அன்பானவர்களே, இன்றைய தினம் நம்பிக்கையின் நாளாகும். வாழ்க்கையில் ஆண்டவர் ஏதோ ஒன்றை புதிதாக செய்ய இருக்கிறார் என்று விசுவாசிப்பதற்கான நாளாகும். இன்றைக்கு தேவன் புதிய காரியத்தைச் செய்கிறபடியினால், பழைய காரியங்களை மறந்துவிடுங்கள். "அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல் மூடிப்போட்டது" (சங்கீதம் 78:53) என்று வாக்குத்தத்த வசனம் விவரிக்கும் அனுபவத்திற்குள் தேவன் உங்களை நடத்துவார். இஸ்ரவேல் ஜனங்கள், முன்னேறிச் செல்ல முடியாதவண்ணம் செங்கடலின் முன்பு சிக்கிக்கொண்ட சூழலைக் குறித்து இந்த வசனம் கூறுகிறது. அவர்களுக்குப் பின்னே, அவர்களை அழித்துப்போடவேண்டுமென்ற தீர்மானத்துடன் எதிரிகள் நெருங்கிக்கொண்டிருந்தனர். செங்கடல் கடந்து செல்ல முடியாத தடையாக, அவர்கள் பயணத்திற்கு இடறலாகக் காணப்பட்டது. ஒருவேளை இன்றைக்கு உங்கள் வாழ்க்கையிலும், இதுபோன்று கடந்து செல்ல முடியாத தடையை நீங்கள் காணலாம். ஆனால், தேவன், கடந்து செல்லமுடியாத வழியை திறந்து, "இதன் வழியே செல்லுங்கள்," என்று கூறினார்.

நமக்கு பெரிய இக்கட்டுகள் இருக்கும் இடத்திற்கே தேவன் நம்மை நடத்துகிறார்; அப்போதுதான் அவரால் அற்புதத்தைச் செய்ய முடியும். இஸ்ரவேல் ஜனங்களுக்கு தடையாகக் காணப்பட்ட செங்கடலே அவர்கள் முன்னேறிச் செல்வதற்கான அற்புதமான பாதையாக மாறியது. அவர்கள் விரோதிகளுக்கோ அது அழிக்கப்படுகின்ற இடமாக மாறியது. அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களை தொடர்ந்து சென்றபோது, தண்ணீர் அவர்களை மூடிப்போட்டது. உங்கள் வாழ்க்கையிலும் முடியாது என்று காணப்படுவது, முன்னேறிச் செல்லக்கூடிய அற்புத பாதையாக திறக்கும். உங்களை விரோதிக்கிறவர்களின் யோசனைகள் அழிந்துபோகும். இதற்கு வேதாகமத்தில் ஆமான், மொர்தெகாய் சரிதை ஆதாரமாக விளங்குகிறது.  பெர்சிய ராஜ்யத்தில் உயர்ந்த அதிகாரியாக இருந்த ஆமான், மொர்தெகாயை அதிகமாய் வெறுத்தான். மொர்தெகாயை அழித்துப்போடுவதற்கு ஆமான் தூக்குமரத்தை செய்வித்தான். ஆனால், தேவன் இடைப்பட்டு, மொர்தெகாயை பாதுகாத்து, கனம்பெறும்படியாய் அவனை உயர்த்தினார். மொர்தெகாயை கொன்றுபோடுவதற்கு ஆமான் செய்வித்த தூக்குமரமே அவன் அழிந்துபோகக் காரணமானது. அன்பானவர்களே, பொல்லாத மனுஷர், அவர்களுடைய யோசனைகளினாலே விழுந்துபோவார்கள்; தேவன் உங்களை உயர்த்தி, முன்னேறிச் செல்வதற்கு வழிநடத்துவார். ஆகவே, சந்தோஷமாயிருங்கள். தேவன், தடைகள் எல்லாவற்றையும் வழிகளாக மாற்றுகிறார்; எல்லா ஒடுக்குதலிலிருந்தும் உங்களை விடுவிப்பார். இந்த ஆசீர்வாதத்தை விசுவாசத்துடன் பெற்றுக்கொள்ளுங்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, நீர் புதிதான தொடக்கங்களின் தேவனாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வழி இல்லை என்று காணப்படும் இடத்தில் இன்று நீர் வழியை உண்டாக்குவீர் என்று நம்புகிறேன். இஸ்ரவேல் ஜனங்களுக்காக நீர் செங்கடலை பிரித்ததுபோல, நான் சந்திக்கும் இக்கட்டுகளின் நடுவாக என்னை பத்திரமாக நடத்திச் செல்லும். எனக்கு முன்னே இருக்கும் எல்லா இடறல்களையும் மேற்கொள்வதற்கான கிருபையை எனக்கு தந்தருளும்; எல்லா தடைகளையும் அற்புதமான வழியாக மாற்றும். ஆண்டவரே, பொல்லாதவர்களின் சதியாலோசனைகளை அவர்கள் மீதே திருப்பும்; உம்முடைய பலத்த கரத்தினால் என்னை பாதுகாத்தருளும். நீர் மொர்தெகாயை கனப்படுத்தியதுபோல, உம்முடைய வேளையில் உமது மகிமைக்காக என்னை உயர்த்தும். நீர் என்னை ஜெயத்திற்குள்ளாக நடத்துவீர் என்று விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.