அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். "கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்" (சங்கீதம் 115:14) என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய ஆசீர்வாதம் நம்மை பெருகப்பண்ணுகிறது. தேவன் நம்மைக் குறித்து நினைக்கும்போது, அவரிடமிருந்து நாம் பெருக்கத்தை பலனாக பெறுகிறோம். "என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்" (சங்கீதம் 40:5) என்று வேதம் கூறுகிறது. தேவன், தாவீதை பரிபூரணமாக ஆசீர்வதித்தார். ஆகவேதான் அவன், "கர்த்தாவே, நான் சிறுமையும் எளிமையுமானவன், நீரோ என்மேல் நினைவாயிருக்கிறீர்," என்று கூறினான். ஆம், தேவன் நம்மைக் குறித்து நினைக்கும்போது, நாம் பெருக்கமடைகிறோம். ஒருபோதும், "நான் குறுகிப்போகிறேன்," என்று கூறாதிருங்கள். தேவன் உங்களுக்குப் பின்னணியில் கிரியை செய்துகொண்டிருக்கிறார். அவர் உங்களுக்காக நேர்த்தியான திட்டத்தை வைத்திருக்கிறார். உங்களைக் குறித்த தேவனுடைய நினைவு குறுகியதல்ல.

"உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்" (ஏசாயா 51:2) என்று தேவன் கூறுகிறார். தேவன் ஏன் ஆபிரகாமை ஆசீர்வதித்தார்? தம்முடைய ராஜ்யத்தை பூமியில் கட்டும்படியாக ஆசீர்வதித்தார். அதற்காகவே உங்களையும் என்னையும் ஆசீர்வதிப்பதற்கு தேவன் விரும்புகிறார். ஆபிரகாமை ஆசீர்வதித்தபோது, "உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் " (ஆதியாகமம் 22:16-18) என்று அவர் கூறினார். தேவனுடைய ஆசீர்வாதங்கள் நமக்கு மட்டுமே உரியவை அல்ல. அவை நம் பிள்ளைகளுக்கும் உரியவையாயிருக்கிறது. அதன் மூலமாக நாம் பிறருக்கும் ஆசீர்வாதத்தை அளிக்க முடியும். தேவனுடைய ஆசீர்வாதங்களை நாம் பகிர்ந்துகொள்ளவேண்டுமென்பதே நம்மைக் குறித்து அவருடைய சித்தமாயிருக்கிறது. அவர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் மட்டும் ஆசீர்வதிப்பதோடு நின்றுவிடமாட்டார். உங்களோடு தொடர்பில் இருக்கிறவர்கள் அனைவரையும், உங்களுக்கானவை அனைத்தையும் அவர் ஆசீர்வதிப்பார். "கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்" (2 சாமுவேல் 6:11) என்று வேதம் கூறுகிறதுபோல, தேவனுடைய வார்த்தையை நம் வீடுகளில் வைத்திருப்பது அவசியம். நம் வீடுகளில் மாத்திரமல்ல, நம்முடைய பிள்ளைகளின் இருதயங்களிலும் அவை இருக்கவேண்டும். தேவனுடைய வார்த்தை நமக்குள் இருக்கும்போது, நமக்குரியவை யாவற்றையும் அவர் ஆசீர்வதிப்பார். உங்கள் வாழ்வில் தேவன், பெருக்கத்தையும் முன்னேற்றத்தையும் கனியையும் விஸ்தரிப்பையும்  உண்டாக்கவேண்டும். ஆண்டவர்தாமே உங்களிலும் உங்கள் பிள்ளைகளிலும் உங்கள் வீட்டாரிலும் உங்களுக்குண்டானவை யாவற்றிலும் பெருக்கமுண்டாகச் செய்வாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் பரிபூரண ஆசீர்வாதத்தை அளிப்பதற்காகவும் எப்போதும் என்னைக் குறித்து நினைத்துக்கொண்டிருப்பதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீரே என்னை பெருகப்பண்ணி, என் எல்லைகளை விரிவாக்குகிறீர். ஆபிரகாம், தாவீது ஆகியோரின் வாழ்க்கையில் உம்முடைய சித்தத்தை நீர் நிறைவேற்றியதுபோல, என்னிலும் உம்முடைய நினைவுகளை நிறைவேற்றும். என்னையும் என் பிள்ளைகளையும் ஆசீர்வதித்து, என் குடும்பம் பிறருக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி செய்யும். உம்முடைய வார்த்தை என் உள்ளத்திலும் வீட்டிலும் இருந்து எங்களை வழிநடத்துவதாக. வானத்தின் பலகணிகளை திறந்து எங்களுக்கு வேண்டிய ஆசீர்வாதங்களை பொழிந்தருளுவீராக. உம்முடைய நினைவுகளை நாங்கள் காண இயலாவிட்டாலும் அவற்றை நம்புவதற்கு எனக்கு உதவி செய்யும். என் வாழ்வில் உம்முடைய அதிசயங்கள் விளங்கியும், என் மூலம் உம்முடைய ராஜ்யம் கட்டப்பட்டும் உம்முடைய நாமத்திற்கு மகிமை உண்டாகவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.