அன்பானவர்களே, தேவன் தம்முடைய சகலவித கிருபையையும் உங்களில் பெருகச் செய்ய விரும்புகிறார். "நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்" (2 கொரிந்தியர் 9:8) என்ற வாக்குத்தத்தம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. "நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும்" என்று தமிழ் வேதாகமும், எல்லாம் உங்களுக்குப் போதுமானதாக இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று ஆங்கில மொழிபெயர்ப்பும் கூறுகிறது. இரண்டாவதாக, நீங்கள் சகல நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாய் இருக்கவேண்டும் என்றும், அவரது சகலவித கிருபையும் உங்களில் பெருகவேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார்.
முந்தைய வசனம், "உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" (2 கொரிந்தியர் 9:7) என்று கூறுகிறது. இயேசுவின் நோக்கத்திற்காக, உங்கள் வாழ்க்கையை அவருக்கு உற்சாகமாய்க் கொடுக்கும்போது, உங்கள் நேரத்தை, முயற்சிகளை தேவனுடைய சித்தத்திற்காகக் கொடுக்கும்போது, நீங்கள் சம்பாதிப்பதில் 10 சதவீதம் என்று பணத்தை, ஆண்டவருடைய ஊழியத்திற்காக உற்சாகமாய்க் கொடுக்கும்போது, தேவன் தம்முடைய கிருபையை உங்களில் பெருகப்பண்ணுவார். இந்தக் கிருபை பெருகும்போது, நீங்கள் சகல நற்கிரியைகளிலும் சம்பூரணமடைவீர்கள். தேவனுடைய சித்தத்தை பூரணமாக உங்களால் நிறைவேற்ற முடியும்; இயேசுவைப்போல் பூரணராக முடியும். உங்களில் எதுவும் குறைவுபட்டிருப்பதை பிசாசினால் கண்டுபிடிக்க முடியாது. உங்கள் இருதயம் உங்களை குற்றப்படுத்தாது; குற்ற உணர்ச்சி உங்களை வாட்டாது.
அன்பானவர்களே, தேவன், பரிபூரணத்தின் தேவனாயிருக்கிறார். "பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்" (மத்தேயு 5:48) என்று இயேசு கூறியுள்ளார். மனுஷர்களாகிய நாம் தேவனுடைய பூரணத்தை அடைய இயலாது. ஆனால், நாம் அன்பில், பரிசுத்தத்தில், நியாயத்தில், கொடுப்பதில், உபத்திரவங்களின் மத்தியிலும் தேவனை நம்பி நன்மை செய்வதில் பூரணமாயிருக்கவேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார். இயேசு பாடுகளின் வழியாக பூரணரானார். இன்றைக்கு பாடுபடுகிற யாவரையும் விடுவிப்பதற்கான அனைத்து வல்லமையும் அவருக்கு இருக்கிறது. இந்த உலகின் சோதனைகளுக்கு மத்தியில் நம்மை பூரணராக்கும் வல்லமை அவருக்கு இருக்கிறது. ஆகவே, நாம் இயேசுவை கனப்படுத்தி, இந்த பரிபூரணத்திற்காக அவரை நம்பவேண்டும். வீடுகள், ஆஸ்திகள் போன்ற உலக காரியங்களை நம்பாமல், கிருபையை தருகிற தேவனை நம்பி, பூரணத்தை அடையும்போது, சகலமும் உங்களுக்கு பூரணமாகும். இஸ்ரேலில் ஜெப கோபுரத்தை ஸ்தாபிக்க நாங்கள் விரும்பியபோது, ஒரு கட்டடத்தை வாங்கவேண்டியதிருந்தது. ஆனால், எங்களிடம் பணமில்லை. இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் மூலம் ஆசீர்வாதம் பெற்றவர்கள் தங்களால் இயன்ற அளவு சிறப்பாக கொடுக்கலாம் என்று அறிவித்தோம். ஜனங்கள் தியாகத்துடன் கொடுத்தார்கள். இறுதி நாளுக்கு முன்பதாக ஒரு குடும்பத்தினர் எங்களுடன் உபவாச ஜெபத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் எட்டு ஆண்டுகளாக தங்கள் வீட்டை விற்பதற்கு முயற்சித்து வந்தனர். வாங்க இருந்தவர், அன்று காலை வந்து முன்பணத்தை கொடுத்தார். அவர்கள் ஓடி வந்து, "இந்த தொகையை இஸ்ரேல் ஜெப கோபுரத்திற்கு கொடுக்க விரும்புகிறோம்," என்று கூறினார்கள். ஆண்டவர் உடனே என்னிடம், "இந்த தொகைதான் திறவுகோல்," என்று கூறினார். ஆச்சரியவிதமாக, நான் அந்தக் காணிக்கைக்காக ஜெபித்து, பத்தே நிமிட நேரத்தில் வங்கியிலிருந்து அழைத்து தேவையான தொகையை கொடுத்தார்கள். இன்னொருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தேவையான அரசு அனுமதி அத்தனையும் இப்போதுதான் கிடைத்திருக்கிறது என்று கூறினார். சரியாக 12 மணிக்கு எல்லா நடைமுறையும் முடிந்தது; ஜெப கோபுரம் ஸ்தாபிக்கப்பட்டது. தம்மை நம்பி, தம்முடைய ராஜ்யத்திற்கென தியாகம் செய்கிறவர்களுக்கு தேவன் இந்த பரிபூரணத்தையே அளிக்கிறார். உங்கள் இருதயத்தை, காணிக்கைகளை, முயற்சியை தியாகத்துடன் தேவ பணிக்கென நீங்கள் கொடுக்கும்போது பூரணராகிறீர்கள்; நீங்கள் கொடுத்தவற்றுக்கு 100 மடங்காக இந்த உலகில் பெற்றுக்கொள்வதுடன், நித்திய ஜீவனையும் பெறுவீர்கள்.
இரண்டாவதாக, நீங்கள் சகலவித நற்கிரியையிலும் பெருகுவீர்கள் என்று வேதம் கூறுகிறது. "நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே" (நீதிமொழிகள் 3:27,28) என்று வேதத்தில் வாசிக்கிறோம். தேவைகளோடு யாராவது உங்களிடம் வரும்போது, உங்களுக்கு உதவுவதற்கு திராணி இருக்கும்போது அதைச் செய்யாமல் விட்டுவிடாதிருங்கள். "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" (மத்தேயு 5:14,15) என்று வேதம் கூறுகிறபடி, உலகத்திற்கு வெளிச்சமாயிருப்பதற்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
அன்பானவர்களே, நீங்கள் சகலவற்றிலும் பூரணராக விளங்குவீர்கள் என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். பரிசுத்தத்திலும் தேவனுக்குக் கொடுப்பதிலும், இயேசுவை மற்றவர்களுக்கு அறிவிப்பதிலும் பூரணப்படுவீர்கள். நீங்கள் சகல நற்கிரியையிலும், ஊழியத்தின் வழியாக தரித்திரரை விசாரிப்பதிலும் பெருகுவீர்கள். அப்போது தேவன் உங்களுக்குள் சகலவித கிருபையும் பெருகும்படி செய்வார். இயேசு எப்போதும் உங்களோடிருப்பார்; இந்த கிருபையினால் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நான் எல்லாவற்றிலும் சம்பூரணமாக விளங்கும்படி உம்முடைய கிருபை சகலவிதங்களிலும் விளங்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, உற்சாகமாய் கொடுக்கிறவனா(ளா)க இருக்கவும், என்னுடைய வாழ்க்கையை, நேரத்தை, பொருள்களை உம்முடைய ராஜ்யத்திற்கு சந்தோஷமாக கொடுக்கவும் எனக்கு உதவி செய்யும். நான் எல்லா நற்கிரியையிலும் பெருகி, உம்முடைய பரிசுத்தத்திலும் அன்பிலும் நடக்கும்படி உம்முடைய கிருபை எனக்குள் பெருகுவதாக. நீர் பூரணராயிருப்பதுபோல என்னையும் பூரணனனாக்கும். உண்மையான இருதயத்துடன் இயேசுவை அறிவித்து உலகத்திற்கு வெளிச்சமாக விளங்குவதற்கு என்னை பெலப்படுத்தியருளும். என்னுடைய அதிகாரத்திற்குட்பட்டிருக்கும்போது, தேவையிலுள்ளவர்களுக்கு நன்மை சென்று சேராதவண்ணம் தடுக்காமல் உரியவிதத்தில் நான் செயல்பட உதவும். ஆண்டவரே, என் உள்ளத்திலிருந்து எல்லா அக்கிரமத்தையும் அகற்றி, உமக்கு முன்பாக நான் குற்றமற்றவனா(ளா)ய் காணப்படும்படி செய்யும். உபத்திரவங்கள், இக்கட்டுகளின் மத்தியில் உம்மீது நம்பிக்கை வைக்க எனக்குக் கற்றுத்தாரும். என்னை முழுவதுமாக உமக்கும் உம்முடைய தெய்வீக பணிக்கும் அர்ப்பணிப்பதால் உம்முடைய ஆசீர்வாதம் ஆயிரமடங்காய் என்மீது வருவதாக. எனக்கு எல்லாம் போதுமானதாக, பூரணமாக இருக்கும்படி உம்முடைய கிருபையில் எப்போதும் என்னை எப்போதும் நிலைத்திருக்கப்பண்ணுவதால் உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.