அன்பானவர்களே, ஒவ்வொரு நாளும் தேவன் புதிய இரக்கத்தைக் கொடுக்கிறார். இன்றைக்கு நாம் நம்மை தாழ்த்தி, "ஆண்டவரே, தயவாய் என்னிடம் பேசும்," என்று அவரிடம் கேட்போம். அவர் இரக்கமிகுந்தவராய் சந்தோஷத்துடன் உங்களிடம் வருகிறார். "நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்" (ஏசாயா 25:4) என்று வேதம் கூறுகிறது. இன்றைக்கு உங்கள் சூழ்நிலையை, உதவியற்ற நிலையை அவர் காண்கிறார். ஆதரிப்பதற்கு, உற்சாகப்படுத்துவதற்கு, உதவி செய்வதற்கு, வேண்டியவற்றை கொடுப்பதற்கு யாருமில்லாத நிலையில் அநாதையைப் போல உணருகிறீர்களா?

எந்தவித ஆதரவுமில்லாத நிலையில் நீங்கள் இருப்பதை தேவன் காண்கிறார். நாம், "வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்" (சங்கீதம் 121:2) என்று மாத்திரமே கூறவேண்டும். அவரே உங்களுக்கு அரணான கோட்டையாவார். உதவியற்றவர்களுக்கு அவரே அடைக்கலமுமாவார். இயேசு, வழியருகே வழிப்பறி செய்யப்பட்டு, காயமுற அடிக்கப்பட்ட மனிதனின் கதையைக் கூறினார். அவனிடமிருந்து எல்லாமும், வஸ்திரங்கள் கூட பறித்துக்கொள்ளப்பட்டன. அவன் குற்றுயிராக விடப்பட்டான். அந்த வழியே வந்த ஆசாரியன் கவனிக்காமல் விலகிச் சென்றான். தொடர்ந்து வந்த லேவியனும் உதவி செய்யவில்லை. ஆனால் சமாரியன் ஒருவன் அவனை கண்டு உதவிக்கு ஓடி வந்தான். அவனுடைய காயங்களைக் கட்டி, சத்திரத்துக்கு எடுத்துச்சென்றான்; இளைப்பாற வைத்தான்.

அவ்வண்ணமே தேவன், "நான் சகாயம்பண்ணுவேன்," என்கிறார். நீங்கள் முன்பு உதவி செய்தவர்கள் எல்லோரும் வியாதியின் நேரத்தில் முகம் பாக்காமல் இருப்பதால் நீங்கள் தனிமையாக உணரலாம். ஆண்டவரை நோக்கிப் பாருங்கள். அவர், "ஆபத்துக்காலத்தில் நானே உதவி செய்வேன். நானே சகாயம்பண்ணுவேன்," என்கிறார். சிலவேளைகளில் உதவியற்ற நிலையை நம்மை உணர வைப்பார்; அவர்தாமே சகாயம்பண்ணி, அவரையே சார்ந்துகொள்ளும்படி செய்வார். சமாரியனைப்போல, அதிசயமானவிதத்தில் உதவியை அனுப்புவார். இன்றைக்கு தேவன் அனுப்பும் உதவி வரும்; கவலைப்படாதீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் கைவிடப்பட்டதாக, கண்டுகொள்ளாமல் விடப்பட்டதாக, மலைப்பாக உணருகிற தருணங்களில் அரணிப்பான கோட்டையும் அடைக்கலமுமான உம்மிடம் வருகிறேன். உதவியற்ற என் நிலையை பார்க்கிறீர்; நீர் ஒருபோதும் கண்டுகொள்ளாமல் இருக்கமாட்டீர். மற்றவர்கள் மறந்துபோகலாம்; ஆனால் நீரோ நினைவில் வைத்திருப்பீர். நல்ல சமாரியனைப்போல, நான் காயமுறும்போது என்னண்டைக்கு வாரும். என்னுடைய காயங்களைக் கட்டி, இளைப்பாறும் இடத்திற்கு என்னை கொண்டுசெல்லும். மனிதர்கள் உதவி செய்ய தவறும்போது, நீர் உதவி செய்கிறீர் என்பதை காண்பிப்பதற்காக, உம்மையே சார்ந்திருக்கப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய உம்மை நோக்கி என் கண்களை ஏறெடுக்கிறேன். உம்முடைய வேளையையும் உம்முடைய இரக்கத்தையும் உம்முடைய அதிசயமான வழிகளையும் விசுவாசிக்கிறேன். நீர் வாக்குப்பண்ணிய சகாயத்தையும் உம்முடைய அன்பையும் சமாதானத்தையும் இன்றைக்கு பெற்றுக்கொள்வேனென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.