அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு" (யோவான் 5:24) என்ற வேத வசனத்தை இன்றைக்கு தியானிப்போம். எவ்வளவு அற்புதமான வாக்குத்தத்தத்தை தேவன் தந்திருக்கிறார் பாருங்கள்! நாம் தம்முடைய வசனத்தை கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, முழு இருதயத்துடனும் தம்மை நம்பவேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். அநேகமுறை நாம் தேவனுடைய வசனத்தை கேட்கிறோம்; ஆனால், அதை விசுவாசிப்பதுதான் சிரமமாகிவிடுகிறது. ஒருவேளை, நீங்கள் ஒரு அற்புதம் நடக்க காத்திருக்கலாம்; தோல்விகளே உங்களைச் சூழ்ந்திருப்பதாக நினைக்கலாம்; இருள் உங்களைப் பற்றிக்கொண்டதாக, துக்கமும் மனச்சோர்வும் உங்களை அழுத்துவதாக தோன்றலாம். தேவன்பேரில் நம்பிக்கை வைப்பது கூடாத காரியம் என்பதுபோல, உங்கள் விசுவாசம் மங்கிப்போயிருக்கலாம். அன்பானவர்களே, இதுபோன்ற நிலையிலும் நாம் தேவனுடைய வசனத்திற்குச் செவிகொடுத்து, அதை விசுவாசிக்கும்போது, சந்தோஷமும் சமாதானமும் ஜெயமும் நிறைந்த நித்திய ஜீவன் நமக்குக் கிடைக்கும் என்ற வாக்குத்தத்தம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜேனட் என்ற இளம்பெண் தன் சாட்சியை பகிர்ந்துகொண்டுள்ளார்கள். அவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். வாழ்வில் இருள் சூழ்ந்த நிலையில், மனம் சோர்ந்துபோயிருந்தார்கள். ஒரு காரியமும் சரியாக நடக்காத முடியாத சூழல் இருந்தது. இப்படி போராட்டமான நிலையில், சென்னை வானகரத்தில் நடந்த அற்புத உபவாச ஜெபத்தில் கலந்துகொள்ள வருமாறு ஜேனட்டின் அம்மா அவர்களை அழைத்தார்கள். தனக்கு அதில் ஆர்வமில்லை என்று மறுத்தபோதிலும், ஜேனட்டின் அம்மா, முழு விசுவாசத்துடன், ஜெபத்தில் கலந்துகொண்டால் நிச்சயம் வாழ்க்கை மாறும் என்று வற்புறுத்தி அழைத்தார்கள். ஜேனட், தனக்கு மனமில்லாதபோதும், அம்மாவுடன் ஜெபத்திற்கு வர ஒத்துக்கொண்டார்கள்.

உபவாச ஜெபத்தில் உட்கார்ந்து, அங்கு கூறப்பட்ட வார்த்தைகளை கவனித்துக்கொண்டிருந்தார்கள். "நான் தனிமையாக இருப்பதாக உணர்கிறேன். இருளுக்குள் கிடப்பதுபோல் உள்ளது. உண்மையாகவே என் வாழ்க்கை மாறுமா? என் பிரச்னைகளுக்கு முடிவு வருமா?" என்று தன்னைக் குறித்து யோசித்துக்கொண்டிருந்தார்கள். ஜெப வேளையில் Dr. பால் தினகரன், மக்களை பெயர் சொல்லி அழைத்து, தீர்க்கதரிசனமாக அவர்கள் பிரச்னைகளை கூற தொடங்கினார். "இவர் அநேகருடைய பெயர்களை சொல்லி அழைக்கிறார். என் பெயரை எப்போதாவது அழைப்பாரா?" என்று எண்ணினார்கள். அப்போது Dr. பால் தினகரன், "ஜேனட், உங்கள் வாழ்க்கையிலிருந்து எல்லா இருளும் விலகுகிறது; விடுதலை பெறுங்கள்," என்று கூறினார். அப்போதே பெரிய சமாதானம் தன் உள்ளத்தை நிரப்புவதை ஜேனட் உணர்ந்தார்கள். மறுநாள் அவர்கள் கல்லூரிக்குச் சென்றபோது பெரிய வித்தியாசத்தை கண்டார்கள். எல்லாம் மாறியிருந்தது. அவர்கள் வாழ்க்கையை சூழ்ந்திருந்த இருள் அகன்றிருந்தது. அன்றிலிருந்து அவர்கள் இயேசுவின் சந்தோஷமும், நல்ல நோக்கமும் நிறைந்ததான வாழ்க்கையை அவருக்காக வாழ தொடங்கினார்கள்.

அன்பானவர்களே, அநேகவேளைகளில் நாம் தேவனுடைய வசனத்தை கேட்கிறோம்; அவரைப் பற்றி அறிகிறோம். ஆனாலும், நம்முடைய பிரச்னைகள், மனதில் ஏற்படும் சோர்வு, எதிர்கொள்ளும் இக்கட்டுகளினால் விசுவாசத்தில் உறுதியாயிருப்பது சிரமமாகிவிடுகிறது. இன்றைக்கு தேவனுடைய வார்த்தையை கேட்கும்போது, உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்ற வல்லவரான இயேசுவை விசுவாசியுங்கள். அவர் தம் ஜீவனை உங்களுக்காக கொடுத்தார்; கல்லறையிலிருந்து மறுபடியும் எழுந்திருந்தார்; உங்களுக்கு நம்பிக்கையையும் வெற்றியையும் அளிக்கும்படி இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவரை நீங்கள் விசுவாசித்தால், நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்துகின்ற, நீதியான வாழ்க்கையை வாழ்வீர்கள். உங்களை சூழ்ந்திருக்கும் எல்லா இருளும் அகற்றப்படும்; உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்; உங்கள் உடலிலுள்ள எல்லா நோய்களும் குணமாகும்.

ஆம், இன்றைய தினம் வெறுமனே தேவனுடைய வார்த்தையை கேட்கிற நாள் அல்ல; கர்த்தரின் வல்லமையை முழுவதுமாய் விசுவாசிக்கிற நாள். அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது, நித்திய ஜீவனை அடைவீர்கள்; இவ்வுல வாழ்க்கையிலும் சந்தோஷமும் சமாதானமும் தேவ பிரசன்னமும் நிறைந்து காணப்படும். இயேசு உங்கள் பட்சத்தில் இருக்கும்போது, எல்லாம் மாறிப்போகும். இயேசுவை விசுவாசிப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை பெற்றுக்கொள்ள உங்களை இன்று அர்ப்பணிப்பீர்களா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்மேல் நான் நம்பிக்கை வைப்பதால் என் வாழ்க்கையை சந்தோஷத்தினால் நிரப்புவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து, நன்றியுள்ள இருதயத்துடன் உம் சமுகத்திற்கு வருகிறேன். என்னுடைய வேதனை, துக்கம், வியாதி எல்லாவற்றையும் நீர் அகற்றி, பிரகாசிக்கிற வெளிச்சத்தையும், நிரம்பி வழிகிற சந்தோஷத்தையும், பூரண ஆரோக்கியத்தையும், சமாதானத்தையும் அளிக்கிறீர். எப்போதும் உம்முடைய சமுகத்தில் இருக்கும்படி நித்திய ஜீவனாகிய ஈவை பெற்றுக்கொள்ள என்னை ஆயத்தப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்றைக்கு உம்முடைய வார்த்தைகளை கேட்பதோடு மட்டுமல்லாமல், நீர் ஜீவிக்கிற தேவன் என்றும், எனக்காக உம் ஜீவனை கொடுத்தீர் என்றும், ஜெயமாய் மறுபடியும் எழுந்தீர் என்றும் முழு இருதயத்தோடு விசுவாசிக்க உதவி செய்யும். என் துக்கத்தை சந்தோஷமாகவும், என் போராட்டங்களை வெற்றியாகவும் மாற்றும் வல்லமை உமக்கு உண்டு என்று முழு மனதோடு விசுவாசிக்கிறேன். நான் ஜெபிக்கும் இந்த வேளையில் என் வாழ்வில் நீர் கிரியை செய்யும். உம்முடைய பரிபூரண ஜீவனையும், அளவற்ற சந்தோஷத்தையும் நான் அனுபவிக்கும் செய்யும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.