அன்பானவர்களே, நம் தேவன் அற்புதங்களின் தேவனாயிருக்கிறார். ஆகவே, இன்றைய தினம் மெய்யாகவே அற்புதங்களின் நாளாகும். அவர் தமது வல்லமையையும் அன்பையும் வெளிப்படுத்தி, அற்புதங்களின் வாயிலாக நம்முடன் பேசுகிறார். இன்றைய தினம், இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை கலாசாலை மற்றும் பயிற்சி துறையை தொடங்கிய நாளாகும். இந்த ஒன்பது ஆண்டுகளாய், இந்த கலாசாலை, ஆண்டவரை அறியும்படி அநேகரை பயிற்றுவித்து, மற்றவர்களை தேவனின் வழியில் நடத்த அவர்களைப் பழக்குவித்துள்ளது. இந்த ஊழியத்தின் மூலம் ஆண்டவர் வல்லமையாக அசைவாடுகிறார். அது வளர்ச்சியடைவேண்டும்; மக்களுக்கு பலன் தரவேண்டும் என்று தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.

இன்றைக்கு ஆண்டவர் நம்முடன், "என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்" (எரேமியா 31:14) என்ற வசனத்தின் மூலம் பேசுகிறார். ஆண்டவர் ஆசீர்வதிக்கும்போது, அவர் கொஞ்சமாய் அல்ல; பூரணமாய் ஆசீர்வதிக்கிறார். அவரது ஜனங்களை எப்போது அல்லது எப்படி ஆசீர்வதிக்கவேண்டும் என்று யாரும் அவருக்கு போதிக்கவோ, கட்டளையிடவோ அவசியதில்லை. அவர்களை எப்படி பராமரிக்கவேண்டும் என்று அவர் அறிந்திருக்கிறார். "கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது" என்று வேதம் நமக்கு உறுதிப்படுத்துகிறது. நீங்கள் காத்திருக்கலாம்; நீங்கள் ஆசீர்வதிக்கப்படும் வேளை நிச்சயமாய் வருகிறது. இன்றைக்கு அவர் உங்களை தம் நன்மையினால் நிரப்புவார். பொறுமையாய் காத்திருப்பதற்கான பலன் அவரிடமிருந்து வருகிறது. உங்கள் வாழ்க்கையில் அவருடைய நன்மை நிரம்பி வழியும்; உங்கள் இருதயமும் ஆவியும் நிறைந்து வழியுமளவுக்கு நிரப்பப்படும். இனிமேல் நீங்கள் எதற்காகவும் காத்திருப்பதில்லை. இவ்வாறு வாழ்க்கையில் நாம் தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோம். நாம் இனிமேல் அவரிடம் என்ன கேட்கலாம் என்று அறிந்திட இயலாத அளவு அதிக திருப்தியையும், அதிக நிறைவையும் அடைந்திருக்கிறோம். "இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்,"என்று இயேசு கூறினார். அவரது ஆசீர்வாதமே முழு திருப்தியை தந்து ஆசீர்வதிக்கும்; அதில் காத்திருப்பதற்கும் பொருளாசைக்கும் வேலையே இருக்காது.

தேவனுடைய பரிபூரணமான ஆசீர்வாதங்களை அனுபவித்த கோலோ தாஜாம் என்ற சகோதரரின் சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். அவர், தம் தந்தையை இளவயதிலேயே இழந்துவிட்டார். அவரை வளர்க்க தாயார் அதிகமாய் கஷ்டப்பட்டார்கள். ஒருநாள், பக்கத்துவீட்டில் இயேசு அழைக்கிறார் பத்திரிகையை வாசித்தார். அதன் மூலம் ஆண்டவரைப் பற்றி அறிந்துகொண்டு, எல்லா சூழ்நிலையிலும் அவரையே பற்றிக்கொண்டார். அவர் இயேசு அழைக்கிறார் இளம் பங்காளரானதுடன், தேவனுடைய வழிகாட்டுதலை நாடியும், ஜெப உதவி வேண்டியும் என் தந்தை Dr. பால் தினகரனுக்கு அடிக்கடி கடிதம் எழுதினார். பத்தாவது வகுப்பில் அவரது பள்ளியில் 76%  மதிப்பெண்ணே உயர்ந்ததாக இருந்தது. அவர் ஊக்கமாய் ஜெபித்து, தேர்வை எழுதி 77% மதிப்பெண்ணை பெற்றார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர். தேவன் அவரை ஆசீர்வதித்தார். அவர் பட்டப்படிப்பை முடித்து, அருமையான அரசு வேலை என்னும் ஆசீர்வாதத்தை பெற்றார். வேலை செய்தபடியே பட்டமேற்படிப்பையும் படித்தார். அதிலும் வெற்றி பெறுவதற்கு தேவன் உதவினார். ஒருநாள், ஜெப கோபுரத்தில், ஜெப வீரர் அவருக்காக ஜெபித்து, "தேவன் உங்களுக்கு வாழ்க்கை துணையை கொடுத்து, பூரணமாக ஆசீர்வதிப்பார்," என்று தீர்க்கதரிசனமாக கூறினார். அந்த ஆண்டே ஆச்சரியமான முறையில் அவரது திருமணம் நடைபெற்றது. தேவன், நான்கு பிள்ளைகளைக் கொடுத்து அவரை ஆசீர்வதித்தார். அவர்கள் ஒன்றாய் இயேசு அழைக்கிறார் குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் இணைந்தனர். தற்போது, 40 வயதில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 50 பள்ளிகளை மேற்பார்வையிடும் தலைமையாசிரியாக ஆண்டவர் அவரை உயர்த்தியுள்ளார்.

தேவன் அவரை உயர்த்தி, அவரது வாழ்க்கையை நன்மையினால் நிரப்பியதுபோல, உங்களுக்கும் செய்வார். அவரது ஆசீர்வாதங்கள் சமீபித்திருக்கின்றன; ஆகவே, அவரை நம்புங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய பரிபூரண ஆசீர்வாதங்களுக்காகவும் அளவற்ற அன்புக்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே சகல நன்மைகளையும் அளிக்கிறவர்; உம்முடைய ஏற்றவேளையை நான் நம்புகிறேன். நீர் வாக்குப்பண்ணியபடியே, என்னுடைய இருதயத்தையும் வாழ்க்கையையும் உம்முடைய நன்மையினால் நிறைத்திடும். எனக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது என்று நம்பி, விசுவாசத்தோடு உமக்கு காத்திருப்பதற்கு எனக்கு உதவும். நான் ஒருபோதும் தாகமடையாதபடி, என் ஆத்துமாவை உம்முடைய ஜீவத்தண்ணீரால் திருப்தியாக்கும். உலக பொருள்கள்மேல் இருக்கிற வாஞ்சையை முற்றிலும் அகற்றி, உம்மில் என்னை திருப்தியாக்கிடும். என் வாழ்க்கையில் உம்முடைய நன்மைகள் நிரம்பி வழிந்து, உம்முடைய கிருபைக்கு சாட்சியாக விளங்குவதாக. ஆசீர்வாதங்கள் சமீபித்திருப்பதை நான் அறிந்து, என் வாழ்க்கையை உம்முடைய கரங்களில் அர்ப்பணித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.