அன்பானவர்களே, "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்" (எரேமியா 33:3) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். ஆம், "என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உனக்கு பதில் அளிப்பேன்," என்று ஆண்டவர் இயேசு கூறுகிறார். "தேவனாகிய கர்த்தராகிய நான் உனக்கு பதில் அளித்து, நீ அறியாததும் ஆராய்ந்து முடியாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்," என்று கூறுகிறார். இதுவே உங்களுக்கான தேவனுடைய வாக்குத்தத்தமாகும். நீங்கள் தேவனை நோக்கிக் கூப்பிட்டால், அவரால் எல்லாம் கூடும். ஆகவேதான் இயேசு, "என் நாமத்தினாலே எந்தக் காரியத்தையும் கேளுங்கள். நான் அதைச் செய்வேன்," என்று கூறியுள்ளார். "என் நாமத்தினாலே கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான்," என்றும் அவர் சொல்லியிருக்கிறார். இயேசுவின் நாமத்தில் முழங்கால்கள் யாவும் முடங்கும்; அவரது நாமத்தில் எல்லா பிசாசுகளும் ஓடும். அவருடைய நாமத்தினாலே நீங்கள் கேட்கும்போது, உங்கள் உள்ளம் சந்தோஷத்தினால் நிரம்பும்.

ஆகவே, உங்களுக்குத் தேவையானவற்றை இன்று அவரிடம் கேளுங்கள். "ஆண்டவரே, இந்த ஆசீர்வாதங்களை இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். என் தேவைகளை சந்தியும்," என்று வேண்டிக்கொள்ளுங்கள். பாவமோ, ஆவிக்குரிய பெலவீனமோ உங்களுக்கு பாரமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அவற்றை வரிசையாக எழுதி, "ஆண்டவரே, இயேசுவின் நாமத்தினால் நாங்கள் சுத்திகரிக்கப்பட்டிருக்கிறோம் என்று உம்முடைய வார்த்தை சொல்லுகிறது," என்று கூறுங்கள். பிறகு, தேவன் உங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, தைரியத்துடன், "இயேசுவின் நாமத்தினால் என் பாவங்கள் மன்னிக்கப்பட்டன," என்று அறிக்கையிடுங்கள். "இந்தப் பாவங்களை மறுபடி ஒருபோதும் செய்யாமலிருப்பதற்கான பெலனை இயேசுவின் நாமத்தில் எனக்கு தந்தருளும்," என்று கேளுங்கள். தேவன் அதற்குப் பதிலளிப்பார். இயேசு பதிலளிப்பார். அவர் உங்களை சுத்திகரிப்பார். உங்கள் வாழ்விலிருந்து அவர் எல்லா சாபத்தையும் அகற்றுவார். இன்றைக்கு உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும்படி அவர் எல்லா ஆசீர்வாதங்களையும் பொழிந்தருளுவார்.

பெங்களூருவை சேர்ந்த நிஷா என்ற சகோதரியின் சாட்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் பார்த்த வேலைக்கு மிகக்குறைந்த சம்பளமே கிடைத்தது. ஆகவே, அவர்கள் அந்த பணியிலிருந்து விலகினார்கள். பல்வேறு நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றாலும், எல்லா இடங்களிலும் நிராகரிக்கப்பட்டார்கள். தொடர்ந்து தோல்வியே கிடைத்ததால், அவர்கள் மனச்சோர்வடைந்தார்கள். "எனக்கு இனி எதிர்காலமே இல்லை. அவ்வளவுதான்!" என்று அவர்கள் தனக்குள் எண்ணினார்கள். வாழ்வின் இருளான அந்தத் தருணத்தில் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை தென்பட்டது. அவர்கள் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் தன்னார்வ ஊழியம் செய்ய தொடங்கினார்கள்; மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய தன்னை அர்ப்பணித்தார்கள். இயேசு அழைக்கிறார் யூடியூப் சேனலையும் தொடர்ந்து பார்த்தார்கள். ஒருநாள் அப்படி பார்த்துக்கொண்டிருந்தபோது, நான் தீர்க்கதரிசன அபிஷேகத்தில், "நீங்கள் இழந்துபோன ஆசீர்வாதங்களை இரட்டிப்பாக பெற்றுக்கொள்வீர்கள்," என்று கூறியிருக்கிறேன். இந்த வார்த்தைகள் அவர்களுக்குள் புது நம்பிக்கையை உருவாக்கியுள்ளன. சில நாள்களுக்குள், முன்பு அவர்கள் வாங்கிய ஊதியத்தை விட இருமடங்கு ஊதியத்தில் நல்ல வேலை அவர்களுக்குக் கிடைத்துள்ளது. இயேசு உங்களுக்கும் அப்படியே செய்வார். அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்; அவர் பதில் அளிப்பார்; ஆராய்ந்துமுடியாத பெரிய காரியங்கள் அவர் காண்பிப்பார்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, இன்று நீர் கொடுத்துள்ள வாக்குத்தத்தத்தை நம்பி உம்மண்டை வருகிறேன். எல்லா நாமங்களுக்கும் மேலான ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் நான் கூப்பிடுகிறேன். தயவாய் எனக்கு பதில் அளித்து, மகத்துவமும் ஆராய்ந்துமுடியாததுமான ஆச்சரியமான காரியங்களை எனக்கு வெளிப்படுத்தும். என் பாவங்களை மன்னித்து, என்னை சுத்திகரித்து, நீதியாய் நடப்பதற்கான பெலனை எனக்குத் தந்தருளும். எல்லா தேவைகளும் சந்திக்கப்படவேண்டும்; எல்லா பாரமும் அகற்றப்படவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். எல்லா சாபமும் முறிக்கப்படட்டும்; உம்முடைய பரிபூரண ஆசீர்வாதங்கள் என் வாழ்வில் புரண்டு வரட்டும். என் உள்ளத்தை சந்தோஷத்தாலும் சமாதானத்தினாலும் உம்முடைய மகத்தான வல்லமையின் மீதான விசுவாசத்தினாலும் நிறைத்திடும். இயேசுவின் நாமத்தில் எல்லா அடிமைத்தன சங்கிலிகளும் அறுந்துபோகட்டும்; எல்லா பயமும் அகன்றுபோகட்டும். ஆண்டவரே, எல்லாவற்றையும் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து, நான் அறிந்திடாத வழிகளில் எனக்கு பதில் அளிப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில், எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு, உமக்கே சகல துதியையும் செலுத்துகிறேன், ஆமென்.