எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக" (1 பேதுரு 5:10) என்ற வசனத்தை தியானிப்போம். சகல கிருபையும் பொருந்திய தேவன் நம்மை தம்முடைய நித்திய மகிமைக்கு அழைத்திருப்பது எவ்வளவு பெரிதான ஆசீர்வாதம்!

ஆனால், நாம் இந்த உலகத்தில் வாழும்போது, பல உபத்திரவங்கள், சோதனைகளை கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. "உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்" (1 யோவான் 5:19) என்றும், "சத்துரு...என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்" (சங்கீதம் 143:3) என்றும் வேதம் கூறுகிறது. பிசாசு, நாம் இருளை, பாடுகளை அனுபவிக்கவேண்டும் என்றும், ஆண்டவருடைய சமுகத்திலிருந்து விலகவேண்டும் என்றும் விரும்புகிறான். இருளை பார்ப்பதற்குப் பதிலாக, ஒளியாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையே நோக்கிப் பார்க்கவேண்டும். அப்படி நாம் செய்யும்போது, தேவனாகிய கர்த்தர் நம் இருளை வெளிச்சமாக்குவார்; நம் பாதையைச் செவ்வைப்படுத்துவார் (சங்கீதம் 18:28,32).

ஆகவேதான் ஆண்டவராகிய இயேசு சிலுவையில் எல்லா பாடுகளின் வழியாகவும் கடந்து சென்றார். அவருடைய பாடுகளின் மூலம் நாம் தேவனுடைய சகல பரிபூரண ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். அவர் சிலுவையில் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டதால், நாம் எப்போதும் சிலுவையையே நோக்கிப் பார்க்கவேண்டும். அவர் தம்முடைய சரீரத்தில், ஆத்துமாவில், சிந்தையில் நம்முடைய உபத்திரவங்கள் எல்லாவற்றின் வழியாகவும் கடந்து சென்று, நம்முடைய எல்லா பிரச்னைகளிலிருந்தும் நமக்கு விடுதலையை தந்திருக்கிறார். இதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். அவருடைய தியாகத்தினால் நாம் தேவனுடைய சகல பரிபூரண ஆசீர்வாதங்களையும் பெற்றிருக்கிறோம். "அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்" (எபிரெயர் 2:18) என்று வேதம் கூறுகிறது.
பிரியமானவர்களே, பிரச்னைகளை கண்டோ, பாடுகளைக் கண்டடோ பயப்படாதிருங்கள். மாறாக, ஜெபித்து ஆண்டவரை நோக்கிப் பாருங்கள். உங்கள் பிரச்னை எதுவாயினும், நீங்கள் எளிமையாக ஏறெடுக்கும் ஜெபத்தின் மூலம் தேவனால் உங்களை விடுவிக்க முடியும். அந்த பிரச்னை இனிமேல் எழும்பாது. இன்றைக்கு சிலுவையை நோக்கிப் பார்ப்பீர்களா?

ஜெபம்:
பரம தகப்பனே, இன்றைய தினத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் அன்புக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். சில நேரங்களில், என் வாழ்க்கையைக் குறித்து நீர் வைத்திருக்கும் எண்ணங்களை புரிந்துகொள்வது சிரமமாக இருக்கிறது; பிரச்னைகள் என்னை கீழே தள்ளிவிட்டன என்பதை அறிக்கையிடுகிறேன். இப்போதும் நீர் இருளை அகற்றுவீர்; என்னை சரியான பாதையில் நடத்துவீர் என்று உம்மேல் முழு நம்பிக்கை வைத்து உம்மிடம் வருகிறேன். உம்மை நான் ஏற்றவிதத்தில் பின்பற்றும்படி உம்முடைய சத்தியம் உண்மையில் என் இருதயத்திற்குள் இருக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன். எந்த உபத்திரவமும் வேதனையும் உம்மிடத்திலிருந்து என்னை பிரிக்கக்கூடாது என்று அப்போஸ்தலனாகிய பவுலைபோல நான் ஜெபிக்கிறேன். உம்முடைய பிள்ளையாகிய நான் சத்தியத்திற்கு  சாட்சி கொடுக்கும்படி என் வாழ்வில் நான் அனுபவிக்கும் எல்லா காரியமும் கிறிஸ்துவுக்குள் உம்முடைய நித்திய மகிமையை குறிப்பதாகவே இருப்பதாக. எது நடந்தாலும், நான் காணப்படாதவற்றையும் நித்தியத்தையும் தேடி, நம்பிக்கையோடும் அன்போடும் உம்மை பின்பற்ற உதவும். சிலுவையின் மூலமாக என்னை நித்திய மகிமைக்கு அழைப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.