அன்பானவர்களே, தேவனுடைய வார்த்தையை, நமக்கு இன்றைக்கு அவர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்தை தியானிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தினம்தான் தம்பதியர் எஸ்தர் ஜெபக் குழு ஆரம்பிக்கப்பட்டது. என் பாட்டி திருமதி ஸ்டெல்லா தினகரன், தம்பதியர் ஒன்றாய் வந்து ஜெபிக்கும்படியாய், ஊழியம் செய்யும்படியாய் அதை ஆரம்பித்தார்கள். நீங்களும் இதில் சேர்ந்து ஊழியத்திற்காக ஜெபிக்கலாம்; தாங்கலாம்; அநேகருக்கு ஆசீர்வாதமாகும்படி தொடரலாம். இன்று தேவன், "செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள்" (சங்கீதம் 140:13) என்ற விசேஷித்த ஆசீர்வாதத்தை வாக்குப்பண்ணுகிறார். தேவனுடைய சமுகத்தில் தங்கியிருப்பது, அவரது பிரசன்னத்தை அனுபவிப்பது எத்தனை பாக்கியம்! உங்களுக்குள் இருக்கும் ஆழமான சந்தோஷத்தை எண்ணிப்பாருங்கள்; உங்கள் இருதயத்தில் இருக்கும் சமாதானத்தை எதுவும் குலைக்க முடியாது. நாம் அந்த சமாதானத்தை வாஞ்சிக்கிறோம். செம்மையானவர்களுக்கு அந்த ஆசீர்வாதம் கிடைக்கும் என்று இந்த வசனம் கூறுகிறது. ஆகவே, நாம், "ஆண்டவரே, எப்போதும் உம்முடைய சமுகத்தில் வாசம்பண்ணும்படி எங்களை செம்மையானவர்களாக்கும்," என்று கேட்போம்.
நீதிமான்கள், செம்மையானவர்கள் என்றால் யார்? "கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" (சங்கீதம் 1:2) என்று கூறுகிறது. அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை கேட்பதில் பிரியமாயிருப்பார்கள். நீதிமான்கள், மாம்சத்தின் விருப்பங்களை தியாகம்செய்து, தேவனுடைய பார்வைக்கு பிரியமாயிருப்பவற்றையே செய்வார்கள். இச்சைகள் நம் மாம்சத்தில் தங்கியிருக்கும்; ஆனால், செம்மையானவன், "எனக்கு இது வேண்டாம். நான் பரிசுத்தமாய் வாழவேண்டும்; தேவனுக்கு பிரியமானவற்றை செய்யவேண்டும்," என்று கூறுவான். இப்படிப்பட்டவர்கள் ஆண்டவருக்குச் சொந்தமானவர்கள். "நான் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமற்போகமாட்டேன். அவருக்குக் கீழ்ப்படியாமற்போவதற்கு என் இருதயம் இடங்கொடாது. நான் எப்போதும் கீழ்ப்படிவேன்; அவரது சித்தத்திற்குச் செவிகொடுப்பேன்," என்று கூறி அவர்கள், தேவனுடைய பரிபூரண சித்தத்தின்படி செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவனுக்கு முன்பாக செம்மையானவர்களாக இருக்கிறார்கள்.
மேலும் செம்மையானவர்கள், தங்கள் இழப்புகளின், குறைவுகளின் மத்தியிலும் தியாகத்தோடு கொடுப்பார்கள். ஆண்டவரை பூரணமாக நம்பி, உற்சாகத்துடன் கொடுப்பார்கள். இறுதியாக, எப்போதும் அவருக்கு நன்றியறிதலுடன் இருப்பார்கள். மோசமான சூழ்நிலையிலும், அவர்கள், "ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்," என்று கூறி, தங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருப்பார்கள். "ஆண்டவர் எனக்கு நன்மையானதையே செய்வார்," என்று சொல்வார்கள். இப்படிப்பட்டவர்களே தேவனுக்குப் பிரியமான நீதிமான்களாயிருக்கிறார்கள். இரவும் பகலும் தேவனுடைய மகிமையான சமுகத்தில் தங்கியிருக்கும்படி நம்மையும் செம்மையானவர்களாக மாற்றும்படி ஆண்டவரிடம் கேட்போம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, செம்மையானவர்கள் உம்முடைய சமுகத்தில் தங்கியிருப்பார்கள் என்று வாக்குப்பண்ணுகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். அனுதினமும் உம்மோடு நெருங்கி ஜீவிக்க வாஞ்சிக்கிறேன். ஆண்டவரே, என் இருதயத்தை சுத்தமாக்கி, கீழ்ப்படிதலுள்ள ஆவியை, சந்தோஷத்துடன் தியாகம் செய்யக்கூடிய மனதை தந்து என்னை நீதிமானாக்கும். மாம்சத்தின் இச்சைகளை விட்டுவிடவும், உம்முடைய பார்வைக்கு ஏற்றவைகளை செய்யவும் எனக்கு உதவியருளும். எல்லா காலமும் நன்றியறிதலுடன் இருக்கவும், குறைவின் காலத்திலும் உற்சாகமாக கொடுக்கவும் கற்பித்தருளும். இரவும் பகலும் உம்முடைய வசனத்தில் பிரியமாயிருந்து, உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற உதவியருளும். என் உள்ளத்தில் இருக்கும் உம் சமாதானத்தை எதுவும் அசைக்காமல் இருக்கட்டும். எப்போதும் எம்முடைய சமுகத்தில் இருப்பதற்கு விரும்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.