எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்" (லேவியராகமம் 26:11) என்று தேவன் கூறும் வசனத்தை தியானிப்போம். தேவன் நம் மத்தியில் வாசம்பண்ணுவது எத்தனை மகிழ்ச்சியான விஷயம்! ஆனால், எப்போது ஆண்டவர் நம் மத்தியில் வாசம்பண்ணும்படி வருகிறார்? ஆண்டவரை பிரியப்படுத்த அநேக வழிகள் உண்டு; அவற்றுள் எளிமையான, ஆனால் வல்லமையான வழி ஒன்று இருக்கிறது.
இயேசு, "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்" (யோவான் 14:23) என்று சொல்லுகிறார். அன்பானவர்களே, நீங்கள், ஆண்டவருடைய வார்த்தையை நேசித்து, அதை வாசிக்கவேண்டும். அன்றாடம் அதை உங்கள் முதல் வேலையாக வைத்துக்கொள்ளுங்கள். எழுந்தவுடன் வேதாகமத்தை திறந்து வாசியுங்கள்; வந்து உங்களை நிரப்பும்படி, உங்களோடு பேசும்படி அவரிடம் கேளுங்கள். "நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" (சங்கீதம் 32:8) என்று அவர் வாக்குக்கொடுக்கிறார். அனுதினமும் இயேசு நம்மோடு இருப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம்!
தேவனுடைய வார்த்தையை வாசிப்பதால், நீங்கள் அவரை கனம்பண்ணுகிறீர்கள்; உங்கள் நடுவில் வாசம்பண்ணுவதற்கு அவர் பிரியமாயிருப்பார். அதன்பிறகு, என்ன செய்வது அல்லது மக்களை எப்படி பிரியப்படுத்துவது என்று கவலைப்பட தேவையில்லை. பயங்கள் எல்லாம் அகன்று போகட்டும். நீங்கள் ஆண்டவரை நேசித்தால் அவர் உங்களோடு இருப்பார்; உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்; நேர்த்தியாய் உங்களை வழிநடத்துவார். கொர்நேலியு என்ற ஒரு மனுஷனைக் குறித்து வேதத்தில் வாசிக்கிறோம். அவன் ஆண்டவரை உண்மையாய் தேடினான். அதனால், தேவன் அவனிடம் தம் ஊழியனாகிய பேதுருவை அனுப்பினார்; அவனுடன் பேசி, அவன் குடும்பம் முழுவதையும் ஆசீர்வதித்தார் (அப்போஸ்தலர் 10:44-46). அன்பானவர்களே, நீங்களும் அதே ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள முடியும். வேதத்தை வாசியுங்கள்; அதை தியானியுங்கள்; ஆண்டவருக்கு பிரியமான வாழ்க்கை நடத்துங்கள். அப்போது தேவ பிரசன்னம் எப்போதும் உங்களோடிருக்கும். கொர்நேலியுவை ஆசீர்வதித்ததுபோல, உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அவர் ஆசீர்வதிப்பார்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என் நடுவில் வாசமாயிருப்பேன் என்று நீர் கொடுக்கும் வாக்குக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய சிருஷ்டிகராகிய நீர் என்னோடு இருக்க விரும்புகிறதை அறிந்து சந்தோஷத்தால் நிரம்புகிறேன். ஆண்டவரே, அனுதினமும் உம்மை இன்னும் அதிகமாய் நேசிக்க கற்றுத்தாரும். அன்றாடம் காலையில் உம்முடைய வார்த்தையை முதலாக, பிரியமாக தேடுகிற வாஞ்சையை எனக்குத் தாரும். வேத வசனங்களின் மூலம் என்னோடு பேசும்; எனக்குக் கட்டளையிடும்; உம்முடைய அன்பான கண்ணை என்மீது வைத்து என்னை வழிநடத்தும். எல்லா பயமும் என்னை விட்டு விலக உதவிசெய்யும்; உம்முடைய தெய்வீக பிரசன்னத்தில் எனக்கு இளைப்பாறுதல் தாரும். நீர் வந்து கொர்நேலியுவின் குடும்பத்தை ஆசீர்வதித்ததுபோல, என்னுடைய வீட்டுக்கும் வாரும். எனக்கும் எனக்கு அன்பானோருக்கும் உம்முடைய சமாதானத்தை தந்து ஆசீர்வதித்தருளும். உம்முடைய வார்த்தை எனக்குள் ஜீவிக்கட்டும்; என் வாழ்க்கையில் நீர் பிரியமாய் வாசம்பண்ணும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.