அன்பானவர்களே, "நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு" (ரோமர் 12:21) என்று வேதம் கூறுகிறது. தீமைக்கு இன்னும் அதிகமான தீமையினால் பதில் செய்வதே நம் சுபாவம் என்பதால், இந்த வசனம் நம் முன்னே ஒரு சவாலை வைக்கிறது. "நான் திரும்பி வந்து உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன்," என்று நாம் அடிக்கடி நினைக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதுதான் நம்முடைய இயற்கையான சுபாவம்.

ஆனால், நாம் இயேசுவையே நோக்கிக் கொண்டிப்போமானால், மற்றவர்கள் நம்மை மோசமாக நடத்தும்போது அதை எப்படி எதிர்கொள்வது என்பதை அறிந்துகொள்ள முடியும். ரோமர் 12:19ம் வசனத்தில், பழிவாங்கவேண்டாம் என்று பவுல் கூறுகிறார். "பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார்" என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆகவே, தேவ கோபாக்கினைக்கு இடம் கொடுப்போம். மேலும், "உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்" என்று வேதம் கூறுகிறது. ஆண்டவர் நமக்கு எவ்வளவு அருமையாக போதிக்கிறார்! நம்முடைய எதிரிகளை எப்படி நடத்தவேண்டும் என்று ஆண்டவர் நமக்குக் காண்பிக்கிறார். "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள். உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" (மத்தேயு 5:44) என்று இயேசு கூறுகிறார். தீமைக்கு நன்மை செய்வது பெலத்தை வெளிக்காட்டும் சிறந்த முறையாகும். தீமைக்கு நாம் பதிற்செய்யும்போது, ஜனங்கள், "நீ பெலவீனமானவன்," என்று கூறுவார்கள். ஆகவே, தயவையும் பொறுமையையும் கொண்டு உங்கள் எதிரிகள்மேல் வெற்றிகொள்ளுங்கள். அப்படிச் செய்வதால் உங்கள் எதிரியை நண்பனாக்கிக்கொள்வீர்கள்.

தாவீது, சவுல் ராஜாவை இப்படியே மேற்கொண்டான். "அவனோ (ஸ்தேவான்) முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்" (அப்போஸ்தலர் 7:60) என்று வேதம் கூறுகிறது. நம்மில் அநேகருக்கு, இயேசுவே பின்பற்றத்தக்க நல்ல மாதிரியாக இருக்கிறார். ஜனங்கள் அவரை கேலி செய்தபோது, அவர் மாறுத்தரம் கூறவில்லை. அவர் மரணத்தை எதிர்கொண்டபோதும், "பிதாவே, தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறபடியினால் இவர்களை மன்னியும்," என்று பிதாவிடம் கூறினார். யாராவது உங்களுக்கு விரோதமாக தவறு செய்தால், அதை மன்னித்து மறந்துவிடுங்கள். பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொள்ளாதிருங்கள். அப்போது தீமையை மேற்கொண்டு, முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாக விளங்குவீர்கள். இப்படிச் செய்ய ஆண்டவர்தாமே உங்களுக்கு உதவுவாராக.

ஜெபம்:

அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய வசனத்தின் மூலம் என்னோடு பேசுகிறதற்காகவும், தீமையை நன்மையினால் வெல்லுவதற்கு போதிப்பதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்மையும் மற்றவர்களையும், என்னுடைய எதிரிகளையும்கூட நேசித்து அவர்களுக்காக ஜெபிக்கும்படியும், தொடர்ந்து நன்மை செய்யவும், என்னை சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்கவும் நீர் கட்டளை கொடுத்திருக்கிறீர். இவ்விதமான அன்பை நீர் என்னிடம் எதிர்பார்க்கிறீர். நீர் நேசிக்கிறவண்ணமாகவே நானும் ஜனங்களை நேசிப்பதற்கு எனக்கு உதவி செய்யவேண்டுமென்று ஜெபிக்கிறேன்.  என்னை புண்படுத்துகிறவர்கள் உள்பட எல்லோருக்கும் நன்மை செய்யும்படி என் இருதயத்தை அன்பினாலும் மனதுருக்கத்தினாலும் நிறைக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன். என் உள்ளத்திலிருந்து எல்லா கசப்பையும், மன்னிக்காத தன்மையையும் எடுத்துப் போடும்; உம்முடைய சமாதானம் என்னைச் சூழ்ந்துகொள்ளட்டும். உம்முடைய அன்பின் பிரசன்னத்தை நான் மற்றவர்கள் முன் பிரகாசிக்கப்பண்ணவும், தீமையை நன்மையினால் வெல்லவும் உதவி செய்யும். என் வாழ்நாளெல்லாம் உம்முடைய நன்மையும் கிருபையும் என்னை தொடரவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.