அன்பானவர்களே, இன்றைய தினம் உங்களுக்குச் சிறப்பானதாக அமையும். தேவனுடைய வசனத்தை நாம் ஆவலாய் தியானிக்கிறபடியினால், அவருடைய அடையாளங்களையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் காண்போம். "நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா" (ஏசாயா 43:7) என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த வல்லமையான சத்தியம் நம்மை பெலப்படுத்தி, உற்சாகப்படுத்துகிறது. தம்முடைய நாமத்தில் கிருபையாக உங்களை அழைத்ததற்காக தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
அன்பானவர்களே, நாம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த அழைப்பினிமித்தம், அவரை ஆழமாய் அறிந்துகொள்ளும் சிலாக்கியத்தை பெற்றிருக்கிறோம். இந்த உலகில் அநேகர் சமாதானத்திற்காகவும் சந்தோஷத்திற்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்; நாமோ உள்ளங்களில் தேவனுடைய சந்தோஷத்தையும் சமாதானத்தையும் நிறைவாய் அனுபவிக்கும்படி ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். அவருடைய அழைப்பின் மூலம், ஊழியத்தில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா நிலைகளிலும் தெய்வீக வல்லமையால் பெலப்படுத்தப்பட்டிருக்கிறோம். நாம் அவருடைய நாமத்தில் அழைக்கப்பட்டிருக்கிறபடியினால், பரலோகத்தில் எப்போதும் அவர் அருகே இருப்போம் என்ற வாக்குத்தத்தம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, அல்லேலூயா! தேவன் நம் வாழ்க்கையை நேர்த்தியாக்கி, தமக்கு மகிமையாக நம்மை வனைகிறார்.
தேவனாகிய கர்த்தரின் பெரிய நாமம் என்ற, 'என் நாமந்தரிக்கப்பட்ட' - என்று வசனத்தில் எழுதப்பட்டுள்ளது. அவருடைய நாமம் உங்கள் தலையின்மேல் இருக்கிறது. ஒருவர் ராஜாவினால் ஒரு வேலைக்கு அனுப்பப்பட்டால், "ராஜாவின் ஆணையின்பேரில் வந்திருக்கிறேன்," என்று கூறுவார். அவர் சாதாரண தோற்றம் கொண்டவராக இருந்தாலும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள ராஜாவின் அதிகாரம், அவருக்கு கனத்தை கொடுக்கும். அவ்வண்ணமாக, வானத்திலும் பூமியிலும், நரகத்தின் ஆழத்திலும் எல்லா முழங்கால்களும் முடங்கக்கூடிய தேவ நாமத்தின் அதிகாரம் நம்மேல் இருக்கிறது. தேவனுடைய மகத்துவமான நாமத்திற்காக அவரை ஸ்தோத்திரியுங்கள். நம்முடைய வாழ்வின் மூலமாக தேவனுடைய மகிமையை வெளிப்படுத்த நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
தேவன் அசைவாடும்போது, அவர் ஆச்சரியமான காரியங்களை செய்கிறார். இந்த ஆச்சரியமான செயல்கள் உங்கள் வாழ்க்கைக்கென திட்டம்பண்ணப்பட்டுள்ளன; அவற்றை அனுபவிக்க நாம் அவருடைய மகிமைக்காக வாழவேண்டும். உங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்து, "ஆண்டவரே, என் மூலம் வல்லமையான காரியங்களைச் செய்யும்," என்று கூறுவோம். படைத்தலைவனின் ஆணைக்கிணங்க செயல்படும் இராணுவவீரனைப்போல இருப்போம். எப்போதும், தேவனுடைய சித்தத்திற்கு என்னை அர்ப்பணித்து இப்படி வாழ்வதற்கு நான் கற்றுக்கொண்டுள்ளேன். நான் அவரிடம், "ஆண்டவரே, என்னுடைய சித்தமல்ல, உம்முடைய சித்தமே என் வாழ்வில் செய்யப்படட்டும்," என்று சொல்வேன். தேவனே, எல்லா அற்புதங்களையும் செய்கிறார்;ஆசீர்வாதத்தை தருகிறார்; வாய்ப்புகளை அளிக்கிறார் என்று அறிந்து எல்லா தருணத்திலும் அவரை துதிக்கிறேன். தேவனுடைய மகிமைக்கென்று உருவாக்கப்பட்டவராக, அவருடைய மகத்துவமான கிரியைகளுக்கு சாட்சியாக விளங்குகிறவராக வாழும்படி இதை உங்கள் வாழ்க்கை முறையாக்கிக்கொள்ளுங்கள்.
இந்த கிருபைக்காக, அவருடைய நாமத்தினால் அழைக்கப்பட்டிருக்கும் சிலாக்கியத்திற்காக, அவருடைய மகிமைக்காக பயன்படுத்தப்படும் கனத்துக்காக தேவனுக்கு நன்றி செலுத்துவோம். இன்றைக்கு உங்கள் உள்ளத்தை தேவனுக்கு அர்ப்பணியுங்கள்; அப்போது நீங்கள் தேவனுடைய மகிமையான கிரியையாக விளங்குவீர்கள்.
ஜெபம்:
ஆண்டவரே, உம்முடைய மகத்துவமான நாமத்தில் என்னை அழைத்து, உம்முடைய மகிமையை வெளிப்படுத்தும்படி உருவாக்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்வில் நீர் செயல்படுகிறதை நான் உயர்வாக எண்ணி, என்மேல் நீர் வைத்திருக்கும் அழைப்பை கனம்பண்ணுகிறேன். என் வாழ்வைப் பற்றி நீர் கொண்டிருக்கும் திட்டங்களையும் நோக்கங்களையும் கனப்படுத்த எனக்கு உதவும்.என் இருதயத்தில் உம்மை உயர்த்தவும், நான் செய்கிறவை எல்லாவற்றிலும் உம்மை மகிமைப்படுத்தவும் விரும்புகிறேன். ஆண்டவரே, உம்முடைய மகிமையுள்ள கிரியைகள் என் வாழ்வில் வெளிப்படுவதாக. என்னைக் குறித்து நீர் திட்டம்பண்ணியுள்ள சிறிய காரியங்களும் நிறைவேறட்டும். நான் செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கி உம்முடைய மகிமைக்காக நான் பிரகாசிப்பதற்கு உதவி செய்யும். இயேசுவையும் உம்முடைய தயவையும் உலகத்திற்குக் காட்டுகிற அன்பின் பாத்திரமாக என்னை பயன்படுத்தும். பேசும்போதும், செயல்படும்போதும் உம்முடைய பிரசன்னத்தையும் மகிமையையும் காட்டுகிற மனுஷனாக / மனுஷியாக நான் விளங்க கிருபை செய்யும். ஆண்டவரே, நீர் என்னை தெரிந்துகொண்டற்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.