அன்பானவர்களே, "நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது" (நீதிமொழிகள் 23:18) என்ற ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இதுவே இன்றைக்கு உங்களுக்கான வாக்குத்தத்தமாகும்.
ஒருவேளை, ஆசீர்வாதத்திற்காக நீங்கள் நெடுங்காலம் காத்திருக்கலாம். நீங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கலாம்; விசுவாசிக்கலாம்; தசமபாகம் கொடுக்கலாம்; காணிக்கை கொடுக்கலாம். மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்துகொண்டிருக்கலாம்; ஏழைகளுக்கு உதவலாம்; இயேசு அழைக்கிறார் ஊழியம் மற்றும் சீஷாவின் மூலம் ஊழியம் செய்துகொண்டிருக்கலாம். ஜெப கோபுரத்தில் மற்றவர்களுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கலாம்; நீங்கள் பெற்ற அற்புதங்களைக் குறித்து பகிர்ந்துகொள்ளலாம் அல்லது ஆண்டவரின் சேவைக்கென்று உங்களை முற்றிலுமாய் கொடுத்திருக்கலாம்.
இருந்தாலும் நீங்கள் ஜெபித்த சில விண்ணப்பங்களுக்கு இன்னும் பதில் கிடைக்காமல் இருக்கலாம். இன்றைக்கு, "உன் நம்பிக்கை வீண்போகாது" என்று ஆண்டவர் உறுதியளிக்கிறார். "உன்னைக் குறித்து நான் வைத்திருக்கிற எண்ணங்களை அறிந்திருக்கிறேன். உனக்கு தீமையை அல்ல; நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் தரக்கூடிய எண்ணங்கள் அவை," என்று அவர் கூறுகிறார். எதிர்காலத்தின் ஆசீர்வாதத்திற்காக காத்திருப்பீர்களென்றால், இன்றைக்கு தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்கள் உங்கள்மேல் உரைக்கிறேன். இப்போதே பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் வந்து, உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் மனதையும் உங்கள் ஆத்துமாவையும் உங்கள் வாழ்க்கையையும் உங்கள் உறவுகளையும் குறித்த எல்லாவற்றையும் நேர்த்தியாக பூரணப்படுத்துவார். அன்பானவர்களே, விசுவாசத்துடன் ஜெபியுங்கள். இந்த அதிசயங்கள் உங்களுக்கு நடக்கும் என்று விசுவாசியுங்கள். உங்கள் நம்பிக்கை வீண்போகாது.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் தந்த வாக்குத்தத்தத்திற்காக நன்றியும் விசுவாசமும் நிறைந்த இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். என் நம்பிக்கை வீண்போகாது என்ற நிச்சயத்தை தருவதற்காக உமக்கு நன்றி. பதில் கிடைக்காத என்னுடைய ஜெபங்கள் எல்லாவற்றையும் உம்முடைய அன்பின் கரங்களில் ஒப்படைக்கிறேன். எனக்காகவும் என் குடும்பத்தாருக்காகவும், என் உறவினருக்காகவும், என் முழு வாழ்க்கைக்காகவும் யாவற்றையும் நீர் நேர்த்தியாய் செய்து முடிப்பீர் என்று விசுவாசிக்கிறேன். தயவுசெய்து என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பும். என்னுடைய நன்மைக்கேற்ற உம்முடைய உயர்ந்த எண்ணங்களை நாம் நம்புவதற்கு உதவி செய்யும். ஆண்டவரே, என்னுடைய கையின் பிரயாசங்களையும் உமக்கு நான் செய்யும் ஊழியத்தையும் ஆசீர்வதித்தருளும். உம்முடைய அதிசயங்கள் என் வாழ்வினுள் புரண்டு வரவேண்டுமென்று இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் கேட்டு உம்மிடத்திலிருந்து பூரண ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்கிறேன், ஆமென்.