எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னைப் பலப்படுத்தினார்" (2 தீமோத்தேயு 4:17) என்ற வாக்குத்தத்த வசனத்தை தியானிப்போம். இது எவ்வளவு அருமையான வாக்குத்தத்தம்! அடுத்த வசனத்தையும் வாசித்தோமானால், "கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன். கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்" (2 தீமோத்தேயு 4:17,18). இதை பவுல், தீமோத்தேயுவுக்கு எழுதியுள்ளான்.
ஆம், எனக்கு அருமையான தேவ பிள்ளையே, தேவன் உங்களுக்குத் துணையாக இருக்கும்போது யாரால் உங்களை எதிர்க்க இயலும்? நாள் முழுவதும் நீங்கள் தேவனையே உறுதியாய்ப் பற்றிக்கொள்ளவேண்டும். ஏதேனும் ஒரு தருணத்தில் கூட ஆண்டவரை மறந்துவிடாதீர்கள். நீங்கள் அவரைவிட்டு உங்கள் கண்களை விலக்கிவிட்டால், அவரால் உங்களுடன் இருக்க முடியாது. பிசாசு இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, உங்கள் வாழ்வில் எல்லா பிரச்னைகளையும் உருவாக்குகிறான். ஆகவேதான், தேவனுடைய பிரசங்கிகளாகிய நாங்கள் உங்கள் முழு இருதயத்துடனும் தேவனைப் பற்றிக்கொள்ளும்படி கூறுகிறோம். "ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்" (சங்கீதம் 115:10,11) என்று வேதம் கூறுகிறது. அன்பானவர்களே, நீங்கள் தேவன்மேல் முழு நம்பிக்கை வைக்கும்போது, அவரே உங்களுக்குக் கேடகமும் பாதுகாப்புமாய் விளங்குவார்.
வேதத்தில், சவுலின் மகனாகிய யோனத்தான், இஸ்ரவேலருக்கு விரோதமாக போரிட வந்த பெலிஸ்தரின்மேல் பெரும் வெற்றியைப் பெற்றான் (1 சாமுவேல் 14:45). சவுல், நிபந்தனைகளை விதித்துக்கொண்டிருந்தபோது, யோனத்தான் தேவனை நாடி, அவருடன் இணைந்து செயல்பட்டு விரோதியை தோற்கடித்தான். தேவனைப் பற்றிக்கொண்ட யோனத்தான், அவருடைய கண்களில் தயவை பெற்றான். ஜனங்களோ, "இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலைசெய்யப்படலாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான்," என்று சாட்சி கொடுத்தார்கள். கர்த்தர் யோனத்தானை தப்புவித்தார். அவன் அழிந்துபோகவில்லை.
அன்பானவர்களே, நீங்களும் அவ்வாறே தேவனை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். அப்போது அவர் ஆபத்தில் உங்களைக் காத்து, உங்களுக்குப் பெலனாகவும் இரட்சகராகவும் விளங்குவார். நம் தேவன் எவ்வளவு பெரியவரும் அன்புள்ளவருமாயிருக்கிறார். இன்று உங்கள் வாழ்க்கையை அவரது கரங்களில் ஒப்படைப்பீர்களா? அவர் மாத்திரமே தரக்கூடிய பெலனையும் விடுதலையையும் பெற்றுக்கொள்வீர்களா?
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் எனக்கு துணைநின்று, தேவையான தருணங்களில் எனக்கு பெலன் தருவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே என் கேடகமாகவும், என் இரட்சகராகவும், ஆபத்துக்காலத்தில் எனக்கு அநுகூலமான துணையாகவும் இருக்கிறீர். ஆண்டவரே, உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளவும் ஒருபோதும் உம்முடைய பிரசன்னத்தை விட்டு விலகிவிடாமலிருப்பதற்கும் எனக்கு உதவி செய்யும். சத்துருவின் சதியாலோசனைகளிலிருந்து என்னை பாதுகாத்து, நீதியின் பாதையில் என்னை நடத்தும். நீர் யோனத்தானை பாதுகாத்ததுபோலவும், அப்போஸ்தலனாகிய பவுலை பெலப்படுத்தியதுபோலவும் உம்முடைய வல்ல கரம் என்னை பெலப்படுத்தி விடுவிக்கும் என்று நம்புகிறேன். உம்முடைய பரம ராஜ்யத்திற்காக நீர் என்னை காத்துக்கொள்வீர் என்று நம்பி என் ஜீவனை உம்முடைய கரங்களில் ஒப்படைத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.