அன்பானவர்களே, இந்த நாளிலும் தேவனுடைய வசனத்துடன் உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். தேவன் பேசும்போது, அவர் உங்கள் வாழ்க்கையை பரிபூரணப்படுத்துவார். இன்று, "பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்" (உபாகமம் 14:2) என்ற வசனத்திலிருந்து உங்களோடு பேசுகிறார். அன்பானவர்களே, இது பெரிய காரியமல்லவா! தேவனால் அவருக்குச் சொந்தமான ஜனங்களாய் இருக்கும்படி தெரிந்துகொள்ளப்படும்போது, அவரது கண்கள் உங்கள்மேலேயே இருக்கும்.
நான் பள்ளியில் படித்தபோது, நடுநிலைப்பள்ளி நாள்களில், என்னுடைய உடற்பயிற்சி ஆசிரியர்கள் கூறுகிற எறிபந்து (handball) விளையாட்டு மிகவும் பிடிக்கும். மாணவர்கள், வெவ்வேறு நிறப் பெயரிலான பிரிவுகளாக பிரிக்கப்படுவோம். நான் என்னுடைய அணி எப்படியாவது வெற்றிபெறவேண்டுமென்று விரும்புவேன். ஆகவே, வகுப்பு இடைவேளை நேரங்களிலும் நாங்கள் ஒன்று கூடி, வெற்றி பெறுவதற்கான முறைகள் குறித்து ஆலோசிப்போம். அப்படி ஒரு முறை என்னுடைய அணி போட்டியில் வெற்றி பெற்றது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பயிற்சியாளர், "சாம், இப்போது நீ அணிக்கு கேப்டனாக இருக்கலாம். போ, போய் உன் அணியை வழிநடத்து," என்று கூறினார். நான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்; ஏனென்றால், அப்போது எனக்கு எறிபந்து மிகவும் பெரிய விஷயமாக இருந்தது.
ஆம், அப்படியே உங்கள் வாழ்க்கையிலும், நீங்கள் தெரிந்துகொள்ளப்படவேண்டிய நேரம் வரும்; சர்வவல்ல தேவனே உங்களைத் தெரிந்துகொள்வார். எல்லாவற்றுக்கும் மேலாக தம்முடைய சொந்த ஜனமாக தெரிந்துகொள்வார். இன்றைக்கு, உங்களைச் சுற்றிலுமிருக்கும் மக்கள், "கடைசி வரிசைக்குப் போ..." என்று உங்களை மட்டம் தட்டக்கூடும். அவர்கள் உங்களை அணி தலைவராகவோ, குழு தலைவராகவோ, முன்கள வீரராகவோ தெரிந்தெடுக்காமல் இருக்கலாம். உங்களை மறந்துபோயிருக்கலாம். ஆனால், அன்பானவர்களே, சர்வவல்ல தேவனின் கரங்களில், அவரால் சொந்தமாக தெரிந்தெடுக்கப்பட்ட உங்கள் வாழ்க்கை இருக்கிறது. நீங்கள் தேவனுடைய கரங்களில், உங்களுக்கான நோக்கத்திற்கு தலைவனாக / தலைவியாக இருக்கிறீர்கள் என்பதை மறந்துபோகாதீர்கள். வெகு சீக்கிரத்திலேயே அவர் உங்களைச் செழிக்கப்பண்ணுவார். தேவனுடைய இந்த விசேஷித்த தெரிந்துகொள்ளுதலை அலட்சியம் பண்ணாதீர்கள்; அதற்கு உரிய கனம் கொடுங்கள்; வாழ்க்கையில் பெரிய காரியங்களை காண்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய வசனத்தின் மூலம் ஜீவனையும் நல்ல நோக்கத்தையும் உரைப்பதற்காக ஸ்தோத்திரம். இன்றைக்கு நீர் என்னை உமக்கு சொந்தமானவனாக தெரிந்துகொண்டிருக்கிறீர் என்ற ஆச்சரியத்தோடு நிற்கிறேன். உலகம் என்னை மறந்திருந்தாலும், உம் கண்கள் என்மேலேயே இருக்கின்றன என்று நான் அறிந்திருக்கிறேன். உம்முடைய தெய்வீக நோக்கத்தை நிறைவேற்றும் தலைவனாக / தலைவியாக உம் கரங்களில் நான் இருக்கிறேன் என்பதை அனுதினமும் எனக்கு நினைப்பூட்டும். அந்த அழைப்பில் தைரியத்தோடும் விசுவாசத்தோடும் உம்முடைய வேளையின்மேல் நம்பிக்கை வைத்து, நீர் என்னை செழிக்கப்பண்ணுவீர் என்று நடக்க உதவி செய்யும். ஆண்டவரே, என் வாழ்வை உம்முடைய தெரிந்துகொள்ளுதலை கனப்படுத்தி, உம்முடைய வல்லமையான திட்டத்திற்கு அர்ப்பணித்து, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.