அன்பானவர்களே, உங்களோடு வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு, "என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன்" (லூக்கா 6:47) என்ற வசனத்தை தியானிப்போம்.
இரண்டு மனுஷர்கள் கட்டிய வீடுகள் குறித்த உவமையை இயேசு கூறுவதை இங்கு வாசிக்கிறோம். ஒருவர், ஆழமாய்த் தோண்டி கற்பாறையின்மேல் அஸ்திபாரம் போட்டு தன் வீட்டை கட்டினார். காற்று வீசியபோதும் அவர் வீடு அசையாமல் நின்றது. இன்னொருவர் தன் வீட்டை மணலின்மேல் கட்டினார். ஆகவே, காற்று வீசியபோது அவரது வீடு அழிந்துபோனது. தம்முடைய வசனங்களைக் கேட்டு, அவற்றை பின்பற்றி, தங்கள் வீடுகளை ஸ்திரமான அஸ்திபாரத்தின்மேல் கட்டுகிறவர்கள், உபத்திரவங்களை எதிர்கொள்ள நேரும்போது, தேவனுடைய வார்த்தையில் வேர்கொண்டவர்களாக, தேவன் தங்களை பொறுப்பெடுத்துக்கொள்வார் என்ற திடநம்பிக்கையுடன் உறுதியாக நிற்பார்கள் என்று இயேசு விளக்கினார். துர்ச்செய்திக்கோ, பாடுகளுக்கோ அவர்கள் பயப்படமாட்டார்கள். தேவனுடைய வார்த்தைகளை பின்பற்றாதவர்கள், உபத்திரவங்களை எதிர்கொள்ளும்போது குழம்புவார்கள்; பயப்படுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் சமாதானம் குறைந்துபோகும்.
அன்பானவர்களே, இன்றைக்கு தேவனுடைய வசனத்தை தியானிப்பது எவ்வளவு சந்தோஷமானது. அவருடைய வார்த்தையை நம் வாழ்க்கையில் தொடர்ந்து செயல்படுத்துவோம். அது, தாயும் தகப்பனும் தங்கள் பிள்ளை நல்ல வழியில் நடக்கும்படி போதிப்பதுபோல் உள்ளது. நல்ல வழியில் நடப்பதாகட்டும்; வேதாகமத்தை வாசிப்பதாகட்டும்; மற்றவர்களிடம் அன்பு காட்டுவதாக இருக்கட்டும், பெற்றோர், பிள்ளைகளுக்கு போதிப்பதை தாங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்காமல் இருந்தால், பிள்ளையும், "நான் மட்டும் ஏன் அப்படி செய்யவேண்டும்?" என்று கேட்டு, பெற்றோர் போதிப்பதைப் போல் அல்லாமல், நடப்பதைப் போல தானும் நடக்க ஆரம்பிக்கும்.
அன்பானவர்களே, தேவனுடைய வார்த்தையை கவனித்து, அவரது போதனைகளைக் கைக்கொள்வது நமக்கு திடமான அஸ்திபாரமாக அமையும் என்பதால், அப்படிச் செய்வது முக்கியமாகும். கரடுமுரடான பாதைகளில் நடக்க நேரிடும்போதும் நாம் உறுதியாய் இருப்போம். ஆகவே, இன்றைக்கு தேவனுடைய வார்த்தையை கவனித்து, அவர் வழிகாட்டுகிறபடி நடப்போம். அப்போது நம் வாழ்வு உறுதியானதாக, செழிப்பானதாக அமையும். தேவனுடைய நன்றி செலுத்தி, இந்த வாக்குத்தத்தத்தை இன்றைக்கு ஏற்றுக்கொள்வோம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்மில் நம்பிக்கை கொள்ளும்படி எனக்கு போதிக்கிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். அனுதினமும் உம்முடைய வசனத்தை வாசிக்கும்போது, உம்முடைய குரலை கேட்கும்போது, அவற்றின்படி நடப்பதற்கு எனக்கு உதவி செய்யும். உம்முடைய சித்தத்தை செய்யவும், உம்முடைய சுபாவத்தை பிரதிபலிக்கவும், சரியானவற்றை செய்யவும், பரிசுத்தமாக வாழவும் எனக்கு உதவி செய்யும். உபத்திரவங்கள் வரும்போது, தொல்லைகள் எழும்போது, நீர் என் அருகில் இருக்கிறீரா என்று ஒருபோதும் உம்மை நான் கேட்காதிருக்க உதவும். நீர் ஜெயத்தின் பாதையில் என்னை நடத்துகிறீர் என்றும், ஒருபோதும் அசைக்கப்படாதிருக்கும்வண்ணம் என்னை வழிநடத்துகிறீர் என்றும் உறுதியாக நம்பும்படி செய்யும். உம்முடைய வசனமாகிய உறுதியான அஸ்திபாரத்தின்மேல் என் வீட்டையும் வாழ்க்கையையும் கட்டுவதற்கு உதவி செய்கிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நல்ல மாதிரியாக திகழும்படி என் வாழ்க்கையை நடத்தி, உம்முடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வர உதவவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.