எனக்கு அருமையானவர்களே, இன்றைக்கு, தேவன், யோசுவாவுக்குக் கொடுத்த "உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்" (யோசுவா 1:3)என்ற வாக்குத்தத்தத்தை தியானிப்போம். இன்றைக்கு இந்த வாக்குத்தத்தம் உங்களுக்குரியதாகட்டும். அவர், "எழும்பு, எழும்பு உன்னுடைய சோம்பலை விட்டு எழுந்திரு. பயத்தைவிட்டு எழுந்திரு. உன்னுடைய சேறுபோன்ற பாவத்தை விட்டு எழுந்திரு. தவறான உறவுகளைவிட்டு எழுந்திரு. அவநம்பிக்கையிலிருந்து எழுந்திரு. உன்னுடைய பெலவீனத்தைவிட்டு எழுந்திருந்து முன்னேறு," என்று கூறுகிறார். தேவன், ஆசீர்வாதமான இடத்தை நீங்கள் சுதந்தரிக்கவேண்டுமென்று விரும்புகிறார். இது முன்னேறுவதற்கான நேரம். இன்றைக்கு அடியெடுத்து வைத்திடுங்கள். உங்கள் பாதத்தை முன்னே வைத்து, தேவன் உங்களுக்கென்று ஆயத்தம் செய்திருக்கிற எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். தேவன் தரும் ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க உங்கள் பாதங்கள் எப்படியிருக்கவேண்டும்?

முதலாவது, உங்கள் பாதங்கள் சுத்திகரிக்கப்பட்டிருக்கவேண்டும். "முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்" (எபிரெயர் 12:13) என்று வேதம் கூறுகிறது. இன்னொரு மொழிபெயர்ப்பில் உங்கள் பாதங்கள் கிறிஸ்துவின் பாதங்களைப்போல சுத்திகரிக்கப்பட்டிருக்கவேண்டும்; அப்போது இயேசு உங்களுடன் நடக்கவும், நீங்கள் அவருடன் நடக்கவும் ஏதுவாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்றைக்கு எந்த பாவம் உங்களை முன்னேறவிடாமல் தடுக்கிறதோ அதை சுத்திகரிக்கும்படி ஆண்டவரிடம் கேளுங்கள். இயேசு, பிதா தமக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்தபோதிலும், தன் வஸ்திரங்களை கழற்றி வைத்து, சீலையை எடுத்து  அரையிலே கட்டிக் கொண்டு, பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, தம்முடைய சீஷர்கள், நீதியின் பாதையில் தம்மை பின்பற்றி ராஜ்யத்தை சுதந்தரிக்கும்படி அவர்கள் பாதங்களை கழுவினார் (யோவான் 13:1-5).  இன்றைக்கு இயேசு உங்கள் பாதங்களை கழுவ விரும்புகிறார். உங்கள் பாதங்களை அவரிடம் கொடுங்கள்; உங்கள் இருதயத்தை அவரிடம் கொடுங்கள். நீங்கள் அவருடன் நடக்கும்படி, உலகப்பிரகாரமான எல்லா காரியங்களையும் அவர் கழுவி அகற்றட்டும்.

இரண்டாவதாக, உங்கள் பாதங்கள் சமாதானத்தினால் நிறைந்தவையாக இருக்க வேண்டும். வேதம், "சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்" என்று கூறுகிறது (எபேசியர் 6:15). "யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே" (எபிரெயர் 12:14)என்றும் கூறுகிறது. குறிப்பாக, இல்லறத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சமாதானம் அவசியமாயிருக்கிறது. அது ஒருவர் பாரத்தை ஒருவர் எந்த நிலையிலும் சுமப்பதற்கு தாழ்மையோடு இருக்கும் இயேசுவின் சுபாவத்தை குறிக்கிறது.  அது மன்னிப்பதற்கு, மன்னிப்பு கேட்பதற்கு, உறவில் ஒருமனதை பேணுவதற்கு தைரியத்தை தருகிறது. இல்லறத்தில் சமாதானம் இருக்கும்போது அது பிள்ளைகளிடம் பிரதிபலிக்கும். உங்கள் பிள்ளைகளின் சமாதானம் பெரிதாயிருக்கும். உங்கள் சகபணியாளர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், விரோதிகளிடம் கூட சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள். "ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்" (நீதிமொழிகள் 16:7)என்று வேதம் கூறுகிறது. உங்கள் நிலத்தை எடுத்துக்கொண்டார்கள் என்று யார் மேலாவது கோபத்துடன் இருக்கிறீர்களா? பணத்தை எடுத்துக்கொண்டு திரும்ப தரவில்லையா? உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வை தடுக்கிறார்களா? உங்களுக்கு எதிராக வேலை செய்கிறார்களா? அவர்களை மன்னியுங்கள்; நேசியுங்கள். அதுவே சமாதானத்தின் பாதை. இயேசு, "உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே" (லூக்கா 6:29)என்று கூறுகிறார். அப்போது உங்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். நீங்கள் உங்கள் சுதந்தரத்திற்குள் பிரவேசிக்கலாம். உங்களுக்கு விரோதமான காரியங்களைச் செய்கிறவர்கள், உங்களுக்கு ஐசுவரியத்தை தருவதில்லை. மற்றவர்களிடமிருந்து பெறும் பணத்தால் நீங்கள் ஐசுவரியவான்களாவதில்லை. தேவன் தருவது மட்டுமே உங்களை ஐசுவரியவானாக்கும். கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும். ஆகவே, சமாதானமே தேவன் உங்களுக்கு ஆயத்தம் செய்திருக்கிற இடத்தை சுதந்தரிக்க உதவும் என்பதை மறந்துபோகாதீர்கள்.

மூன்றாவதாக, வசனத்தின்படி நடக்கவேண்டும். "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங்கீதம் 119:105). எல்லாவற்றையும் வேத வசனத்தின்படி செய்யுங்கள். அதை வாசியுங்கள்; கடைப்பிடியுங்கள்; உங்களுக்கு அது பாதை காட்டட்டும். நீங்கள் அதன்படி நடந்து தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரிக்கும்படி இன்று இந்த வார்த்தை உங்களுக்கு வருகிறது.

நான்காவதாக, சுவிசேஷத்தை அறிவியுங்கள். "நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து ...சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன" (ஏசாயா 52:7). இயேசுவே இரட்சகர், பரிகாரி, அருளிச்செய்கிறவர் என்று நீங்கள் அறிவித்து, தேவையில் உள்ளவர்களுக்காக ஜெபியுங்கள். தேவன் உங்கள் கால்களை உயரமான ஸ்தலங்களுக்கு உயர்த்துவார். வேதம், "பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி... உன்னைப் போஷிப்பேன்" (ஏசாயா 58:14)என்று கூறுகிறது.

தேவன் எங்களுக்கு செய்ததை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பத்திலும், ஊழியத்திலும் நாங்கள் பெருங்கடனில் இருந்தோம். ஆனால், ஆண்டவர் எங்களுக்கு, தனிப்பட்ட முறையிலும், இயேசு அழைக்கிறார் ஊழியத்திலும் உங்களுக்குக் கிடைக்கும் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை மற்ற ஊழியங்களுக்குக் கொடுங்கள். அப்படி, ஒவ்வொரு மாதமும் நாங்கள் கொடுக்க வேண்டியவற்றுக்கு முன்னர் எல்லா நன்கொடைகளிலும் பத்தில் ஒரு பங்கை சபைகளை தாங்குவதற்கும், போதகர்களை பராமரிப்பதற்கும், சீஷாவின் மூலம் ஏழைகளை தாங்குவதற்கும் கொடுப்போம். நாங்கள் கொடுத்ததும், தேவன் அதை அற்புதவிதமாக அருளிச்செய்வார். ஒன்றரை ஆண்டுகளில் எங்கள் கடன்கள் எல்லாவற்றையும் அடைக்கவும், பெருவாரியான மக்களை ஊழியத்தின் மூலம் சந்திக்கவும் முடிந்தது. இன்றைக்கும்  கூடவோ, குறையவோ இல்லாமல் சரியாக ஊழியத்தின் தேவைகளை நிறைவேற்ற போதுமானது இருக்கிறது. நான் ஒருமுறை போதகர் குழு ஒன்றிடம், உங்கள் சபை காணிக்கைகளில் பத்தில் ஒரு பங்கை ஆலயத்தை கட்டி வரும் இன்னொரு சபைக்குக் கொடுங்கள்; சுவிசேஷ, ஜெப ஊழியங்களுக்குக் கொடுங்கள்; ஏழைகளை பராமரிக்கிற ஊழியங்களுக்குக் கொடுங்கள். அப்போது தேவன் உங்கள் சபையை ஆசீர்வதிப்பார். நீங்கள் பெருகுவீர்கள். ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் உங்கள் பராமரிப்புக்குள் வருவார்கள். நீங்கள் காலடி வைப்பீர்கள்; தேவன் அந்த இடத்தை உங்களுக்குத் தருவார். ஒருவனும் அதை உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாது. யாரும் அதை அசைக்க முடியாது. நீங்கள் பெலத்திருப்பீர்கள். தேவனால், இயேசு அழைக்கிறார் ஊழியம் கிருபையாக அப்படித்தான் 63 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்தாபிக்கப்பட்டது. தேவன் உங்களுக்கும் அப்படியே உதவி செய்வார்.

ஜெபம்:
அன்பான பரம தகப்பனே, நான் கால் மிதிக்கும் இடம் எல்லாவற்றையும் எனக்கு தருவேன் என்று வாக்குக்கொடுத்திருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இன்று என்னை பின்னாக பிடித்திருக்கும் பயம், பாவம், சந்தேகம் எல்லாவற்றையும் உம்மிடம் உயர்த்துகிறேன். தயவாய் என் இருதயத்தை சுத்திகரியும்; இயேசு, தம் சீஷர்களின் கால்களை கழுவியவண்ணம், என் கால்களை சுத்தம்பண்ணும். உம்முடன் பரிசுத்தத்திலும் சமாதானத்திலும் நடப்பதற்கு என்னை ஆயத்தப்படுத்தும். உம்முடைய வார்த்தை என்னை வழிநடத்துவதாக; நான் செல்லுமிடமெங்கும் உம்முடைய இரட்சிப்பின் செய்தியை அறிவிக்க எனக்கு உதவும். எல்லாரையும் மன்னிக்கவும், கசப்புகளை அகற்றிவிடவும், சமாதானமாயிருக்கவும் எனக்கு உதவி செய்யும். என் வாழ்க்கை பயணத்தை உம்மிடம் ஒப்படைக்கிறேன். ஆசீர்வாதமான இடத்துக்குள் என்னை வழிநடத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.