அன்பானவர்களே, "கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்" (சங்கீதம் 16:5) என்று தாவீது கூறும் வசனத்தை இன்றைக்கு தியானிப்போம். கர்த்தாவே நீர் எனக்கு அதிகமாய் உதவி செய்கிறீர். தாவீதைப்போல, "ஆண்டவரே, எல்லாவற்றுக்கும் மேலாக உமக்கே நான் முதலிடம் கொடுக்கிறேன். நீரே எனக்கு எல்லாமுமாயிருக்கிறீர். நீரே என் ஆசீர்வாதத்தின் பாத்திரமாயிருக்கிறீர்," என்று கூறுங்கள். தேவன் தனக்குக் கொடுத்தவற்றில் தாவீது அதிக திருப்தியடைந்தான். "தேவன் என் பங்காயிருக்கிறார்" என்று நீங்கள் சொல்லும்போது, அவர் எல்லாவற்றையும் தந்து உங்களை திருப்தியாக்குவார். ஆகவேதான் தாவீது, "நீர் ... என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது" (சங்கீதம் 23:5) என்று திடநம்பிக்கையுடன் அறிக்கை செய்கிறான். உங்கள் பாத்திரம் நிரம்பி வழியும்போது, நீங்கள், "ஆண்டவரே, போதும்; போதும்; போதும். நீர் மிகவும் அதிகமாய் என்னை ஆசீர்வதித்துவிட்டீர்," என்று கூறுவீர்கள்.
என்னுடைய பேத்தி, கேட்லின், "என் உள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே, இயேசுசென்னை இரட்சித்தார், நான் ஆடிப் பாடுவேன், எவருமறியாரே என் உள்ளம் பொங்குதே, என் உள்ளம் பொங்கி, பொங்கி, பொங்கி, பொங்கி வழியுதே" என்ற அழகான பாடலை பாடுவாள். அவள் அதை சத்தமாகப் பாடுவாள். அப்படிப்பாடும்போது, வீடு முழுவதுமே ஒரு புத்துணர்ச்சி நிறையும். அவ்வளவு சந்தோஷமாக அவள் பாடுவாள். நம் பாத்திரங்கள் தேவனால் நிரம்பும்போது இப்படி நடக்கும்.
"என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்" (சங்கீதம் 16:9) என்று தாவீது மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறான். நம் முழு சரீரமும் களிகூருகிறது. நம்முடைய சரீரப்பிரகாரமான உடலும் தேவ ஆசீர்வாதத்தினால் நிரப்பப்படும். உடலில் எந்த வியாதியும் வராது. நம் உள்ளம் களிகூரும். ஆம், நம்முடைய பாத்திரம் எப்போதும் தமது சந்தோஷத்தினால் நிறைந்திருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம், "ஆண்டவரே, நீரே என் பங்காயிருக்கிறீர். நீரே என் சுதந்தரமாயிருக்கிறீர்," என்று சொல்லவேண்டும். நாம் வெறுமையாய் உணரும்போது, "ஆண்டவரே, என் பாத்திரம் வெறுமையாயிருக்கிறது. என்னை உம்மால் நிரப்பும்," என்று சொல்லுங்கள். நம் பாத்திரத்தில் உலகம் ஒன்றையும் காணக்கூடாது. தேவன், உங்கள் பாத்திரத்தை தம்முடைய சந்தோஷத்தினால் நிரப்புவதற்கு விருப்பமாயிருக்கிறார். "தேவனுடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தம் உண்டு," என்று வேதம் கூறுகிறது.
இயேசு கானாவூர் திருமணத்திற்குச் சென்றிருந்தபோது, அவரது தாயார் அவரிடம், "திராட்சரசம் இல்லை," என்று கூறினார்கள். ஆகவே, இயேசு வேலைக்காரர்களை அழைத்து அங்கு காலியாக இருந்த ஆறு பெரிய ஜாடிகளையும் முழுவதும் நிரப்புமாறு கூறினார். வேலைக்காரர்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து அந்த ஜாடிகளை தண்ணீரால் நிரப்பியபோது, தண்ணீர் ருசியான திராட்சரசமாக மாறியது. இன்று நாமும் அவ்வாறே செய்யப்போகிறோம். இன்று உம்மால் உங்கள் பாத்திரங்களை நிரப்பும் என்று தேவனை கேட்போம். "ஆவியினால் நிறைந்து..." (எபேசியர் 5:18) என்று பவுல் கூறுகிறான். ஆகவே, உங்கள் பாத்திரத்தை தேவனிடம் கொடுங்கள்.
ஆண்டவர்தாமே தம்முடைய பிரசன்னத்தினால், தம்முடைய பெலத்தினால், தம்முடைய ஞானத்தினால், வழிநடத்துதலினால் உங்களை நிரப்புவாராக. ஆண்டவர்தாமே தம்முடைய நன்மையினால் உங்களை திருப்தியாக்குவாராக. "இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்" (சங்கீதம் 16:7) என்று தாவீது கூறுகிறான். இரவிலும்கூட அவன் தேவனிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்றான். அப்படித்தான் கர்த்தர் அவன் பாத்திரத்தை நிரப்பினார். கர்த்தருடைய களஞ்சியங்கள் ஒருபோதும் வெறுமையாயிருப்பதில்லை. அவர் ஒருநாளின் 24 மணி நேரமும் உங்கள் பாத்திரம் நிரம்பியிருக்கும்படி செய்வார். ஆகவே, உங்களை தேவனுக்கு அர்ப்பணித்திடுங்கள். உங்கள் எண்ணங்களை, உணர்வுகளை, சரீரத்தை, செய்கைகளை ஆளுகை செய்யும்படி அவரிடம் கேளுங்கள். "ஆண்டவரே, நான் கடந்த காலங்களில் செய்த எந்தக் காரியங்களாலும் திருப்தியடையவில்லை. என்னை உம்மால் நிரப்புவீராக," என்று கூறுங்கள். "எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது" (2 கொரிந்தியர் 3:5) என்று வேதம் கூறுகிறது. நம்முடைய சொந்த பெலனால் நமக்கு தகுதி கிடைக்காது. நம்முடைய தகுதி தேவனிடமிருந்து மாத்திரமே வரும். தேவனுடைய பரிபூரணத்தினால் நிரப்பப்படும்படி இப்போதே ஜெபியுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீரே என் பங்கும், சுதந்தரமும், என் பாத்திரமுமாயிருக்கிறீர். என்னை உம்மால் நிரப்பும். இந்த உலகக் காரியங்கள் அல்ல; நீர் மாத்திரமே என்னை நிரப்பவேண்டும். என் உள்ளம் உம் சமுகத்தில் களிகூரட்டும்; அது ஒருபோதும் சோர்ந்துபோகக்கூடாது. என் பாத்திரம் நிரம்பி வழியுமட்டும் எனக்குள் உம்முடைய ஆவியை ஊற்றும். உம்முடைய ஞானத்தால், பெலத்தால், நன்மையினால் என்னை திருப்தியாக்கும். என் எண்ணங்களை, உணர்வுகளை, நான் எடுத்து வைக்கும் அடிகளை நீரே வழிநடத்தும். என் சரீரத்தை பத்திரமாக காத்தருளும்; என் ஆத்துமா, நீர் அளிக்கும் சந்தோஷத்தில் இளைப்பாறட்டும். இரவும் பகலும் உம்முடைய பிரசன்னத்தால் என்னை புதிதாய் அபிஷேகித்தருளும். உம்மிடமிருந்து மாத்திரமே நான் நிறைவைப் பெற்றுக்கொள்கிறேன் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.