அன்பானவர்களே, "வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு" (நீதிமொழிகள் 21:20) என்று இன்றைய வாக்குத்தத்தம் கூறுகிறது. ஞானமுள்ள மனுஷன் திட அஸ்திபாரத்தின் மீது தன் வீட்டைக் கட்டுகிறான். ஞானமே அந்த வீட்டைக் கட்டுகிறது. ஆகவே, ஞானமுள்ள மனுஷனின் வீடு அருமையான பொக்கிஷத்தையும் தைலத்தையும் கொண்டிருக்கும். ஞானத்திற்கு எப்படி இவ்வளவு ஆற்றல் என்று நீங்கள் வியக்கக்கூடும். ஞானம் என்பது என்ன? இயேசு கிறிஸ்துவே ஞானமாயிருக்கிறார். வேதம், ஞானம், இவ்வுலக தோற்றத்திற்கு முன்பே தேவனாகிய கர்த்தரிடம் இருந்தது என்று கூறுகிறது. அந்த ஞானத்தினாலே முழு பிரபஞ்சமும் உண்டாக்கப்பட்டது. தேவன் தம் வார்த்தையை அனுப்பி எல்லாவற்றையும் சிருஷ்டித்தார். வேதம், வார்த்தையே தேவ ஞானம் என்று அறிவிக்கிறது. சகலமும் உண்டாவதற்கு முன்பே அவர் இருந்தார்; அவர் மூலமாகவே எல்லாம் திட்டமிடப்பட்டது; பூரணப்படுத்தப்பட்டது (எபிரெயர் 1:2).
இந்த தெய்வீக ஞானம், படைப்பை ஒவ்வொரு மாற்றத்தின் மூலமும், பரிணாமத்தின் மூலமும் தாங்குகிறது. எல்லாமும் அவரால்தான் பரிபூரண ஒழுங்கோடு இருக்கிறது. எல்லாமும் ஜீவனை அளிக்கக்கூடியதாக இருக்கின்றன. சத்துரு திருடவும் கொல்லவும் அழிக்கவும் வரும்போது இயேசு, பரிபூரண ஜீவனை அளிப்பதற்கு வந்துள்ளார். ஞானமாகிய அவர், இன்று, "என் பிள்ளையே, ஞானத்தினால் உன் வாழ்க்கையை கட்டுவதற்கு விரும்புகிறேன்," என்று கூப்பிடுகிறார். நம்முடைய இருதயங்களை திறந்து, "ஆண்டவரே, என் இருதயத்திற்குள் வாரும். என்னுடைய அடிமைத்தனங்களை, பாவங்களை, உலக இன்பங்களை, காணாமற்போன நம்பிக்கையை மேற்கொள்வதற்கு உதவி செய்யும்," என்று கேட்போம். அப்போது அவர் வருவார். அவர் ஆனந்த தைலத்தினால் நம்மை அபிஷேகிக்கிறார். அந்த தைலம், அவரது சந்தோஷத்தையும் பிரசன்னத்தையும் குறிக்கிறது. அது நமக்குள் அக்கினியை எரியப் பண்ணுகிறது. ஞானத்தின் மூலமாக ஆண்டவர் ஆனந்த தைலத்தை அளிக்கிறார். இவ்வுலகத்திற்கும் வரும் உலகத்திற்குமான பொக்கிஷங்களை அளிக்கிறார். அவரை கனப்படுத்துவதற்கும், நம்மை பரலோகத்திற்கு ஆயத்தப்படுத்துவதற்கும் ஆவிக்குரிய பொக்கிஷங்களையும், நம் தேவைகளை சந்திப்பதற்கும், நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் இவ்வுலக பொக்கிஷங்களையும் தருகிறார்.
இந்த ஞானம் செயல்படுவதைக் குறித்த ஓர் அருமையான சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். பூனாவை சேர்ந்து ஷேரன் என்ற பெண்ணை, ஒரு வயது குழந்தையாயிருந்தபோதே அவள் பெற்றோர் இளம் பங்காளர் திட்டத்தில் சேர்த்தனர். இளம் பங்காளரான அவளை தேவ ஞானம் தொடர்ந்தது. அவளுடைய காணிக்கைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவசமாக சேவை செய்வதற்கு எங்களுக்கு உதவியது. ஷேரன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியபோது 90.8% மதிப்பெண்களை பெற்றாள். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின்போது ஆங்கில பாட தேர்வுக்கு முன்னாக அவள் கை வீங்கி வலித்தது. ஆனால், இயேசு அழைக்கிறார் ஜெப வீரர்கள் அவளுக்காக வசனத்தை உரைத்து ஜெபித்தபோது தேவன் அவளை குணமாக்கினார். தேர்வுகளை எழுதி முடித்து 91.23% மதிப்பெண்கள் பெற்றாள். வேதியியலில் முதல் மதிப்பெண் கிடைத்திருந்தது. பிறகு பட்டப்படிப்பை தொடர்ந்தாள். 97.25% மதிப்பெண்களுடன் அதை முடித்தாள். பட்டமேற்படிப்பில் 100% கல்வி ஊக்கத்தொகை கிடைத்தது. தற்போது பெரிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறாள். தேவன் உண்மையாகவே அவளை செழிக்கப்பண்ணினார். அன்பானவர்களே, இதே ஆசீர்வாதத்தை, ஞானத்தை உங்களுக்கும் தருவார். நீங்கள் உங்கள் வாழ்வை இயேசுவுக்கு ஒப்படைத்து ஜெபிக்கும்போது அவருடைய ஞானத்தை கேட்கும்போது, அவர் வந்து தமது சந்தோஷத்தாலும் பொக்கிஷத்தாலும் உங்களை நிரப்புவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவர் இயேசுவே, உலகம் தோன்றுவதற்கு முன்பே நீர் தேவ ஞானமாயிருக்கிறீர். உலகை உம்முடைய ஞானத்தினால் கட்டினீர். இப்பொழுது என்னுடைய வாழ்க்கையையும் அதே ஞானத்தினால் கட்டுவதற்கு விரும்புகிறீர். இன்று உம்மை என் இருதயத்திற்குள் வரவேற்கிறேன். என்னை பாவத்தோடு, அடிமைத்தனங்களோடு பிணைத்திருக்கிற சங்கிலிகளை தயவாய் முறித்துப்போடும். உலக காரியங்களை சார்ந்திருப்பதை தவிர்த்து உம்முடைய ஆனந்த தைலத்தினால் என்னை அபிஷேகம் பண்ணும். உம்முடைய ஞானம் என் வீட்டை சமாதானத்தினாலும், ஒரு நோக்கத்தினாலும், பரத்திலிருந்து வரும் தெய்வீக பொக்கிஷத்தாலும் நிரப்பட்டும். உம்மை முற்றிலும் நம்புவதற்கு, உம்முடைய பூரண திட்டத்தின்படி வாழ்வதற்கு எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். என்னுடைய ஞானமாக, என்னுடைய அஸ்திபாரமாக, நித்திய சந்தோஷமாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து உம்முடைய நாமத்திலே ஜெபிக்கிறேன், ஆமென்.