அன்பானவர்களே, இன்றைக்கு தேவன் ஆச்சரியமான ஆசீர்வாதங்களை உங்களுக்காக வைத்திருக்கிறார். இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை திருவிழா ஊழியம், இன்றைய தினம் 54ஆம் ஆண்டை காண்கிறது. இத்தனை ஆண்டுகள் நாம் இந்தியாவிலும், உலகம் முழுவதும் பல கூட்டங்களை நடத்தியுள்ளோம். அவற்றின் மூலம் கணக்கற்ற மக்கள் தேவனால் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஊழியம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதற்காக என்னோடு இணைந்து தேவனை ஸ்தோத்திரியுங்கள். அவர் தொடர்ந்து எங்களை தமது அன்பின் கருவியாய் பயன்படுத்தி, இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் மூலம் மக்களின் கண்ணீரை துடைக்க உதவி செய்யவேண்டும்.
இன்றைக்கு தேவன் உங்கள் கண்ணீர் யாவையும் துடைப்பார். "சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (சகரியா 2:10) என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஆம், தேவன் நம்மோடு வாசம்பண்ணுவதற்கு நம்மிடையே வருவதால் இது நாம் கெம்பீரித்து பாடவேண்டிய நேரமாகும். உங்கள் வீட்டில், வேலை செய்யுமிடத்தில், நீங்கள் செல்லுமிடமெங்கும் அவரது பிரசன்னத்தை உங்களால் உணர முடியும். இந்த தருணத்திலிருந்து அவர் உங்களோடு இருப்பதாகவும், உங்கள் இருதயத்தில் வாசம்பண்ணுவதாகவும் வாக்குப்பண்ணுகிறார்.
இயேசு, சகேயுவை பார்த்து, "சகேயு, நான் இன்றைக்கு உன் வீட்டுக்கு வர விரும்புகிறேன். என்னை அழைத்துச் செல்," என்று கூறினார். அப்படியே அவர் உங்களோடும் தங்குவதற்கு விரும்புகிறார். சகேயுவின் வீட்டினுள் இயேசு சென்றதும் அவன் இருதயம் மகிழ்ச்சியினால் நிறைந்தது; பரவசத்தை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை. தன் குடும்பத்தினரிடம் ஓடினான். தன் ஆஸ்திகளை ஏழைகளுக்குக் கொடுத்தான். அவன் இருதயம் மாற்றம் பெற்றது. அவனுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியது. இயேசு உங்கள் வீட்டுக்குள் வந்து, உங்கள் இருதயத்தின் நடுவில் வாசம்பண்ணும்போது இப்படியே உங்களுக்கும் நடக்கும். அதே அதிகாரத்தில், "நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன்," (சகரியா 2:5) என்று தேவன் கூறுகிறார். தேவன் தமது மகிமையுள்ள பிரசன்னத்தால் உங்கள் இருதயத்தை நிரப்புவார்; உங்கள் வாழ்க்கையில் தமது மகிமையை விளங்கப்பண்ணுவார்.
உங்கள் மூலமாக தேவனுடைய மகிமையான கிரியைகள் நடப்பதை காண ஆயத்தமாயிருக்கிறீர்களா? "ஆண்டவரே, நான் இப்போது தனிமையில் இருக்கிறேன். எனக்கென்று யாருமில்லை. யாருடைய உதவியும் இல்லை," என்று சொல்லக்கூடிய சகோதரிகளே, தேவன் உங்களைப் பார்த்து, "சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன்," என்று சொல்லுகிறார். அவரை தேடி, தன் வாழ்வில் எப்போதும் அவரது பிரசன்னத்தை அனுபவித்த மகதலேனா மரியாளைப் போல, நீங்களும் தமது பிரசன்னத்தை அனுபவிப்பதற்கு தேவன் உதவுவார். இன்றைக்கு அந்த சந்தோஷத்தை பெற்றுக்கொள்வீர்களா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் எனக்கு சமீபமாய் இருக்கிறீர் என்பதை அறிந்து, நன்றியறிந்த உள்ளத்தோடு உம் முன்னே வருகிறேன். என் நடுவில் வாசம்பண்ணுவதாகவும், என் கண்ணீர் யாவையும் துடைப்பதாகவும் நீர் வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, என் இருதயத்தை உம்முடைய மகிமையுள்ள பிரசன்னத்தினால் நிரப்பும். உம்முடைய பாதுகாக்கும் அக்கினி மதில் என்னைச் சூழ்ந்துகொள்ளட்டும். நான், தனிமையாகவும் பயமாகவும் உணரும் தருணங்களில், நீர் என்னை விட்டு விலகாமல் எப்போதும் என் அருகே இருக்கிறீர் என்பதை நினைவுப்படுத்தும். எனக்காக யாவற்றையும் செய்து முடிப்பதாக அளித்திருக்கும் வாக்குத்தத்தத்தால் மகிழ்ச்சியடைகிறேன். உம்முடைய மகிமை என் வாழ்வின் மூலமாக ஒளிவீசி, எல்லா சூழ்நிலையையும் உம்முடைய நோக்கத்திற்கு உகந்ததாக மாற்றட்டும். ஆண்டவரே, என் இருதயத்தை உமக்கு அர்ப்பணிக்கிறேன். தயவாய் எனக்குள் வாசம்பண்ணி, என்னை வழிநடத்தி, எனக்கு அரணாய் விளங்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.