அன்பானவர்களே, இயேசு நம்மை எங்கெல்லாம் நடத்துகிறாரோ அங்கெல்லாம் அவரை நாம் பின்தொடர்ந்து செல்வதால் இன்றைய தினம் நமக்கு மகிழ்ச்சியானதாக அமையும். சிறுபிள்ளைகள் தங்கள் பெற்றோரை அப்படியே நம்பி, பின்தொடர்வதுபோல, ஆண்டவரும் நம்மை செழிப்பான இடங்களுக்கு நேராக வழிநடத்துகிறார். இன்றைக்கு, "நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன்" (எபிரெயர் 6:14) என்ற வசனத்தின் மூலம் அவர் நம்மை வழிநடத்துகிறார். தேவன் நம்மை ஆசீர்வதித்து பெருகப்பண்ணவே விரும்புகிறார். ஆகவேதான் அவர் உலகை பெரிதாகப் படைத்து மனுஷனை ஏதேன் தோட்டத்தில் வைத்தார். எல்லாமே நன்றாயிருந்தது. பறவைகள் பாடின; காலையில் சூரியன் பிரகாசித்தது; தண்ணீர் பாய்ந்தது; கரையோரங்கள் செழித்திருந்தன. தேவன் இப்படியே கிரியை செய்தார். அவர் சகலவற்றையும் நேர்த்தியாக செய்தார்.

அன்பானவர்களே, இன்றைக்கு அவர் உங்கள் வாழ்க்கைக்குள் வந்து, உங்களை ஆசீர்வதித்து, உங்களைப் பெருகப்பண்ண விரும்புகிறார். உங்கள் தகுதியை நீங்களே இழந்துபோகாதீர்கள். நீங்கள் செய்த எந்தக் கிரியையினாலும் அல்ல; அவர் உங்கள்மேல் வைத்திருக்கும் பெரிதான கிருபையினாலேயே நீங்கள் ஆசீர்வாதம் பெற தகுதியாகிறீர்கள்.

சுமீத் என்ற ஒருவர் இருக்கிறார். அவர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் சரக்குகளை வைத்திருக்கும் இடத்திற்கு பொறுப்பாளராக இருந்தார். அவர் இயேசு அழைக்கிறார் இளம் பங்காளர். மூன்று ஆண்டுகளாக அவர் பதவி உயர்வுக்காக காத்திருந்தார். சம்பள உயர்வுக்காக அவர் முயற்சித்தும் எதுவும் கூடாமல் இருந்தது.

இந்தச் சூழ்நிலையில், லக்னோவில் நடைபெற்ற இயேசு அழைக்கிறார் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். "ஆண்டவரே, இன்றைக்கு எனக்கு பதவி உயர்வு தாரும். தயவுசெய்து ஏதாவது செய்தருளும்," என்று ஊக்கமாக ஜெபித்தார். கூட்டம் முடிந்ததும் நான் அவருக்காக தனியே ஜெபித்தேன். அன்று இரவு, அவரது அலுவலகத்திலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதில், "சுமீத், பாராட்டுகள். நீங்கள் கிளை மேலாளராக பதவி உயர்த்தப்பட்டிருக்கிறீர்கள்," என்று கூறப்பட்டிருந்தது. அவர் சந்தோஷத்தினால் நிறைந்தவராய், "ஆண்டவர் என் ஜெபத்தை கேட்டார். இயேசுவே உமக்கு நன்றி," என்று கூறினார். தேவன் அவரை ஆசீர்வதித்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்து பெருகப்பண்ணினார். இப்போது சுமீத், எம்.காம் படிப்பிலும் சேர்ந்திருக்கிறார். வேலையில் இன்னும் ஆண்டவர் அவரை உயர்த்திக்கொண்டே இருக்கிறார். அன்பானவர்களே, இது உங்களுக்கான தருணம். நீங்களும் ஆண்டவரிடம் கேட்பீர்களா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய அநாதி அன்பு என்னை சூழ்ந்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னை ஆசீர்வதித்து பெருகப்பண்ணுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் எனக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கிற பெருக்கத்தை, ஏற்றுக்கொள்ளும்படி இன்றைக்கு என் இருதயத்தை திறக்கிறேன். என் கையின் பிரயாசங்களை பெருகப்பண்ணி, நான் செய்கிற யாவற்றையும் வர்த்திக்கப்பண்ணும். என் குடும்பத்தை, என் விசுவாசத்தை, என் அழைப்பை உம்முடைய வல்லமையினால் பெலப்படுத்தும். என் பொருளாதாரமும் என் நீதியும் அனுதினமும் வளர்ந்து பெருகட்டும். ஆண்டவரே, நான் நினைத்துப்பார்க்காதவண்ணம் என்னை ஆசீர்வதிப்பீர் என்று நம்புகிறேன். நீர் அளிக்கும் பெருக்கத்தை விசுவாசத்துடனும் நன்றியுடனும் பெற்றுக்கொண்டு, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.