அன்பானவர்களே, "கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்" (ஏசாயா 33:5)என்ற இன்றைய வாக்குத்தத்தத்தைக் குறித்து உங்களுக்கு விளக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.


அன்பானவர்களே, இன்றைக்கு நியாயத்திற்காக காத்திருக்கிறீர்களா? பிரச்னையிலிருந்து விடுபட யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனாலும், பொய்யாய் குற்றம் சாட்டப்படுகிறேன்," என்று கூறுகிறீர்களா? உங்கள் மீது அநியாயமாய் பொய்க் குற்றச்சாட்கள் சுமத்தப்படுவதால், நீங்கள் நியாயத்திற்காக காத்திருக்கக்கூடும். தேவன் உங்களுக்கு நியாயம் செய்வார் என்று இன்றைய வாக்குத்தத்தம் கூறுகிறது. தேவன் உங்களுக்கு நியாயம் செய்வார். அவருடைய நீதியும் நியாயமும் சீக்கிரத்தில் விளங்கும். அவர் உங்களைக் கண்ணோக்கிக்கொண்டிருக்கிறார்; அவர் சீக்கிரத்தில் நியாயம் வெளிப்படும்படி செய்வார்.
கர்நாடகாவை சேர்ந்த ரூபா என்ற சகோதரியின் வாழ்க்கையில் இப்படியே நடந்தது. அவர்களுடன் பணியாற்றுகிற ஒருவர் அவர்கள் நிறுவனத்திலிருந்து ஏதோ ஒரு பொருளை திருடிவிட்டார். அதைக் குறித்த விசாரணை நடந்தபோது, அந்த உடன் பணியாளர், ரூபாவும் அதற்கு உடந்தை என்று பொய்யாய் குற்றம் சாட்டிவிட்டார். ஆகவே, இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தான் எந்தத் தவறும் செய்யாததால், தனக்கு நியாயம் கிடைக்குமா என்று திகைத்தார்கள்; வருத்தமடைந்தார்கள். அப்போது அவர்கள் பெங்களூருவில் ஜெயநகரில் அமைந்துள்ள ஜெப கோபுரத்திற்குச் சென்றார்கள். இயேசுவின் பாதத்தில் கண்ணீர் விட்டார்கள். ஜெப வீரர் அவர்களுக்காக ஜெபித்து அனுப்பினார். மூன்று நாள்கள் கழித்து, தன் பக்க நியாயத்தை நிரூபிக்கும்படி அவர்கள் நிறுவனத்திற்கு திரும்ப முடிவு செய்தார்கள். அவர்கள் முதலாளியின் அலுவலத்திற்கு சென்றார்கள். அவர்கள் பேசுவதற்கு ஆரம்பிக்கும் முன்னரே, அவர், அவர்களிடம் எந்தத் தவற்றையும் காணவில்லை என்று கூறி, வேலைக்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அவர்கள் மனதில் ஆறுதலடைந்தார்கள். தன் பக்க நியாயத்தை நிரூபிக்காமலே வேலை திரும்ப கிடைத்ததை நம்ப முடியாமல் மிகவும் ஆச்சரியமடைந்தார்கள்.
ஆம், அன்பானவர்களே,  தேவன் அந்த சகோதரிக்கு நியாயம் செய்தார். அவ்வாறே உங்களுக்கும் செய்வார். நடப்பதை யாராவது பார்க்கிறார்களா, தேவன் கண்ணோக்குகிறாரா என்ற சந்தேகத்துடன், வாழ்வில் நியாயம் வரும்படி நீங்கள் காத்திருக்கக்கூடும். அன்பானவர்களே, தேவன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்; அவர் சீக்கிரத்தில் நியாயம் வெளிப்படும்படி செய்வார். ஆகவே, சந்தோஷமாயிருங்கள்.


ஜெபம்:


அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்வில் உம்முடைய நியாயமும் நீதியும் விளங்கும்படி இன்றைக்கு உம் முன்னே வருகிறேன். பொய்யான குற்றச்சாட்டுகளும், அநீதியான நடைமுறையும் பாரமாய் என்னை அழுத்துகின்றன. நீர் எல்லாவற்றையும் பார்த்து சீக்கிரத்தில் நியாயம் செய்வீர் என்று உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் விசுவாசமாய் இருக்கிறேன். எல்லாவற்றையும் சகிப்பதற்கான பெலனையும் உம்முடைய வேளையை நம்புவதற்கான விசுவாசத்தையும் எனக்கு தந்தருளும். நீர் என்னை கண்ணோக்கி, எனக்காக கிரியை செய்வதை நான் அறிவதால், என் இருதயம் சமாதானத்தினால் நிரம்பும்படி செய்யும். உம்முடைய அன்பில் நான் நிலைத்திருக்கவும் உம்முடைய நீதியின்மேல் திடநம்பிக்கையோடிருக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆபத்துக்காலத்தில் நீர் எனக்கு அடைக்கலமாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்மேல் நான் விசுவாசம் வைத்து, உம்முடைய நியாயத்திற்காக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் காத்திருக்கிறேன் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.