அன்பானவர்களே, "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்... வேண்டிக்கொள்ளுகிறேன்" (எபேசியர் 1:17) என்று வேதம் கூறுவதுபோல, ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தருகிறார். ஆங்கில மொழிபெயர்ப்பில் ஞானத்தையும், வெளிப்பாட்டையும் அளிக்கிற ஆவி என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வுலகில் நமக்குள், "எதைப் படிப்பது?" "திருமணம், வேலை, குடும்பம் என்று மூன்று பாதைகள் என் முன்னே இருக்கின்றன. எதில் செல்வது?" "எந்த இடத்தில் எங்கள் வீட்டைக் கட்டுவது?" "எதிர்கால பாதுகாப்புக்கு என்ன செய்வது?" "என் குடும்பம் நன்றாக நடக்கவும், பாதுகாப்பாக இருக்கவும் நான் என்ன செய்யவேண்டும்?" "என் மகளின் எதிர்காலம் ஆசீர்வாதமாக இருக்க என்ன செய்யவேண்டும்?" என்பது போன்று எண்ணற்ற கேள்விகள் எழும்புகின்றன. நமக்கு முன்னே இருக்கும் பாதைகளில் எதில் செல்வது என்பதே நம் கேள்வி.

இதற்காகவே தேவன் நமக்கு ஞானத்தின், வழிகாட்டுதலின் ஆவியை அருளுகிறார். உங்களை ஆவியில் அவர் தெளிவாக வழிநடத்தி, உங்களுக்கென்று அவர் ஆயத்தம் பண்ணியிருக்கிற பாதையை காண்பிப்பார். அவரது சித்தத்தின்படி நீங்கள் நடக்கும்போது, இயேசு உங்களுடன் நடப்பதால் நீங்கள் செழிப்பீர்கள்.

மீனாட்சி என்ற சகோதரி, வல்லமையான ஒரு சாட்சியை பகிர்ந்துகொண்டார்கள். 2009ம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடந்தது. அவர்கள் கணவர் பெயர் சஞ்சய். கணவர் மூலமாக அவர்கள் இயேசுவைப் பற்றி அறிந்துகொண்டார்கள். அவர்கள் தன் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்தார்கள்; தேவ சமாதானம் அவர்கள் இருதயத்தை நிரப்பியது. 2013ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தில் நடைபெற்ற இயேசு அழைக்கிறார் கூட்டத்தில் அவர்கள் இருவரும் கலந்துகொண்டார்கள். அங்கு, தேவன் சஞ்சயை முழு நேர ஊழியத்திற்கு அழைத்தார். அவர் தான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இயேசு அழைக்கிறார் ஊழியத்தில் ஜெப வீரராக இணைந்தார். மீனாட்சி, என் தகப்பனார் எழுதிய பரிசுத்த ஆவியின் வரங்கள் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார்கள்;பரிசுத்த ஆவியின் ஆழமான அனுபவத்தை பெறுவதற்கான வாஞ்சை அவர்களுக்குள் எழுந்தது.

2017ம் ஆண்டு, நான் ஔரங்காபாத்தில் நடத்திய தீர்க்கதரிசன மாநாட்டிலும் அவர்கள் கலந்துகொண்டார்கள். ஜெப வேளையில் நான், ஜனங்களை பரிசுத்த ஆவியினாலும் வரங்களினாலும் நிரப்பும்படி தேவனிடம் வேண்டினேன். மீனாட்சி, நவமான பாஷைகளை பேசும் வரத்தினை பெற்றுக்கொண்டார்கள்; தான் ஆவியின் என்ன பேசுகிறோம் என்பதை அறிந்திருந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஆச்சரியமான மாற்றம் ஏற்பட்டது. தேவன் அவர்களுக்கு பல இரகசியங்களை வெளிப்படுத்த தொடங்கினார். இப்போது சஞ்சய், இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் மேலாளராக ஊழியம் செய்கிறார்; மீனாட்சி, தன்னார்வ ஊழியராக உதவி செய்கிறார்கள். அவர்கள் குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் இணைந்துள்ளார்கள்; அவர்கள் பிள்ளைகள் இளம் பங்காளர்களாக இருக்கிறார்கள்; நன்றாக படிக்கிறார்கள். நீங்களும் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் குடும்ப ஆசீர்வாத திட்ட பங்காளராகும்போது, தேவன், உங்களை வழிநடத்துவதற்கு அவரது ஞானத்தையும் வழிகாட்டுதலையும் அருளும் ஆவியை தருவார். நீங்கள் ஆண்டவரால் பாதுகாக்கப்படுவீர்கள்; நீங்கள் செழிப்பீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, ஞானத்தையும் வெளிப்படுதலையும் தருவதாக நீர் வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தெளிவான ஆவியினால் என் இருதயத்தை நீர் நிரப்பும்படி உம்முடைய பரிசுத்த ஆவியை நாடி உம்மண்டை வருகிறேன். படிப்பு, வேலை, குடும்பம் உள்பட நான் எவற்றை குறித்தும் தீர்மானங்களை எடுக்கும்போதும் எனக்கு வழிகாட்டும். உம்முடைய சித்தத்தின்படி நான் பாதுகாப்பாக இருக்கும்படி, செழிப்புக்கும் சமாதானத்துக்கும் நேராக செல்லும் பாதையை நான் கண்டுகொள்ள எனக்கு உதவும். ஆண்டவரே, என்னுடன் நடந்து, உம்முடைய பூரண ஞானத்திற்குள் என்னை நடத்தும். நாங்கள் குடும்பமாய் உம்மை பின்பற்றுவதால், என் குடும்பத்தை ஆசீர்வதித்து, சரியான பாதையில் நடத்தி எங்கள் அடிகளை காத்தருளும். உம்மோடு இருக்கும்போது என்னை சுகமாய் தங்கப்பண்ணுவீர் என்றும், நான் செழிப்பேன் என்றும் விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.