அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். "அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும்" (ஏசாயா 30:15) என்ற வசனத்தை இன்றைக்கு தியானிப்போம். ஆம், அநேகவேளைகளில் வாழ்க்கையில் நாம் பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது, கடினமான சூழ்நிலையாக இருக்கட்டும்; நகர்த்த முடியாத பெரிய மலைபோன்றதாக இருக்கட்டும், அதை மேற்கொள்வதற்கு அதிகமாய் பிரயாசப்படுவோம். நாம் அழுவோம், முறுமுறுப்போம், தெரிந்தவர்களிடமெல்லாம் புலம்புவோம், உதவிக்காய் இங்கும் அங்கும் தேடுவோம், சமாதானத்தை இழந்துபோவோம். இதேபோன்ற சூழ்நிலையை வேதாகமத்தில் தேவன் யோசுவாவுடன் பேசும்போது பார்க்கிறோம். இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிச் செல்லும்போது எரிகோ பட்டணத்தை கடக்கவேண்டியதாயிற்று. ஆனால் எரிகோவில் மதில்கள் அவர்கள் கடந்துசெல்லக் கூடாத அளவு உயரமாக இருந்தன. அவர்கள் என்ன செய்திருக்கக்கூடும்? அவர்கள் சத்தம் போட்டிருக்கலாம்; தங்கள் இராணுவத்தையெல்லாம் கொண்டு வந்திருக்கலாம், மதிலை இடிப்பதற்கு முயற்சி செய்திருக்கலாம்.
ஆனால், தேவன் அமைதியாக ஆறு நாட்கள் எரிகோவை சுற்றி வரும்படி கூறினார். அவர்களுக்கு இது வித்தியாசமாக தோன்றியிருக்கலாம். அந்தப் பட்டணத்தை ஜெயிக்கப்போகிறோம் என்பது தெரிந்தும் தேவன் நம்மை ஏன் அமைதியாக இருக்கும்படி கூறுகிறார் என்று அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால், தேவன் யோசுவாவுக்குக் கட்டளையிட்டதுபோல, அவன், "நான் சொல்லும் நாள்மட்டும், நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள்; உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக," என்று கூறினான் (யோசுவா 6:10). மோசேயின் தலைமையின் கீழ் இருந்ததினால், இஸ்ரவேல் மக்கள் என்ன செய்வார்களென்று அறிந்திருப்பான். அவர்கள் சொந்த பெலனை சார்ந்திருந்து ஆர்ப்பரித்திருந்தால் அல்லது சுய ஞானத்தை நம்பியிருந்தால் அவர்களால் பட்டணத்தை கைப்பற்ற முடியாமல் போயிருந்திருக்கும். அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அமைதியாக பட்டணத்தை ஆறு நாட்கள் சுற்றி வந்தபின்னர், ஏழாம் நாளில் யோசுவா கட்டளையிட்டதுபோல ஆர்ப்பரித்தபோது எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்தன. அவர்கள் கர்த்தரிடமிருந்து பலனை பெற்றுக்கொண்டார்கள்; அவரை நம்பினார்கள்; மதில்கள் விழுந்தன.
உங்கள் வாழ்க்கையிலும் தேவன், "நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்" (சங்கீதம் 46:10) என்று கூறுகிறார். அவர் உங்களுக்கு எல்லாவற்றையும் செய்வார். ஆகவே, அவர் கூறுவதை கவனியுங்கள்; இக்கட்டானவேளையில் அவரது சமாதானத்தை பெற்றுக்கொள்ளுங்கள். அமைதலாயிருங்கள்; அவரை நம்புங்கள்; அதுவே உங்கள் பெலனாயிருக்கும். நம்முடைய குடும்பத்தில் இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்லும்போது, மனிதர்களாக, உதவியை தேடுவோம் அல்லது நம் பெயரை சுத்தப்படுத்திக்கொள்ளப் பார்ப்போம் அல்லது நியாயத்தை பெற முயற்சிப்போம். ஆனால் தேவன் நமக்கு அமைதலாயிருக்கவும் அவரை நம்பவும் எப்போதும் கற்பித்திருக்கிறார். அந்தச் சூழ்நிலையிலிருந்து நம்மை வெளியே கொண்டு வருவது எப்படி என்பது அவருக்குத் தெரியும். ஏதோ ஒரு காரணத்துக்காக காரியங்கள் நடப்பதற்கு அவர் அனுமதிக்கிறார். முடிவில் அவரது சமாதானமே நம் பெலனாயிருக்கும்; அவரது நாமம் நம் மூலமாக மகிமைப்படும். ஒவ்வொரு முறையும் நாம் ஏதாவது ஒன்றின் வழியாக கடந்துசெல்லும்போது தேவன் தமது சமாதானத்தை நமக்குக் கொடுத்து தம்மை மாத்திரம் நம்பும்படி கூறுவார். எந்த மனிதனோ, எந்த உறவினரோ, நெருங்கிய நண்பரோ அல்ல, தேவனே அப்படி கூறுவார். மறுபடியும் மறுபடியும் வெற்றியை தருவார். ஆகவே, இன்று கடினமான ஏதாவது காரியத்தை எதிர்கொண்டீர்களானால், அமைதியாக இருங்கள்; ஆண்டவர்மேல் நம்பிக்கையாயிருங்கள். உங்கள் வாழ்க்கையை அவர் ஆளுகை செய்கிறார் என்பதையும், அவரது சமாதானமே உங்கள் பெலன் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இந்த அமைதியான தருணத்தில் நம்பிக்கையுள்ள இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். உம்முடைய சமுகத்தில் இளைப்பாறுதல் காணவும், என்னுடைய சொந்த முயற்சிகளில் அல்லாமல் உம்மீது அமரிக்கையாயிருந்து, திடநம்பிக்கை கொண்டு பெலனடையவும் எனக்குக் கற்பித்தருளும். என்னை சுற்றிலும் இருக்கும் மதில்கள் பெரியவையாயிருப்பதால் வாழ்க்கை மலைப்பாய் தோன்றும்போது, உம்முடைய வழிகள் எப்போதும் உயர்ந்தவை என்பதை மறவாமல் இருக்க எனக்கு உதவும். நீர் என்னை காத்திருக்கக்கூறும்போது அமைதி காக்கவும், எவ்வித அடையாளமும் இல்லாதிருக்கும்போது நீர் கிரியை செய்துகொண்டிருக்கிறீர் என்று விசுவாசிக்கவும் எனக்கு உதவி செய்யும். உம்முடைய சமாதானம் என் இருதயத்தில் ஆளுகை செய்யட்டும், எல்லா உபத்திரவங்களிலும் வழிநடத்தட்டும். என் வாழ்க்கை, வெற்றிகளின்போது மட்டுமல்ல, அர்ப்பணிப்போடு அமர்ந்திருக்கும்போதும் உம்மை மகிமைப்படுத்தட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.
அமர்ந்திருங்கள், மதில்கள் எல்லாம் விழுந்துபோகும்
