அன்பானவர்களே, தேவனுடைய வார்த்தையை தியானிப்பது சந்தோஷமானது. "உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது"(எரேமியா 15:16) என்று தீர்க்கதரிசி கூறுகிறார். தேவனுடைய வார்த்தைகளை உட்கொள்வது என்பதற்கு, தேவன் நம்மோடு பேசும்போது உன்னிப்பாக கவனிப்பது, அனுதினமும் ஆழமாக அவரது வார்த்தைக்குள் செல்வது என்று பொருள்படும். நம்முடைய சரீரத்தை காப்பதற்கு அப்பம் சாப்பிடுகிறதுபோல, தேவனுடைய வார்த்தை நம்முடைய ஆத்துமாவை தாங்குகிறது. "மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே" (மத்தேயு 4:4)என்று இயேசு சொல்கிறார். அந்த வார்த்தை நம் இருதயத்திற்குள் இருக்குமானால் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக அமையும்; சந்தோஷத்தையும் ஆவிக்குரிய பெலனையும் தரும்.
தேவனுடைய வார்த்தையை நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வேகமாக வாசிப்பது, மேலாட்டமாக பார்ப்பது கூடாது. நாம் அதை அதிகாரம் அதிகாரமாக, தினம் தினம் வாசிக்கவேண்டும்; ஏனென்றால் தேவன் அந்தந்த நாளுக்கென்று குறிப்பிட்ட வார்த்தையை வைத்திருக்கிறார். "நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது" (யோவான் 6:63). தேவனுடைய வார்த்தை நமக்குள் நுழைந்ததும், அது நம் எலும்புகளுக்குப் பலன் தருகிறது; நம்முடைய சரீரத்தை குணப்படுத்துகிறது; இருதயத்திற்கு சந்தோஷம் தருகிறது. இருதயத்திற்குள் மறைந்திருக்கும் பொக்கிஷமாக நம்மை களிகூரப்பண்ணுகிறது. நம்முடைய உதடுகளில் இருக்கும்போது அது மற்றவர்களுக்கு செய்தியாக வெளிப்படுகிறது; கரங்களில் விசுவாசத்தின் ஆயுதமாக இருக்கிறது. "உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்" (சங்கீதம் 119:103)
தேவனுடைய வார்த்தையை இரவும் பகலும் தியானிக்கிறவர்கள் செழிப்பார்கள். மக்களுக்கு இயேசுவின் வார்த்தைகள் போஜனத்தை காட்டிலும் மதுரமாயிருந்ததினால், சரீரத்திற்கு தெம்பை கொடுத்ததினால் மூன்று நாட்கள் சாப்பிடாமல் அவரை பின்தொடர்ந்தார்கள் (மத்தேயு 15ம் அதிகாரம்). இயேசு, மனதுருகி அவர்களுக்கு அப்பத்தையும் மீனையும் கொடுத்து, தாம் ஆத்துமாவுக்கு மட்டும் உணவளிக்கிறவரல்ல, சரீரபிரகாரமான தேவைகளையும் சந்திக்கிறவர் என்று காண்பித்தார். இயேசு ஜீவ அப்பமாயிருக்கிறார் என்று வேதம் நினைப்பூட்டுகிறது (யோவான் 6:35). அவரிடம் வருகிறவன் ஒருபோதும் பட்டினியாய் செல்வதில்லை. என் கணவர் Dr. பால் தினகரன் மூலம் நாம் ஆண்டுதோறும் வாக்குத்தத்த வசனத்தை பெற்றுக்கொள்கிறோம்; தொலைக்காட்சியில் அனுதினமும் நாம் தினசரி வாக்குத்தத்த வசனத்தை தியானிக்கிறதின் மூலம் தேவன் தொடர்ந்து நமக்கு பெலன் கொடுக்கிறார். வேதம், "அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு" (2 பேதுரு 1:19)என்று சொல்லுகிறது. அதன் மூலம் இயேசு, நமக்கு வெளிப்படுத்தப்பட்டார்; உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டார். இவ்வாறு நாம் தேவனுடைய வார்த்தையை கண்டுபிடிக்கிறோம்; உட்கொள்கிறோம். அவருடைய வார்த்தை நம்மை பெலப்படுத்துவதாக; போஷிப்பதாக; அன்றாடம் புதுப்பிப்பதாக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, மதுரமான, ஜீவனை அளிக்கிறதான, வல்லமையான உம்முடைய வார்த்தை என்னும் ஈவுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எரேமியாவைப்போல, உம்முடைய வார்த்தைகள் என்னிடம் வருவதாக; நான் அவற்றை சந்தோஷத்துடன் உட்கொள்ளட்டும். உம்முடைய வார்த்தை என் இருதயத்திற்கு பிரியமானதாக, என் சரீரத்துக்கு பெலன் தருவதாக இருக்கட்டும். ஆண்டவரே, நான் அப்பத்தின் மீது மட்டும் பசியாயிராமல், உம்மிடம் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையின்மேலும் பசியாயிருக்க உதவி செய்யும். தினமும் உம்முடைய வசனத்தை தியானிக்கும்போது, தயவாய் உம்மை எனக்கு வெளிப்படுத்தும். உம்முடைய வார்த்தை என் இருதயத்தில் பொக்கிஷமாய் மறைந்திருக்கட்டும்; என் உதடுகளின் வழியாக செய்தியாகட்டும்; என் கரங்களில் ஆயுதமாக விளங்கட்டும். உம்முடைய தெய்வீக வார்த்தை என்னை குணப்படுத்தட்டும்; என்னை வழிநடத்தட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.