அன்பானவர்களே, இன்றைக்கு உங்களோடு தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு அவர் வாக்குப்பண்ணின ஆசீர்வாத மழையை, இன்று நாம் ஆண்டவரிடமிருந்து  பெற்றுக்கொள்வோம் அவருடைய வாக்குத்தத்தம், "கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்" (சங்கீதம் 3:3).

நான் ஒரு வீடியோவைப் பார்த்துக்கொண்டிருந்தேன் அது சூப்பர்ஹீரோவை எனக்கு ஞாபகப்படுத்தியது. அந்த சூப்பர்ஹீரோ, தன்மேல் விழும் அடி எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் வலிமை பெற்றிருப்பார். எல்லா அடிகளையும் தாங்கிக்கொள்ளக்கூடிய வலிமை. விரோதிகள் குத்துவார்கள்; அடிப்பார்கள். ஆனால் திடீரென்று ஒரு சக்தி மண்டலம் அங்கு வரும். அவர், எதிரிகள் தன்மேல் அடிக்கும் எல்லா அடியையும் அப்படியே உட்கிரகித்துக் கொள்வார். பிறகு அனைத்து அடிகளையும் அவர் பலமடங்காக பெருக்குவார்; அவர்களுக்கே திரும்ப கொடுப்பார். பகைவர்களால் அதை தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே, அவர்கள் முழுவதும் அழிந்து போவார்கள். ஆம், அன்பானவர்களே, நம்முடைய வாழ்விலும் ஆண்டவர் அவ்வாறுதான் செயல்படுகிறார். அவர் தமது கிருபையால் நம்மை மூடுகிறார். பகைவர்கள், சத்துருக்கள் கொண்டு வருகிற எதுவும் உங்கள் வாழ்க்கையை அழிக்க முடியாது. அவற்றை அவர் ஏற்கனவே தம்மீது ஏற்றுக்கொண்டார். ஆனால், அழிவுக்குப் பதிலாக மகிமை உங்களுக்கு வரும். நீங்கள் எதிர்கொள்ளும், எல்லாவற்றிற்கும் கடைசியில் நீங்கள் மகிமையை பெற்றுக்கொள்வீர்கள். அனைத்தும் ஆசீர்வாதங்கள்! ஆண்டவருடைய மகிமை உங்கள் மீது உதிக்கும். அவர் உங்கள் தலையை உயர்த்துவார். 

ஆகவே, நீங்கள் இப்போது கடந்து சென்று கொண்டிருக்கும் பாடுகளைக் குறித்துக் கலங்காதீர்கள். நீங்கள் அடிக்கப்படலாம். அந்த சூப்பர்ஹீரோவைபோல, நீங்கள் தாங்கிக்கொள்ளும் ஒவ்வொரு அடிக்கும் ஆண்டவர் பெரிய ஆசீர்வாதத்தை, பெரிய மகிமையை உங்களுக்குத் தருவார். அதைத்தான் பவுல் ரோமர் 8ம் அதிகாரத்தில் பகிர்ந்து கொள்கிறார். நாம் அவருடைய பாடுகளில் பங்காளிகளானதால், மகிமையிலும் பங்காளிகளாவோம் என்று அவர் கூறுகிறார். நீங்கள் இதுவரை ஜெபித்த எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லுகிறீர்களா? மேலும் மேலும் பாடுகள் வழியாக கடந்து செல்ல வேண்டியது இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இந்தப் பாடுகளைக் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். ஏனென்றால், நீங்கள் சகிக்கிற எல்லாவற்றையும் ஆண்டவர் நினைவு வைத்து உங்கள் வாழ்க்கையில் பெரிய மகிமையைத் தருவார். மகிமை வருகிறது. ஆகவே பொறுமையாக இருங்கள். அவர் மீது நம்பிக்கையாக இருங்கள். ஆண்டவர் ஏற்கனவே உங்கள் ஜெபத்தைக் கேட்டுவிட்டார். அவர் உங்களுக்கு மகிமையான எதிர்காலத்தைத் தருவார். சில வேளைகளில் நாம் பாடுகளை அனுபவித்து, சகித்துக் கொண்டிருப்போம்; பெரிய மகிமை காத்திருக்கிறது என்ற நம்பிக்கையில் அதை கடந்து செல்ல வேண்டும். ஆண்டவருக்கு மீண்டும் ஒரு முறை உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக அர்ப்பணிப்பீர்களா?

ஜெபம்
அன்புள்ள ஆண்டவரே, இன்றைக்கு நீர் எனக்கு கேடகமாகவும், மகிமையாகும், என் தலையை உயர்த்துக்கிறவராகவும் இருக்கிறீர் என்று கொடுத்த வாக்குத்தத்தத்தை நம்பி, உம் முன்னே வருகிறேன். என் வாழ்க்கையில் பாடுகள் சூழ்ந்திருக்கும்போது, சத்துரு அனுப்பும் எதுவும் என்னை சேதப்படுத்தாது என்று எனக்கு நினைவுப்படுத்தும். எல்லா சுமைகளையும் உம்மீது ஏற்றுக்கொண்டு என்னை மகிமையினாலும் கிருபையினாலும் மூடியிருக்கிறீர். இந்த காத்திருக்குதலின் காலத்தில் என்னுடைய இருதயத்தை ஸ்திரப்படுத்தும். உம்மீது நம்பிக்கையாக இருக்கவும், பொறுமையாக இருக்கவும், இந்த பாடுகளை தோல்வியாக எண்ணாமல் தெய்வீக வெற்றிக்கான படியாக எண்ணவும், எனக்கு கற்பித்தருளும். என்னுடைய வாழ்க்கையை மறுபடியுமாக உம்முடைய அன்பின் கரங்களில் ஒப்படைக்கிறேன். என்னுடைய பலத்தினால் அல்ல; உம்முடைய பிரசன்னத்தினாலும் உம்முடைய உயரிய நோக்கத்தினாலும் என் தலை உயர்த்தப்படட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.