அன்பானவர்களே, "எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது" (ஏசாயா 60:1) என்று வசனம் கூறுகிறவண்ணம் ஆண்டவரின் ஒளி உங்களை பிரகாசிப்பதாக. சிறுவயதில் நான் பாடிய, "இயேசு கற்பித்தார் ஒளி வீசவே, சிறுதீபம் போல இருள் நீக்கவே, அந்தகார லோகில் ஒளி வீசுவோம், அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம், முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம், ஒளி மங்கிடாமல் காத்துக்கொள்ளுவோம்!' என்ற பாடலை இந்த வசனம் எனக்கு நினைவுப்படுத்துகிறது. எங்கள் பிள்ளைகள் சிறுவயதில் இதைப் பாடினார்கள்; இப்போது எங்கள் பேத்தியும் இதைப் பாடுகிறாள். நம் வாழ்வில் தேவனுடைய ஒளி பிரகாசிக்கிறது என்பதை இந்தப் பாடல் எவ்வளவு அருமையான நினைவுப்படுத்துகிறது! ஆண்டவர்தாமே, அனுதினமும் இந்தப் பாடலை நீங்கள் பாடும்படி தமது சந்தோஷத்தினால் உங்கள் உள்ளத்தை நிரப்புவாராக.
"நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்" (நீதிமொழிகள் 4:18) என்றும், "உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய ... சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1 பேதுரு 2:9) என்றும் வேதம் கூறுகிறது. நாம் தம்முடைய பூரண மகிமையை அடையும் வரைக்கும், ஆண்டவர் தம் மகிமை நம்மேல் தொடர்ந்து வீசும்படி செய்வார். தேவன் ஒளியாயிருக்கிறார்; எந்த இருளும் அவரை மேற்கொள்ள இயலாது. தம்முடைய ஆச்சரியமான ஒளியை நம்மேல் வீசச்செய்ய தேவன் விரும்புகிறார். தம்மைப் போல் உங்களை மாற்றுவதற்காக, அறியாமை, பாவம், மன சஞ்சலம் இவற்றுக்கு வெளியே வந்து, தம்முடைய புத்தியும், ஞானமும், பரிசுத்தமுமான ஒளிக்குள் வரும்படி ஆண்டவர் உங்களை அழைக்கிறார். "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது" (மத்தேயு 4:15) என்று இயேசுவைக் குறித்து வேதம் கூறுகிறது. "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை" (யோவான் 1:4,5) என்று வேதம் கூறுகிறவண்ணம், இயேசு பூமியில் இருந்தபோது, ஜனங்கள் தேவனுடைய ஒளியை அவரில் கண்டார்கள்.
அன்பானவர்களே, உங்களைச் சுற்றிலும் இருக்கும் இருளைக் கண்டு பயப்படாதிருங்கள். உலகம் இருளுக்குள் கிடக்கிறது என்றும், காரிருள் ஜனங்களை மூடுகிறது என்றும் வேதம் கூறுகிறது. ஆனாலும், "உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்" (ஏசாயா 60:2) என்று தேவனுடைய வாக்குத்தத்தம் கூறுகிறது. இஸ்ரவேலரின் கூடாரப் பண்டிகையின்போது, ஜனங்கள், தங்களை வனாந்தரத்தில் வழிநடத்திய அக்கினி ஸ்தம்பத்தை நினைவுகூரும்வண்ணம், தேவாலயத்தில் நான்கு பெரிய குத்துவிளக்குகளை ஏற்றுவார்கள். உயரமாக வைக்கப்பட்ட இந்த குத்துவிளக்குகள், மலையின்மேல் பிரகாசமாக ஒளிர்ந்து, முழு பட்டணத்திற்கும் வெளிச்சம் கொடுக்கும். அவ்வாறே, இருண்ட இந்த உலகத்திற்கு ஒளி கொடுக்கும்படி தேவன் உங்களை அழைக்கிறார். "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது" (மத்தேயு 5:14) என்று இயேசு கூறுவதுபோல, நீங்கள் தனியொருவராகக்கூட, நீங்கள் வாழும் பட்டணம் முழுமைக்கும் வெளிச்சம் கொடுக்க முடியும்.
அன்பானவர்களே, நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். இயேசுவல்லாமல் இருளை மேற்கொள்ள முடியாது. ஆகவே, தேவனுடைய வெளிச்சம் உங்கள்மேல் பிரகாசிக்கவேண்டும். இவ்வுலகில் இருள் ஜனங்களை சூழ்ந்து, அவநம்பிக்கைக்குள்ளாக இழுக்கிறது. இது, ஆத்துமாக்களை இருளுக்குள் தள்ளி, மரித்தவர்களைப் போல இருக்கப்பண்ணுவதற்காக பிசாசு செய்யும் கிரியையாயிருக்கிறது. ஆனால், எல்லா மனுஷருக்கும் ஒளியைக் கொடுப்பதற்காகவே இயேசு இந்த உலகிற்கு வந்தார். இயேசுவே, "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்," என்று தம்மைக் குறித்து அறிவிக்கிறார். அன்பானவர்களே, இயேசுவை பின்பற்ற நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? அவர் உங்களோடு இருந்தால், உலகின் எந்த இருளும் உங்களை தொட இயலாது. அவரது வெளிச்சம் உங்கள் மூலமாக பிரகாசிக்கட்டும்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய ஒளி இருளில் பிரகாசிக்கிறதும், நித்திய மகிமை கொண்டதுமாயிருக்கிறது. அந்த ஒளியானது என்னுடைய எல்லா பயத்தையும் கலக்கத்தையும் மேற்கொள்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் எழும்பி, உம்முடைய மகிமையோடு பிரகாசித்து, இருண்ட இந்த உலகிற்கு உம் மகிமையை விளங்கப்பண்ண உதவி செய்யும். அறியாமையிலிருந்தும், பாவத்திலிருந்தும், மனசஞ்சலத்திலிருந்தும் என்னை விடுவித்து, ஞானமும் பரிசுத்தமும் நிறைந்த உம்முடைய ஆச்சரியமான ஒளிக்குள்ளாக நடத்துவீராக. இருளில் வாழ்ந்த மக்களுக்கு இயேசு ஒளியை அளித்ததுபோல, என் வாழ்க்கையும் மற்றவர்களின் பாதையை பிரகாசிப்பதாக அமையட்டும். உம்முடைய கிருபையையும் சத்தியத்தையும் பிரகாசிக்கிற மலையின்மேல் இருக்கிற பட்டணமாக எல்லோரும் என்னை காணும்படி மாற்றுவீராக. என் இருதயத்தையும் சிந்தையையும் மங்கச் செய்வதற்கு சத்துருவானவன் எடுக்கும் முயற்சிகளிலிருந்து என்னை பாதுகாத்து, உம்முடைய ஜீவ ஒளியினால் என்னை நிரப்புவீராக. நீர் என் பக்கத்தில் இருக்கும்போது எந்த இருளும் என்னை மேற்கொள்ள முடியாது என்று நம்பி, உம்மை பின்தொடர்கிறேன் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.