அன்பானவர்களே, "தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்" (பிலிப்பியர் 2:13) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். இது எவ்வளவு நிச்சயத்தை அளிக்கிறது! தம்முடைய ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்வில் நிறைவேறும்படி தேவன் செயல்படுகிறார். உங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் அவரது சித்தம் நிறைவேறும்படி அவர் உங்கள் ஆவியில், சிந்தையில், சரீரத்தில், உங்களுக்குள், உங்கள் குடும்பத்தில் கிரியை செய்கிறார். நீங்கள் இயேசுவுக்கு சொந்தமானவர்களாக இருக்கிறீர்கள்; தேவனுடைய திட்டத்தின்படியான ஆசீர்வாதத்தை நீங்கள் பெறும்போது, சந்தோஷமடைவீர்கள். உங்களைக் குறித்த தேவனுடைய சித்தம் பூரணமானதாயிருக்கிறது; தம்முடைய நோக்கம் உங்கள் வாழ்வில் நிறைவேறுவதை காண்பதில் அவர் பிரியமாயிருக்கிறார்.
"அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" (ரோமர் 8:28) என்ற வசனத்தை இன்றைய வாக்குத்தத்தம் உறுதிப்படுத்துகிறது. கொடுமைகள் எழும்பலாம்; உபத்திரவங்கள் வரலாம்; சோதனைகள் நேரிடலாம்; இவற்றின் மத்தியிலும் உங்கள் வாழ்க்கை தேவனுடைய கரங்களில் இருக்கிறது என்று நம்பி நீங்கள் இளைப்பாறுதல் பெறலாம். உங்கள் வாழ்க்கை தேவனுக்கு பிரியமானதாயிருக்கிறபடியினால், அவர் எல்லாம் நன்மைக்கேதுவாக நடக்கும்படி செய்வார். நீங்கள் எதிர்பார்க்கிற, நம்புகிற ஆசீர்வாதங்களுக்கும் மேலாக தம்முடைய நன்மை உங்கள் வாழ்வில் விளங்குவதை காண்பதற்கு தேவன் பிரியமாயிருக்கிறார். தேவன் எல்லாவற்றையும் தமக்கு மகிமையும் உங்களுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்படி நன்மைக்கேதுவாக நடத்துவார் என்ற நிச்சயத்துடன் அவரை நம்பி, துதித்திடுங்கள்.
புதுச்சேரியை சேர்ந்த தயாளன் என்ற சகோதரரின் வாழ்க்கையில் தேவனுடைய வாக்குத்தத்தம் எவ்வாறு நிறைவேறியது என்பது குறித்த சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அவர், தன் மனைவி, இரண்டு மகள்களுடன் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சென்றார். விரைவில் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையில் சென்றவர், பொருளாதார சிக்கலால் அங்கேயே தங்கவேண்டியதாயிற்று. அவர் வேலையை இழந்தார். மிகக்குறைந்த வருமானமே இருந்தது. மூன்று ஆண்டுகள் அவர் மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்களை விற்பனை செய்து, சிரமப்பட்டு பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார். அத்தனை கஷ்டத்தின் மத்தியிலும் அவர் உத்தமமாயிருந்தார். ஜெப கோபுரத்திற்குச் சென்று, ஆண்டவரின் பெலனை எதிர்பார்த்து ஜெப உதவியை நாடினார். ஒரு பங்காளர் கூட்டத்தின்போது, மற்ற பங்காளர்களுடன் அவரையும் நான் சந்தித்தேன். அப்போது, அவரது தலையில் கைவைத்து ஜெபித்தபோது, "தேவன் நிச்சயமாகவே உங்களை ஆசீர்வதிப்பார்; இரட்டிப்பாக பெற்றுக்கொள்வீர்கள்," என்று கூறினேன். தேவனுடைய இந்த வாக்குத்தத்தம் அவர்கள் வாழ்வில் ஆச்சரியவிதமாக வெளிப்பட தொடங்கியது. இழந்த வேலை அவருக்குத் திரும்ப கிடைத்தது. குடும்பத்தின் பொருளாதார நிலை ஸ்திரப்பட்டது. நாங்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்திற்கு, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சகோதரியை அவர்கள் அழைத்து வந்தார்கள். நாங்கள் அவர்களுக்காக ஜெபித்தபோது, இயேசு அந்த சகோதரியை பூரணமாக குணமாக்கினார். கல்லூரியில் படித்த அவரது மகள்களின் படிப்பு ஆசீர்வதிக்கப்பட்டது. தற்போது, அவர்கள் குடும்பமாக தேவனுடைய தயவையும் உண்மையையும் குறித்து சாட்சி கூறி, ஊழியம் செய்கிறார்கள். தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி எல்லாவற்றையும் எவ்வாறு நன்மைக்கேதுவாக நடத்துகிறார் என்பதற்கு சாட்சியாக சகோதரர் தயாளன் வாழ்ந்து வருகிறார்.
அன்பானவர்களே, சகோதரர் தயாளனின் வாழ்வில் தேவன் செயல்பட்டதுபோல, உங்கள் வாழ்விலும் செயல்படுவார். நீங்கள் எதிர்கொள்ளும் எந்த சவாலும், தேவனுடைய வல்லமைக்கு அப்பாற்பட்டதல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவதை பார்ப்பதில் பிரியமும் சந்தோஷமும் கொள்ளும் நம் தேவன், எல்லா சூழ்நிலையையும் நன்மைக்கேதுவாக மாற்றுவார். அவரை நம்புங்கள்; அவருடைய வாக்குத்தத்தங்களை பற்றிக்கொள்ளுங்கள்; விசுவாசத்தில் நடந்திடுங்கள். ஆண்டவர் உண்மையுள்ளவர்; உங்கள் வாழ்வில் அவர் தம் சித்தத்தை நிறைவேற்றி, உங்களை ஆசீர்வதித்து, அளவற்ற ஆனந்தத்தை அருளிச்செய்வார்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய தயவுள்ள சித்தம் என் வாழ்வில் நிறைவேறும்படி நீர் கிரியை செய்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் சிந்தை, சரீரம், ஆவி, குடும்பம் எல்லாவற்றையும் உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். எல்லா உபத்திரவம், சோதனைகளின் மத்தியிலும் உம்மேல் நம்பிக்கையாயிருக்கும்படி என் விசுவாசத்தை பெலப்படுத்தும். எனக்கு நன்மைக்கேதுவாக நீர் எப்போதும் கிரியை செய்துகொண்டிருக்கிறீர் என்பதை நான் மறவாமல் இருப்பதற்கு உதவி செய்யும். உம்முடைய தெய்வீக நோக்கத்திற்கு இசைந்து நான் வாழ்வதால் உம்முடைய சந்தோஷம் எனக்குள் நிறைந்திருக்கும்படி செய்யும். உம்முடைய வேளையில் உம் சித்தம் நிறைவேறும்வரைக்கும் காத்திருக்க எனக்கு பொறுமையை தந்தருளும். உம்முடைய ஆசீர்வாதங்கள் என் குறைவுகளை சந்திப்பவையாக மட்டுமல்லாமல், உம்முடைய நாமத்திற்கு மகிமையையும் கொண்டு வரும்படி செய்யும். நீர் உண்மையுள்ளவராயிருப்பதற்காகவும், உம்முடைய பிள்ளையாக இருக்கும் சந்தோஷத்தை நான் அனுபவிக்கும்படி அருள்செய்வதற்காகவும் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.