“நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.” இந்த வசனத்தின்படி உங்கள் வாழ்க்கையிலும் எல்லாம் கூடும். இன்றைக்கு நீங்கள் இனி எதுவுமே முடியாது என்று நினைக்கலாம். நீங்கள், "முன்னேறிச் செல்ல எனக்கு வழியே இல்லை. எல்லா வாசல்களும் அடைபட்டிருக்கிறது. இழப்பின்மேல் இழப்பை அடைகிறேன். வேதனையே வாழ்க்கையாகிவிட்டது. எவ்வளவு நாள் இந்த வேலைக்குப்போக முடியும் என்று தெரியாது. எவ்வளவு நாள் இந்த பிரச்னையோடு குடும்பத்தை நடத்துவேன் என்று தெரியவில்லை," என்று சொல்லலாம். ஆனாலும், பயப்படாதீர்கள். இயேசுவை விசுவாசியுங்கள். மனுஷரால் கூடாதவை தேவனால் கூடும். அவர் வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி, எல்லாவற்றையும் கூடப்பண்ணுவார் (மாற்கு 9:23). இதுவே இன்று தேவன் உங்களுக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தம்.

ஜூலி என்ற சகோதரியின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். பிறந்ததிலிருந்து அவர்களுக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்தது. வளர வளர நிலைமை மோசமானது. பெற்றோர், அவர்களை அநேக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றார்கள். அநேக மருந்துகள் சாப்பிட்ட பிறகும் குணம் கிடைக்கவில்லை. படிப்பும் பாதிக்கப்பட்டது. 2007ம் ஆண்டு அவர்களுக்கு 15 வயதாயிருந்தபோது இட்டாநகரில் (அருணாச்சல பிரதேசம்) இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை திருவிழா நடந்தது. பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். வியாதிப்பட்டிருந்தவர்களுக்காக அன்று ஜெபிக்க ஆண்டவர் உதவினார். ஒருவர் வந்து, "எனக்கு ஆஸ்துமா இருந்தது. இப்போது நான் குணமாகியிருக்கிறேன். விடுதலையாக உணர்கிறேன்," என்று சாட்சி கூறினார். இந்தச் சாட்சியைக் கேட்டுக்கொண்டிருந்த ஜூலியின் இருதயத்தில் விசுவாசம் வலுப்பெற்றது. அவர்களும் என்னோடு இணைந்து ஜெபித்தார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது வந்தார். ஆண்டவர் தன்னை தொடுவதை அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களுடைய மூச்சுப்பிரச்னை காணாமற்போனது. அவர்களால் சுவாசிக்க முடிந்தது. ஆரோக்கியம் மேம்பட்டதால் மருத்துவர்கள் மருந்துகளை நிறுத்தினார்கள். தேவ கிருபையால் அவர்கள் நல்ல மதிப்பெண்களோடு பட்டம் பெற்றார்கள். 18 ஆண்டுகளுக்கு பின்னரும், "நான் பரிபூரண குணம் பெற்றிருக்கிறேன்," என்று சாட்சி கூறுகிறார்கள். அவர்களுக்கு திருமணமாகி, அழகிய மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய 'கூடாது' என்ற நிலையை, பரிபூரண சுகத்தைக் கொடுத்து 'கூடும்' என்று தேவன் மாற்றியுள்ளார். உங்களுக்கும் அப்படியே செய்வார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னுடைய பெலவீனத்தின் மத்தியில், போராட்டங்களோடு, எந்தப் பாதையில் செல்வது என்று தெரியாமல் உம் முன்னே வருகிறேன். ஆனாலும் இன்று உம்மை விசுவாசிக்க முடிவுசெய்துள்ளேன். உம்மால் எல்லாம் கூடும் என்று விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, நீர், "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்," என்று சொல்லியிருக்கிறீர். இந்த வாக்குத்தத்தத்தை நம்புவதற்கு எனக்கு உதவி செய்தருளும். எந்த இடங்களில் இழப்பு ஏற்பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் மீட்பை கொண்டு வாரும். எங்கெல்லாம் வேதனை இருக்கிறதோ அங்கெல்லாம் சமாதானத்தை கொண்டு வாரும். எங்கெல்லாம் காரியங்கள் கூடாது என்று காணப்படுகிறதோ, அந்த இடங்களிலெல்லாம் உம்முடைய அற்புதங்களைச் செய்யும் வல்லமையை எனக்குக் காண்பியும். என்னுடைய பயங்களை, என்னுடைய வேலை, என்னுடைய குடும்பம், என்னுடைய எதிர்காலம் என்று எல்லாவற்றையும் உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன். உம்முடைய கிருபை என்னை தாங்கி, என்னை வழிநடத்துவதாக. ஆண்டவரே, மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.