அன்பானவர்களே, இன்றைய தினம், மகா பெரிய பெருக்கத்தின் நாளாகும். சரீரப்பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும், வாழ்வின் எல்லா நிலையிலும் நாம் வர்த்திப்பதை காணப்போகிறோம். "விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்" (2 கொரிந்தியர் 9:10) என்று தேவனுடைய வாக்குத்தத்தம் கூறுகிறதுபோல, இந்தப் பெருக்கம் நிச்சயமாய் நிகழும். ஆம், எப்போதும், போதுமானவை இருக்கும்படி ஆண்டவர் உங்கள் களஞ்சியத்தை பெருகப்பண்ணுவார். இந்த அதிகாரத்தை நீங்கள் வாசித்தால், தாராளமாக, உதாரத்துவமாக, உற்சாகமாக கொடுக்கிறவர்களுக்கு வரும் ஆசீர்வாதத்தை அறிந்துகொள்ளலாம்.
உலகம் எவ்வாறு இயங்குகிறது என்று யோசித்துப் பாருங்கள். தவறாமல் வருமானம் வங்கிக் கணக்கு வரும்போது, நீங்கள் செலவழிக்க செலவழிக்க இருப்புத் தொகை குறைந்துகொண்டே செல்லும். அதுதான் வழக்கம். ஆனால், ஆண்டவரைப் பொறுத்தமட்டில் காரியம் வேறுவிதமானதாகும். நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கும்போது, தேவன் உங்கள் கணக்கில் திரும்ப கொடுப்பார். நீங்கள் தியாகமாக மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது, அவர்களுக்காக செலவழிக்கும்போது, ஆண்டவர் உங்களுக்கு வேண்டியவற்றை பெருக்கமாக கொடுப்பார். இது ஆச்சரியமான இரகசியமாகும். உங்கள் வருமானத்தை அவர் பெருகப்பண்ணுவார்; உங்கள் ஆஸ்திகளை பெருகப்பண்ணுவார்; உங்கள் அந்தஸ்தை பெருகப்பண்ணுவார்; எப்பக்கமும் உங்கள் கனத்தை உயர்த்துவார். விதைப்பதற்கான விதையை ஆண்டவர் பெருகப்பண்ணுவார்.
ஓர் அருமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். மிகுந்த கடன் பாரத்தினால் தவித்துக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் ஒருநாள் ஜெபிக்கும்படி ஜெப கோபுரத்திற்கு வந்தனர். அப்போது சிறுபிள்ளைகளுக்கு, கர்த்தருக்குக் கொடுப்பதினால் வரும் மகிழ்ச்சியை சிறுவயதிலேயே கற்றுக்கொள்ளும்படி, சிறுக சிறுக பணத்தை சேமிக்கும் பழக்கத்தை உண்டாக்குவதற்காக உண்டியலை கொடுக்கும் வழக்கம் இருந்தது. ஒரு சிறுபிள்ளை உண்டியலில் தான் சேர்த்த காணிக்கையை சந்தோஷமாக கொடுப்பதை அந்தக் குடும்பத்தின் பெண்பிள்ளை பார்த்து, "நானும் இப்படி கொடுக்கவேண்டும். எனக்கும் உண்டியல் வேண்டும்," என்று கேட்டாள். பெற்றோர், தங்களுக்கு இருக்கிற கடனை எண்ணி தயங்கினாலும், அந்த சிறுபெண், தந்தை ஒத்துக்கொள்ளும்வரைக்கும் அழுதாள். தந்தையும் விசுவாசத்துடன் ஓர் உண்டியலை வாங்கி, பணக்கஷ்டத்தின் மத்தியிலும் பெட்ரோலுக்காக வைத்திருந்த சிறுதொகையை அதனுள் போட்டார். அவர்கள் அந்த உண்டியலை ஜெப வீரர்களிடம் கொடுத்தார்கள். சிறுபெண்ணின் முகத்தில் மகிழ்ச்சியால் மலர்ந்தது. அதே வாரத்தில், அப்பெண்ணின் தந்தையின் அதிகாரி அவரை அழைத்து, அவர் நன்றாக வேலை செய்கிறார் என்று பாராட்டி, ஊதிய உயர்வுடன், பதவி உயர்வையும் அளித்தார். அதைக் கேட்ட அவர் ஆச்சரியத்தினால் திகைத்துப்போனார். மகள் மூலமாக மனப்பூர்வமாக அளித்த சிறிய காணிக்கை அவருக்கு நினைவுக்கு வந்தது. அவர்கள் மீண்டும் ஜெப கோபுரத்திற்கு வந்தபோது, இந்த சாட்சியை சந்தோஷத்துடன் கூறினர். இம்முறை அந்தச் சிறுபெண்ணின் உண்டியல் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது; முகம் புன்னகையால் மலர்ந்திருந்தது.
அன்பானவர்களே, மற்றவர்களுக்கு உதாரத்துவமாக கொடுப்பதற்கு உங்கள் இருதயத்தை நீங்கள் பக்குவப்படுத்தும்போது, தேவன் உங்களுக்கு விதைப்பதற்கான விதையை பெருகப்பண்ணுவார். நீதியின் விளைச்சலான உங்கள் விளைச்சலை வர்த்திக்கப்பண்ணுவார். இந்தக் குடும்பத்தினர் அநேகருக்கு ஆசீர்வாதமாக மாறியதுபோல, உங்கள் நீதியும் அனைவர் முன்பாகவும் ஒளிவீசட்டும்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, விசுவாசமும் நன்றியறிதலும் நிறைந்த இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். நீர் சகல ஆசீர்வாதத்திற்கும் காரணராயிருப்பதற்காகவும், விதைக்கிறதற்கு விதையை எனக்குப் பெருகப்பண்ணுவதாகவும், என்னுடைய நீதியின் விளைச்சலை வர்த்திக்கப்பண்ணுவதாகவும் வாக்குத்தத்தம் கொடுத்திருப்பதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் அன்போடு கொடுக்கிறவற்றை நீர் திரும்ப தருவீர்; பெருகப்பண்ணுவீர் என்று நம்பி, உதாரத்துவமாகவும் உற்சாகமாகவும் கொடுப்பதற்கு எனக்கு உதவி புரிந்தருளும். மற்றவர்கள் ஆசீர்வாதம் பெறுவதற்காக தன்னலமில்லாமல் உழைக்கவும், உம்முடைய பரிபூரண கிருபை விளங்கும்படி வாழவும் தக்கதாக உம்முடைய வழிகளை எனக்குப் போதித்தருளும். ஆண்டவரே, உம்முடைய நாமத்திற்கு மகிமை கொண்டு வரும்படி என்னுடைய நீதி பிரகாசமாக ஒளிவீசட்டும். சரீரப்பிரகாரமான, ஆவிக்குரியபிரகாரமான, அதற்கும் மேலான எவ்விதத்திலும் வேண்டியவற்றை நீர் ஆச்சரியமானவிதத்தில் கொடுப்பதை நான் அனுபவிக்கும்படி செய்யும். உலகப்பிரகாரமான ஆசீர்வாதத்தை மாத்திரமல்ல, ஞானத்தையும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் எனக்கு அதிகமாய் தந்தருளும். அநேகரை தொடும்படி என்னை உம்முடைய ஆசீர்வாதத்தின் பாத்திரமாக பயன்படுத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.