுதினமும் என்னை புதுப்பியும். மோசேக்கு எத்திரோவை அனுப்பியதுபோல, என் வாழ்க்கைக்கும் பக்தியான ஆலோசனையை தாரும். எல்லாவற்றையும் உம்முடைய ஞானத்துடன் செய்து, சமாதானத்துடனும் திடநம்பிக்கையுடனும் முன்னேறிச் செல்ல எனக்கு உதவும். நீரே என் பெலன், என் கன்மலை, ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையாயிருப்பதினால் கழுகைப்போல உயரே பறக்க எனக்கு உதவவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.