எனக்கு அருமையானவர்களே, ஆண்டவரிடத்தில் நாம் கேட்கும்பொழுது சகலத்தையும் பெற்றுக்கொள்ளும்படியான கிருபையைத் தருகிறார். அவரைத் தேடும்பொழுது, அவருடைய ஆசீர்வாதத்தை நாம் கண்டடைய நம்முடைய கண்களைத் திறக்கிறார். "கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான். தேடுகிறவன் கண்டடைகிறான். தட்டுகிறவனுக்கு திறக்கப்படும்" (மத்தேயு 7:8)

எலிசா தீர்க்கதரிசி யோர்தான் நதியை கடக்கவேண்டிய சூழ்நிலை வந்தது. யோர்தான் கரைபுரண்டு ஓடுகிறது. அதைத் தாண்டி செல்ல அவருக்கு வழியில்லை. அப்பொழுது அவர், எலியா தீர்க்கதரிசியிடமிருந்து விழுந்த சால்வையை தன் கையில் எடுத்து, "எலியாவின் தேவன் எங்கே?" என்று சொல்லி தண்ணீரை அடிக்கிறார். உடனே தண்ணீர் அப்படியே நிற்கிறது. நதி இரண்டாக பிளந்து வாசல் திறக்கிறது. அவர் நடந்து மறுகரைக்கு சென்று, அற்புதங்களும் அடையாளங்களும் அவர் மூலமாக நடைபெறும்படியாக ஆண்டவருடைய வல்லமையினால் நிரம்பி செயல்பட்டார். 

இதேபோல உங்களுக்கும் இன்று நடக்கும். என் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் செய்வேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார். ஆம், விசுவாசத்தில் இயேசுவின் நாமத்தை சொல்லும்பொழுது, புதிய வாசல்கள் திறக்கும். ஏனென்றால், "நானே வாசல்; ஒருவன் தட்டும்பொழுது வாசலைத் திறப்பேன். அவன் எனக்குள் வந்து, மேய்ச்சலைக் கண்டடைவான். அவன் திருப்தியாய் சாப்பிட்டு, ஆசீர்வாதத்தை அனுபவிப்பான்" என்று இயேசு சொல்லுகிறார். ஆம், அவருடைய சத்தத்தைக் கேட்டு, உங்கள் இருதய வாசலைத் திறந்தீர்களானால், அவர் உங்கள் இருதயத்திற்குள் வந்து, உங்களோடு போஜனம் பண்ணுவார். நீங்கள் கேட்கிறவைகளையெல்லாம் அவர் உங்களுக்கு தருவார். நீங்கள் தேடிக்கொண்டிருக்கிற எல்லாவற்றையும் நீங்கள் கண்டடையும்படியாக அவர் அருள்புரிவார். இது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம். அப்படி அனுபவம் பெற்ற ஒருவருடைய சாட்சியைப் பார்ப்போமா?

சகோதரர் கோபால், ஓய்வு பெற்ற பேரூந்து நடத்துநர். சில வருடங்களுக்கு முன்பு, திடீரென்று அவருடைய சரீரத்தில் ஒருவித சோர்வு ஏற்பட்டது. மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ததில், அவருடைய மூச்சுக்குழாய் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். சிறப்பு மருத்துவரை பார்க்கவேண்டும். நிறைய செலவாகும் என்று சொன்னார்கள். 15 நாட்களுக்குள் அவருடைய நிலைமை மிகவும் மோசமாகி, சரீரம் முழுவதும் கறுப்பு நிறமாக மாறியது. அதன்பிறகு அவரால் நடக்கவும் முடியவில்லை. இந்நிலையில், அவருடைய குடும்பத்தினர் அவரை அப்படியே தூக்கிக்கொண்டு பெதஸ்தா ஜெப மையத்திற்கு வந்தார்கள். அங்குள்ள ஜெப வீரர்கள் அவருக்காக கருத்தாய் ஜெபம்பண்ணினார்கள். என்ன ஆச்சரியம்.... அடுத்த நாளே ஒரு புதுபெலன் அவரை நிரப்புவதை உணர்ந்தார். எல்லா பெலவீனமும் மறைந்துபோனது. கர்த்தர் அவரை புது மனுஷனாக மாற்றினார். பின்பு மருத்துவரை அணுகியபோது, "உங்கள் பிரச்சனை எங்கே? உங்கள் மூச்சுக் குழாயிலிருந்த கட்டியைக் காணோம். அறுவைசிகிச்சை எதுவும் தேவையில்லை" என்று சொன்னார். இன்றைக்கு பெதஸ்தாவில் மற்றவர்களுக்காக அவர் ஜெபம் பண்ணுகிறார். கர்த்தர் எப்படி அவரை மாற்றியிருக்கிறார் பாருங்கள்.

ஆம், இயேசுவின் நாமத்தைச் சொல்லும்பொழுது பிசாசுகள் ஓடுகிறது. நோய்கள் மறைகிறது. ஜனங்கள் இரட்சிக்கப்பட்டு, அவருடைய பிள்ளையாக மாறுகிறார்கள். அந்த கிருபையின் சாவியை கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். ஆகவே, தைரியமாக நாமும் இயேசுவின் நாமத்தை சொல்லி ஜெபிப்போம்.

ஜெபம்: 
அன்புள்ள ஆண்டவரே, இயேசு என்னும் உம்முடைய வல்லமையுள்ள நாமத்திற்காக ஸ்தோத்திரம். இந்த உலகத்தில் இருக்கிறவனைவிட நீர் பெரியவர். அவனை நீர் சிலுவையில் வெற்றி சிறந்திருக்கிறீர். பிசாசுகளை துரத்தும். பயத்தின் ஆவி, திகிலின் ஆவி, சோர்வின் ஆவி முற்றிலுமாய் மறையட்டும். இப்பொழுது உம்முடைய பரிசுத்த ஆவியினால் இடம்கொள்ளாமல் போகுமட்டும் என்னை நிரப்பும். நீர் என்னை நீர்ப்பாய்ச்சலான தோட்டமாக வைக்கும்படி புதிய வாசலை திறந்தருளும். ஆசீர்வாதமான மழை வரட்டும். பழையவைகள் ஒழிந்துபோகட்டும். எல்லாம் புதிதாகட்டும். எல்லாவற்றையும் நீர் புதிதாக சிருஷ்டித்து கொடுப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் கெஞ்சுகிறேன். ஆமென்.