அன்பானவர்களே, "என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார்" (மத்தேயு 2:6) என்பதே இன்றைய வாக்குத்தத்தமாயிருக்கிறது. இயேசு பிறந்ததும், உலகத்திற்கு வெளிச்சம் பிரகாசித்ததுமான சிறிய பட்டணமாகிய பெத்லகேமை இந்த வசனம் குறிப்பிடுகிறது. நீங்கள் தேவனுக்கு பெத்லகேமாக விளங்குகிறீர்கள். "உன்னிலிருந்து தேவனுடைய கர்த்தத்துவம் உலகத்திற்குள் செல்லும். நீ ஜனங்களை மேய்ப்பனைப்போல வழிநடத்தி, அவர்களை தேவ பிள்ளைகளாக மாற்று," என்று தேவன் கூறுகிறார். நீங்கள் ஆளும் பிரபுவாகவும், உங்களைச் சுற்றிலுமிருக்கும் மக்களுக்கு மேய்ப்பராகவும் இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அப்படிப்பட்டவராக வனையப்படும்படி உங்கள் வாழ்க்கையை இயேசுவின் கரங்களில் அர்ப்பணிப்பீர்களா?
பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் வரும்போது, நீங்கள் இயேசுவின் சாயலாக மறுரூபமாக்கப்பட்டு மகிமையின்மேல் மகிமையடைவீர்கள் என்று வேதம் கூறுகிறது (2 கொரிந்தியர் 3:18). இயேசு, சாவின்மேலும், பாவம், சாபம், பிசாசின் வல்லமை, பொல்லாத மக்களின்மேலும் அதிகாரம் கொண்ட பிரபுவாக இருக்கிறார். அதேவேளையில் அவர், தேவைகளோடு இருக்கிறவர்களைக் குறித்து கரிசனை கொண்ட நல்ல மேய்ப்பராகவும் இருக்கிறார். அவர் சிறுகுழந்தைகளை அழைத்தார்; அவர்களை விசாரித்தார்; வாலிபர்களை நேசித்தார்; பிணியாளிகளை குணமாக்கினார்; பாவிகளை மன்னித்தார்; மரித்தவர்களை எழுப்பினார்; பசியுற்றோருக்கு உணவு கொடுத்தார்; தம் சீஷர்களுக்காக போராடினார்; மக்களுக்கு வாழவேண்டிய வழியை போதித்தார். நாம் பிழைத்திருக்கும்படி, நியமிக்கப்பட்ட வேளையில் தன் ஜீவனை சிலுவையில் பலியாகக் கொடுத்தார். அவரே மேய்ப்பராகவும் நம் தேவனாகவும் இருந்தார்; இருக்கிறார். அவர் அன்பான தகப்பனாக இருக்கிறார். தம்மைப்போல, அதிகாரம் கொண்ட பிரபுவாகவும், அன்பும் கரிசனையும் கொண்ட மேய்ப்பனாகவும் உங்களை மாற்ற அவர் விரும்புகிறார்.
முத்துகிருஷ்ணன் என்ற வாலிபரின் சாட்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவரது தந்தை விவசாயி. தாயார் இல்லத்தரசி. அவர்கள் இயேசுவை அறியாதிருந்தார்கள். முத்துகிருஷ்ணன்தான் அவரது குடும்பத்தில் முதலில் எஞ்ஜினியரிங் படிக்க முயற்சியெடுத்தார். அற்புதவிதமாக அவருக்கு காருண்யா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. ஆனால், படிப்பில் சேர்ந்தபோது ஆங்கிலத்தில் பேசுவதற்கு சிரமப்பட்டார். காருண்யாவில் படித்த நான்கு வருடங்களில் அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது. தினமும் காலையில் நடக்கும் மாணவர் பிரார்த்தனைவேளை, ஜெப கூட்டங்கள், கூட்டு ஆராதனை மற்றும் ஆலோசனை வேளைகள் தேவனோடும் ஏனைய மாணவரோடும் உறவாட அவருக்கு உதவின. ஏழை மக்களுக்கு உதவும் செயல்பாடுகளில் அவர் இணைந்து பணியாற்றி, தேவனுடைய அன்பை அனுபவித்தார்.
இயேசு அழைக்கிறார் வல்லமை ஊழிய கூட்டம் ஒன்றில் அவர் பரிசுத்த ஆவியின் நிறைவை பெற்றார். மாணவர்கள் மத்தியில் அவரை நேசிக்கும் நல்ல நண்பர்களும் கிடைத்தனர். பயம் அகன்று, அவர் படிப்பில் சிறந்துவிளங்க தொடங்கினார். வேத வசனத்தினால் உந்துதல் பெற்று, தேவன் தனக்கு நேர்த்தியான எதிர்காலத்தை தருவார் என்று நம்பினார் (எரேமியா 29:11). பொறியியல் பட்டப்படிப்பில் முதல் வகுப்பு மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றார். அவருக்கு ஐரோப்பாவிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் பணி வாய்ப்பு கிடைக்கும்படி செய்து தேவன் ஆசீர்வதித்தார். அவர் ஆங்கிலத்தில் தொடர்புகொண்டு பெற்ற வாய்ப்புகள் அவை. இப்போது ஐரோப்பாவில் பெரிய நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றுகிறார். அவரது மனைவி பெயர் ஸ்மிதா. அவர்களும் காருண்யாவில் எம்.சி.ஏ படித்தவர்கள். வளாக தேர்வு மூலமே அவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஃபின்லாந்து நாட்டில் தகவல்தொழில்நுட்ப மேலாளராக வேலை செய்கிறார்கள். இந்த தம்பதியருக்கு அழகிய இரு மகள்கள் உள்ளனர். தாங்கள் இருக்கும் தேசத்தின் மக்களுக்கு தேவனின் அன்பை அளிக்கின்றனர். மெய்யாகவே தேவன் தாம் வாக்குப்பண்ணியபடியே, அவர்களை ஆளும் பிரபுக்களாகவும் வழிநடத்தும் மேய்ப்பர்களாகவும் வைத்திருக்கிறார்.
அன்பானவர்களே, தேவன் உங்களுக்கும் இப்படியே செய்வார். நீங்கள் பெலவீனமாக உணர்கிறீர்களா? படிப்பதற்கு சிரமப்படுகிறீர்களா? தைரியமாக பேச இயலவில்லையா? தாழ்ந்தநிலையில் இருப்பதாக நினைக்கிறீர்களா? முத்துகிருஷ்ணனைப்போல நீங்களும் உங்கள் வாழ்க்கையை ஆண்டவருக்கு அர்ப்பணியுங்கள். தேவன், அவரை உயர்த்தி, அவரது குடும்பத்தை ஆசீர்வதித்ததுபோல உங்களையும் உயர்த்துவார். அவரை நம்புங்கள். மக்களின் வாழ்க்கையை மாற்றும்படி அவர் உங்களை பிரபுவாகவும் மேய்ப்பராகவும் வைப்பார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னிலிருந்து உம்முடைய ஆளுகையும், வழிநடத்தும் கிருபையும் புறப்படும் என்று வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பரிசுத்த ஆவியின் வல்லமையால் என்னை இயேசுவின் சாயலாய் மறுரூபமாக்கும். பாவத்தையும் பயத்தையும் எல்லா தடைகளையும் மேற்கொண்டு உம்முடைய அதிகாரத்துடன் நடக்கும் பிரபுவாய் என்னை மாற்றுவீராக. தேவைகளோடு இருப்பவர்களுக்கு இயேசு செய்ததை போன்று அன்பும், கரிசனையும் காண்பித்து, மேய்ப்பனைப்போல வழிநடத்துவதற்கு எனக்கு உதவுவீராக. நான் பெலவீனமாக உணரும் தருணங்களில் என்னை பெலப்படுத்தும்; மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும்படி என்னை உம்முடைய ஞானத்தினாலும் தைரியத்தினாலும் நிறைத்தருளும். மற்றவர்களும் உம்மில் ஜீவனை கண்டுகொள்ளும்படி, இயேசுவைப்போல தன்னலமில்லாமல் தியாகம் செய்ய எனக்கு கற்பித்தருளும். நீர் என்னை உயரே தூக்கி, உம்முடைய மகிமைக்கென்று பயன்படுத்துவீர் என்று நம்பி என் வாழ்க்கையை உம் கரங்களில் அர்ப்பணித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.