எனக்கு அருமையானவரே, "நீங்களோ ... தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1 பேதுரு 2:9) என்று வேதம் கூறுகிறது. இது உங்களுக்கான தேவனுடைய வாக்குத்தத்தம். ஆண்டவர் இயேசு, "நீங்கள் என்னை தெரிந்துகொள்ளவில்லையே; நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்," என்று கூறுகிறார். அவர் உங்களை உருவாக்கினார்; உங்கள் தாயின் கர்ப்பத்தில் எலும்புகள் எப்போது உருவானது என்றும் அவர் அறிந்திருக்கிறார். "நான் பயனற்றவன்(ள்)," என்றும், "எல்லோரும் என்னை மறந்துவிட்டார்கள்," என்று கூறாதிருங்கள். "நான் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரம். நான் தேவனுடைய திட்டத்துடன் இணைந்திருக்கிறேன். இந்த உலகத்தில் நான் தனியே இல்லை," என்று சொல்லுங்கள்.

தேவனின் கரம் இன்றைக்கு அதிக கனிகளைக் கொடுக்கும்படி உங்களை வழிநடத்தும். இரண்டாவதாக, நீங்கள் ராஜரீக ஆசாரியக் கூட்டமாக இருக்கிறீர்கள். உங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கான முடிவுகள் பரலோகத்தில் எடுக்கப்படுகின்றன. நீங்கள், மற்றவர்களுடைய கண்ணீரை துடைக்கும்படி தேவனுடைய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறீர்கள். மூன்றாவதாக, உங்களை தேவன் பரிசுத்த ஜனமாக்கியிருக்கிறார். தேவனுக்கும் மனுஷனுக்கும் முன்பாக பரிசுத்தமாக்குகிறார். கண்களின் இச்சை; மாம்சத்தின் இச்சை;  ஜீவனத்தின் பெருமை எதுவும் உங்களைத் தொட முடியாது. தேவனுக்கு முன்பாக, ஏற்கத்தக்க, பரிசுத்த ஜீவபலியாக உங்கள் சரீரத்தை அர்ப்பணிக்கும்போது, பரிசுத்தத்தில் நடப்பீர்கள். நீங்கள் பரிசுத்த ஜனம், தேவனுடைய விசேஷித்த சம்பத்து. அவர் ஒருபோதும் உங்களை விட்டு விலகமாட்டார். ஒருபோதும் கைவிடமாட்டார். எப்போதும் உங்களோடிருப்பார். நீங்கள் அவருடைய சம்பத்து. சில பிள்ளைகள் தங்கள் பைகளை ஒருபோதும் விட்டு விலகமாட்டார்கள். மற்றவர்களிடம் கொடுக்க மாட்டார்கள். அவர்கள், "இது என்னுடைய பை. உள்ளே என் பென்சில் இருக்கிறது," என்று சொல்வார்கள். அதேவண்ணமாக, தேவன் நமக்காக போராடுகிறார். நீங்கள் அமைதியாக இருந்தால்போதும். நீங்கள் தமது சம்பத்தாக இருக்கிறபடியால், ஆண்டவர் உங்களுக்காக யாவற்றையும் செய்து முடிப்பார். பயப்படாதிருங்கள்.

அருமையான சாட்சி ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஔரங்கபாத் (மகாராஷ்டிரா) என்ற ஊரில் லட்சுமணன் - அல்கா தம்பதியர் வசிக்கின்றனர். லட்சுமணனுக்கு வேலையில்லை; ஆகவே அவர் செக்யூரிட்டியாக வேலை பார்த்தார். தினமும் நூறு ரூபாய்தான் ஊதியம். அவர்களுக்கு ஓர் அழகிய மகள் இருந்தாள். அவள் பெயர் பிரீத்தி. பிரீத்தியின் முதல் பிறந்தநாளை கொண்டாடியபோது, சாப்பாடு வாங்குவதற்காக வெள்ளிச் சங்கிலியை விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சகோ. லட்சுமணன் கண்ணீரோடு ஜெப கோபுரத்திற்குச் சென்று ஜெபித்தார். ஒரு ஜெப வீரரும் அவருடன் இணைந்து ஜெபித்தார். பின்னர் அவருக்கு ஆரம்பப் பள்ளி ஒன்றில் அரசு வேலை கிடைத்தது. அவர் நன்றியால் நிரம்பினார். குடும்ப ஆசீர்வாதத் திட்டத்தில் குடும்பத்தை இணைத்தார். தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பொருளாதார பிரச்னைகள் எல்லாம் அகன்றன. இரண்டாவது ஒரு குழந்தைக்காக அவர்கள் முயற்சித்தனர். ஆனால், பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டது. கரிய, நிழலுருவங்கள் அவர்களை தாக்க வரும். அவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போவார்கள். குழந்தை, கருவிலேயே அழிந்துபோகும். அப்போது ஔரங்காபாத்தில் இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை திருவிழா ஒன்று நடந்தது. சகோதரி இவாஞ்சலின் ஜெபித்தபோது, சகோதரி அல்காவை விட்டு ஒரு கரிய உருவம் வெளியேறியது. தெய்வீக சந்தோஷம் அவர்களை நிறைத்தது. அவர்கள் கருத்தரித்தார்கள். தேவன், ஆரோக்கியமான ஆண் குழந்தையை கொடுத்தார். இன்றைக்கு அவர்களுக்கு ஒரு பெண்ணும் ஓர் ஆணும் இருக்கின்றனர். தேவன் அவர்கள் வீட்டைக் கட்டினார். ஆச்சரியவிதமாக அவர்கள் வீட்டில் மட்டும் தெளிவான, சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. அக்கம்பக்கத்தார் அனைவரும் தண்ணீர் எடுக்க இவர்கள் வீட்டுக்கு வருவார்கள். அவர்கள் ஆசீர்வாதமாக, தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாக, ராஜரீக ஆசாரிய கூட்டமாக, பரிசுத்த ஜனமாக, தேவனுடைய சம்பத்தாக இருக்கிறார்கள். இதைப்போன்ற ஆசீர்வாதத்தை தேவன் உங்களுக்கும் தருவாராக.

ஜெபம்:
பரம தகப்பனே, நான் யார் என்பதற்காக அல்ல; ஆனால், உம்முடைய மகத்துவமான அன்பினிமித்தமாக என்னை தெரிந்துகொண்டதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீரே என்னை உருவாக்கினீர்; நீர் என்னை அறிந்திருக்கிறீர்; என் வாழ்வில் ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறீர். நான் மறக்கப்பட்டதாக, தகுதியில்லாதவனா(ளா)க உணர்ந்தாலும், உம்முடைய வல்ல கரங்களில் நான் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாக இருக்கிறேன் என்பதை நினைவுப்படுத்தும். என்னை கனிகொடுக்கிறவனா(ளா)க்கும். என்னுடைய அடிகளை, முடிவுகளை பரத்திலிருந்து வழிகாட்டும். ராஜரீக ஆசாரியக்கூட்டமாக நான் விளங்கி, என்னை சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு நம்பிக்கையை, சுகத்தை, உம்முடைய திட்டத்தை கொண்டு வர உதவும். என்னுடைய சரீரத்தை பரிசுத்தமும் ஏற்றுக்கொள்ளவும்தக்கதான ஜீவபலியாக அன்றாடம் அர்ப்பணிக்க உதவி செய்யும். கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையும், எந்த சோதனையும் என்னை அண்டாதிருக்கட்டும். எனக்காக யாவற்றையும் செய்து முடித்தருளும்; உம் கரம் எந்நாளும் என்மேல் இருப்பதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.