அன்பானவர்களே, "பூமி தன் பூண்டுகளை விளைவிப்பதுபோலவும் தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும் கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்" (ஏசாயா 61:11) என்ற வசனத்தின்படி ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.


உங்கள் வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் ஆண்டவர் தோட்டக்காரரைப் போல இருக்கிறார். ஒரு தோட்டக்காரர் தன்னுடைய தோட்டத்தை பண்படுத்துவதுபோல, ஆண்டவர் உங்கள் வாழ்க்கையில் எல்லா காரியங்களையும் பொறுப்பெடுத்துக்கொள்கிறார். அவர் தம் வார்த்தையாகிய விதைகளை உங்கள் இருதயத்தில் விதைக்கிறார். அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சுகிறார்; தம்முடைய பரிசுத்த ஆவியினால் இருதயத்தை நிரப்புகிறார். தம் வார்த்தைகள் தளிர்த்து, வளர்ந்து, மலரும்படி செய்கிறார். கர்த்தர் மகா வறட்சியான இடங்களிலும் உங்களை வழிநடத்தி, உங்கள் வாஞ்சைகளை அருளுவார் என்றும், உங்கள் எலும்புகளை பெலப்படுத்துவார் என்றும் வேதம் கூறுகிறது (ஏசாயா 58:11). நீங்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பீர்கள். ஆண்டவர் எவ்வளவாய் தனிப்பட்டவிதத்தில் உங்கள்மேல் அக்கறையாயிருக்கிறார் பாருங்கள்! தொடர்ந்து உங்களை ஆசீர்வதிக்க அவர் நினைவாயிருக்கிறார். உங்கள் நீதி, நியாயம், துதி ஆகியவை தளிர்க்கும்படி அவர் செய்வார்.

 


இதைக் குறித்து எழுதும்போது, உமையாள்வதி என்ற சகோதரியின் சாட்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர்கள்  வீடு கட்டிக்கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்கள் பக்கத்து வீட்டுக்காரர் இவர்கள் அவருடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக பொய்யாய் குற்றம் சாட்சி வழக்கு தொடர்ந்தார். இந்த இக்கட்டுகளின் மத்தியில் அவர்கள் சென்னையிலுள்ள ஜே.சி.ஹவுஸ் ஜெப கோபுரத்திற்கு ஆறுதல் தேடி வந்தார்கள். அங்கு தியான அறையில் ஜெபித்தபோது, அங்கு எழுதப்பட்டிருந்த "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்" (சங்கீதம் 138:8) என்ற வசனம் அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. இதை வாசித்து மிகுந்த சமாதானத்தோடு அவர்கள் வீட்டுக்குத் திரும்பினார்கள். அவர்கள் விசுவாசித்தபடியே ஆண்டவர் அற்புதவிதமாக இடைப்பட்டு, விசாரணை இல்லாமலே அவர்கள் சட்ட பிரச்னைகள் தீரும்படி செய்தார். பக்கத்துவீட்டுக்காரர் அவர்களை கட்டடம் கட்ட அனுமதித்ததுடன், சுற்றுச்சுவரும் எழுப்பினார். இன்றைக்கு ஆண்டவர் எவ்வித பிரச்னையும் தடையும் இல்லாமல் அருளிய அழகிய வீட்டில் வசித்தபடி அவர்கள் சாட்சி கொடுக்கிறார்கள். நமக்கென்று எல்லாவற்றையும் செய்ய மனமுள்ளவராய் நம் தேவன் இருக்கிறார். நிச்சயமாகவே அவர் நம்முடைய நீதியும் நியாயமும் துதியும் தளிர்க்கும்படி செய்வார். ஆகவே, சந்தோஷமாயிருங்கள்.


ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்வில் எல்லாவற்றையும் செய்வதாக வாக்குப்பண்ணுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் நீதியின் தேவன். என்னுடைய நீதியும் நியாயமும் துதியும் தளிர்க்கும்படி செய்வதாக வாக்குப்பண்ணுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். தோட்டக்காரர், தோட்டத்தை பண்படுத்துவதுபோல, நீர் என் வாழ்க்கையை பண்படுத்துகிறீர்.  உம் வார்த்தைகளை என் இருதயத்தில் விதைத்து, அவற்றுக்கு நீர்ப்பாய்ச்சி, என் இருதயத்தை உம்முடைய பரிசுத்த ஆவியால் நிரப்புவதற்காகவும், உம் வார்த்தை என் இருதயத்தில் தளிர்த்து, வளர்ந்து, மலரச் செய்வதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்றைக்கு எனக்கு இருக்கும் எல்லா பிரச்னையும் தடையும் உம்முடைய வல்லமையுள்ள நாமத்தில் மறைந்துபோகட்டும்; நீர் அருளும் ஜெயத்தை நான் அனுபவிக்கட்டும். உம்முடைய சமாதானம் என் வாழ்க்கையில் நதியைப் போல பாய்ந்து வரட்டும்; என்னை உம்முடைய மகிமைக்கென்று நீர்ப்பாய்ச்சலாகவும், கனி கொடுக்கிறவனா(ளா)கவும் மாற்றவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.