அன்பானவர்களே, இன்றைக்கு மகிழ்ச்சியோடு உங்களை வாழ்த்துகிறேன். எரேமியாவின் புஸ்தகத்திலிருந்து, "நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்" (எரேமியா 1:5) என்ற வல்லமையான வாக்குத்தத்தத்தை இன்றைக்கு தியானிப்போம்.

இந்த வசனம் கூறுகிறபடி, உங்கள் தாயின் கருவில் நீங்கள் உருவாகிறதற்கு முன்பே தேவன் உங்களை அறிந்திருக்கிறார்; நீங்கள் பிறப்பதற்கு முன்னரே அவர் உங்களை வேறு பிரித்திருக்கிறார்.

ஒருவேளை இன்றைக்கு நீங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோல் உணரலாம்; வாழ்க்கை எந்த திசையில் செல்கிறது என்று தெரியாமல் திகைக்கலாம்; எனக்கென்று ஏதாவது திட்டம் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டிருக்கலாம். பெலவீனங்கள் உங்களை அழுத்திக்கொண்டிருக்கலாம்; இக்கட்டுகள் பெருகியிருக்கலாம்; சிரமங்கள் உங்களை அதைரியப்படுத்தியிருக்கலாம். எரேமியாவின் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். தேவன், அவனை அழைத்தபோது, தனக்கு தகுதியில்லை என்று நினைத்தான். "ஆண்டவரே, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்," என்று அவன் கூறினான். ஆனாலும் தேவன், "நான் சிறுவனாயிருக்கிறேன் என்று சொல்லாதே. நீ அனைவரிடமும் சென்று, நான் உன்னை அனுப்பினேன் என்று கூறி, நான் உனக்குக் கட்டளையிட்டுள்ளவற்றை அவர்களுக்குத் தெரிவி. அவர்களுக்குப் பயப்படாதே, உன்னை காக்கும்படி நான் உன்னுடன் இருக்கிறேன்," என்று சொன்னார்.

எரேமியா மட்டும் தகுதியில்லை என்று எண்ணிவிடவில்லை. மோசே, "நான் நன்கு பேசக்கூடியவன் அல்ல," என்றும், கிதியோன், "என்னுடைய தகப்பன் வீட்டில் நான் சிறியவன்," என்றும் கூறினார்கள். ஆனாலும் தேவன் அவர்களோடு இருந்து, அவர்களை வல்லமையாக பயன்படுத்தினார். அவ்வண்ணமே, தேவன் உங்களோடு கூட இருக்கிறார். "நான் சிறுவன்," என்றோ, "எப்படி பேசுவது என்று எனக்குத் தெரியாது," என்றோ கூறாதிருங்கள். "இந்த சவாலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை", "இந்த நிறுவனத்தை எப்படி தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை", "எப்படி படிப்பது என்று எனக்கு தெரியவில்லை", "குடும்ப வாழ்க்கையை எப்படி நடத்துவது என்று, உறவுகளை எப்படி காத்துக்கொள்வது என்று எனக்கு தெரியாது," என்றெல்லாம் சந்தேகங்கள் உங்களுக்குள் எழும்பி தடுக்க இடம் கொடுக்காதிருங்கள். அன்பானவர்களே, இதுபோன்ற நிச்சயமில்லாத நிலையில், பயந்திருக்கும் நிலையில், "பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். நான் உன்னை காப்பேன்," என்று வேதத்தில் ஆண்டவர் தெளிவாகக் கூறுவதை நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தாயின் கருவில் நீங்கள் உருவாகிறதற்கு முன்னரே தேவன் உங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் எடுத்து வைக்கப்போகும் ஒவ்வொரு அடியையும், உங்களுக்கு எதிர்ப்படும் எல்லா சவாலையும் அவர் அறிந்திருக்கிறார். உங்கள் வாழ்க்கைக்கென அவர் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். ஆகவே, இன்று நீங்கள் எவ்வித சூழ்நிலையின் வழியாக கடந்துசென்றாலும் தைரியமாயிருங்கள். தேவன் உங்களோடிருக்கிறார் என்பதையும், எந்தச் சூழ்நிலையிலும் அவர் உங்களை மீட்டெடுப்பார் என்பதையும் விசுவாசியுங்கள். தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள். உங்களுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள், பிரகாசமாக இல்லாவிட்டாலும் அவற்றை பயன்படுத்துங்கள். புதிதாக ஒரு காரியத்தை தொடங்குவது, தனிப்பட்ட பிரச்னை, சிக்கலான தீர்மானம் எதுவாக இருந்தாலும், நீங்கள் பெரிய காரியங்களைச் செய்வதற்கு உதவும்படி தேவன் ஆயத்தமாயிருக்கிறார் என்று நம்புங்கள். அவருடைய பிரசன்னத்தினால், நீங்கள் கற்பனை செய்து பார்த்திராத அளவு வெற்றிகளையும் திருப்பங்களையும் காண்பீர்கள். இந்த வாக்குத்தத்தத்தை பற்றிக்கொண்டு, தேவன் எப்போதும் உங்களோடிருப்பதற்காக அவரை ஸ்தோத்திரியுங்கள். அவர் ஆதியிலிருந்தே உங்களை அறிந்திருக்கிறார்; ஒரு நோக்கத்திற்காக உங்களை வேறு பிரித்திருக்கிறார். நீங்கள் ஒருபோதும் தனியே இல்லை.

ஜெபம்:
ஆண்டவரே, என்னுடைய தாயின் கருவில் நான் உருவாகிறதற்கு முன்னரே நீர் என்னை அறிந்திருப்பதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய வாழ்க்கைக்கென நீர் பூரணமான திட்டத்தை வைத்திருக்கிறீர்; இந்தப் பயணத்தில் என்னை தனியே செல்லும்படி விட்டுவிட ஒருபோதும் நீர் நினைக்கவில்லை.வழியில் நீர் என்னோடு கூடவே இருப்பதால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னுடைய பெலவீனத்திலே உம்முடைய பெலன் பூரணமாய் விளங்கும். வழியில் எதிர்ப்படுகிற சவால்களை சந்திப்பதற்காக, இன்று நான் உம்முடைய பெலனை பெற்றுக்கொள்கிறேன். உம்முடைய மகிமைக்காக நான் பெரிய காரியங்களை செய்து முடிக்கும்படி உம்முடைய திடநம்பிக்கையால், ஞானத்தால், வல்லமையால் என்னை நிறைத்தருளும். தைரியமாக முன்னேறி, என் வாழ்க்கையைக் குறித்த உம்முடைய சித்தத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்றபடி அதிகமான காரியங்களை செய்து முடிக்க எனக்கு உதவும். எல்லா சோதனைகளிலிருந்தும் நீர் என்னை காப்பாற்றி, என்னை மகா உயரங்களுக்கு உயர்த்துவீர் என்று நம்பி இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன், ஆமென்.