அன்பானவர்களே, தேவனுடைய வாக்குத்தத்தம் உங்களுக்கு ஜீவனை தரும். "என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன்" (சங்கீதம் 92:10) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தம். இன்றைக்கு புது எண்ணெயால் நீங்கள் அபிஷேகம்பண்ணப்படுவீர்கள். நீங்கள் உயர்த்தப்படுவதற்கான நேரம் சமீபித்திருக்கிறது. சீக்கிரமே, தேவன் உங்களை கனப்படுத்துவதை கண்டு ஆச்சரியமடைவீர்கள். இருக்கிற சூழ்நிலையை கண்டு, இங்கு ஊழியம் செய்யும்படி தேவன்தானே என்னை அழைத்தார்? அவர்தானே அற்புதவிதமாக இந்த வேலையை கொடுத்தார்? இந்த வியாபாரத்தைச் செய்யும்படி அவர்தானே வாசலை திறந்தார்? பிறகு ஏன் முன்னேற முடியாமல் திண்டாடுகிறேன்? ஏன் தாழ்த்தப்படுகிறேன்; ஏன் ஒடுக்கப்படுகிறேன்; ஏன் அதைரியமடைகிறேன்; ஏன் ஸ்தம்பித்து நிற்கிறேன்? என்று நீங்கள் திகைத்துப்போயிருக்கலாம்.
அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை தாம் உயர்த்துவதாக, காண்டாமிருகத்தின் கொம்பைபோல உங்களை கொம்பை உயர்த்துவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார். காண்டாமிருகத்தின் கொம்பு கெம்பீரமானது. தேவன் தமது புது எண்ணெயை உங்கள்மேல் ஊற்றுவார்; சீக்கிரத்திலே மக்கள் அதே கெம்பீரத்தை உங்கள் வாழ்வில் காண்பீர்கள். "இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" (ரோமர் 8:18) என்று பவுல் நமக்கு நினைவுப்படுத்துகிறார். தேவன் உங்களுக்கு ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிற மகிமையான எதிர்காலத்துடன் ஒப்பிடும்போது, நீங்கள் தற்போது அனுபவிக்கும் உபத்திரவங்கள் பெரிதானவையல்ல! ஆகவே, அப்படிப்பட்ட உயர்வை எதிர்பாருங்கள்.
யோசேப்பு, தரிசனத்தை பெற்றுக்கொண்டபோது, தன்னுடைய வாழ்வின் மகத்துவத்தை அவன் எண்ணிப்பார்த்தான். மற்றவர்களைப் பார்க்கிலும் தான் கனப்படுத்தப்படுவதை அவன் கண்டான். ஆனாலும், அவன் தொடர்ந்து உபத்திரவங்களை அனுபவித்தான். அன்பானவர்களே, கர்த்தர் எல்லா இக்கட்டுகளின் வழியாகவும் அவனை நடத்தி, பெலப்படுத்தி, போதித்து, உயர் ஸ்தலங்களில் பிரகாசிக்கும்படி அவன் திறமையை வளர்த்தார். உரிய நேரத்தில், அவன் கனவிலும் கண்டிராத அளவுக்கு ஒரு தேசத்தை ஆட்சி செய்யுமளவுக்கு தேவன் அவனை உயர்த்தினார். தேவன், அவ்வாறே நம்மையும் ஆசீர்வதிப்பதற்காக அவரை ஸ்தோத்திரிப்போம். வரப்போகும் உயர்வுக்கு உங்களை ஆயத்தம்பண்ணுங்கள். நாங்களும் அதைக் கண்டிருக்கிறோம். தேவனுடைய தரிசனத்திற்காக அல்லது அவரது ஆசீர்வாதங்களை பெறுவதற்கு நீங்கள் படும் பாடுகள் ஒருபோதும் வீண்போகாது. தேவன் உங்களை கைவிடமாட்டார். நீங்கள் உயர்த்தப்படுவீர்கள்; இன்றைக்கு என்னோடு இணைந்து புது எண்ணெயை பெற்றுக்கொள்ளுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் அருளிய வாக்குத்தத்தங்கள் என் ஆத்துமாவுக்கு ஜீவனையும் நம்பிக்கையையும் தருகிறதினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய புது எண்ணெயை இன்றைக்கு என்மேல் ஊற்றும்; காண்டாமிருகத்தின் கெம்பீரமான கொம்பைப் போல என் ஆவியை உயர்த்தியருளும். உபத்திரவங்களின் வழியாக கடந்துசெல்கிற என்னை பெலப்படுத்தும்; இந்த பாடுகள் மகிமைக்கான ஆயத்தம் என்று நான் நம்புவதற்கு உதவி செய்யும். என்னுடைய தத்தளிப்பின் மத்தியில், தோல்வியின் மத்தியில் நீர் எனக்காக கிரியை செய்து கொண்டிருக்கிறீர் என்பதையும், கனமும் சந்தோஷமும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி என்னை நடத்துகிறீர் என்றும் நான் நினைவுகூரும்படி செய்யும். இக்கட்டுகளின் மேலாக யோசேப்பை நீர் உயர்த்தியதுபோன்றே, உமக்கு ஏற்ற நேரத்தில் என்னை மேலே எழுப்புவீர் என்று விசுவாசிக்கிறேன். ஒருபோதும் என்னை கைவிடாத உம்முடைய கிருபைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் தரும் உயர்வென்னும் ஆசீர்வாதத்தை நன்றியுள்ள, விசுவாசம் நிறைந்த இருதயத்துடன் பெற்றுக்கொண்டு, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.