"இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்" (சகரியா 9:12)என்பதே தேவன் உங்களுக்குத் தரும் வாக்குத்தத்தமாகும். அன்பானவர்களே, ஒருவேளை உங்கள் வாழ்க்கையில் எல்லாமே அழிந்துபோய்விட்டதுபோல் தோன்றலாம். பரிசுத்தத்தில் நீங்கள் வீழ்ச்சி அடைந்துவிட்டதுபோல் உணரலாம்; பணத்தை இழந்திருக்கலாம்; குடும்ப உறுப்பினர்களை, வேலையை, வீட்டை, மரியாதையை, நற்பெயரை நீங்கள் இழந்திருக்கலாம். யோபுவைப் போல எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோல் உணரலாம். அவன் பிள்ளைகள் இறந்தனர்; வீடு அழிந்தது; ஆஸ்திகள் எடுத்துக்கொள்ளப்பட்டன; ஆரோக்கியம் கெட்டுப்போனது; அவமானத்துக்குள்ளாக்கப்பட்டான். ஒரு காலத்தில் கனமுள்ளவனாய், செல்வந்தனாய் இருந்த மனிதனாகிய யோபு, புழுதியில் உட்கார்ந்து, தன்னுடைய பருக்களை சுறண்டிக் கொண்டிருக்கும்படி, எல்லோருக்கும் முன்பாய் தாழ்ச்சியடைந்த நிலைக்குள்ளானான். சத்துருவின் தாக்குதலால் கணப்பொழுதில் எல்லாம் அழிந்துபோயின; யோபு தேவ சமுகத்தை உணர முடியாமல் தவித்தான். முன்பு அவனுக்கு அருகே இருந்த அதே தேவன், இப்போது தூரமானார். அவன், "நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்" என்று புலம்பினான்.

ஒருவேளை நீங்களும் இப்படி உடைந்துபோன நிலையில் இருக்கலாம். ஆனால் தேவன், "நான் இரட்டிப்பாய் திரும்ப தருவேன். உடைந்துபோன நிலையிலிருக்கும் உன்னை தூக்கியெடுப்பேன். நீ திடமாய் நிற்கும்படி செய்வேன். இரட்டிப்பான பங்கால் உன்னை நிரப்புவேன்," என்று கூறுகிறார். எல்லாம் இருமடங்காய் திரும்ப கிடைக்கும். நீங்கள் இரட்டிப்பான பலனை பெறுவதற்காகவே இயேசு சிலுவையில் கிரயத்தை செலுத்தினார். இன்றைக்கு நீங்கள் யோபுவை போல உணரலாம். ஆனால், யோபுவைப் போல, மற்றவர்களுக்காக ஜெபிக்கிறதற்கு நீங்கள் எங்களுடன் நிற்பதால், இயேசுவுடன் பங்காளராக இருக்கிறீர்கள். ஆகவே, தேவன் உங்களுக்கு இரட்டிப்பாய் திரும்ப தருவார்.

ஒரு சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். வனிதா என்ற சகோதரிக்கு 1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. 19 ஆண்டு காலம் அவர்களுக்கு குழந்தையில்லாதிருந்தது. அவர்கள் கொடும் வேதனையை அனுபவித்தார்கள். 10 லட்ச ரூபாய் செலவழித்தும் எந்த சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை. அவர்களும் அவர்கள் கணவரும் நம்பிக்கை இழந்துபோயினர். அப்போதுதான் அவர்கள் கோயம்புத்தூரில் இருக்கும் பெதஸ்தா ஜெப மையத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் சகோதரி, இவர்கள் கருத்தரிக்கும் முன்னரே விசுவாசத்தோடு இளம் பங்காளர் திட்டத்தில் பதிவுசெய்தார்கள். சகோதரி வனிதா, உபவாசித்து, பெதஸ்தா ஜெப மையத்திலுள்ள ஜெப மண்டபத்தில் ஊக்கமாய் ஜெபித்தார்கள். அவர்கள், "ஆண்டவரே, அடுத்த முறை ஒரு குழந்தையுடன் வரவேண்டும்," என்று ஜெபித்தார்கள். அவர்கள் இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையும் தாங்கினார்கள்; அந்த நிகழ்ச்சியில் நான் அவர்களுக்காக ஜெபித்தேன். அவர்கள் அடுத்த மாதமே கருத்தரித்தார்கள்; தேவனுக்கே துதியுண்டாவதாக. அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று மருத்துவர் தெரிவித்தார். அவர்களுக்கு மகன் - மகள் என்று இரட்டிப்பான ஆசீர்வாதம் கிடைத்தது.

தேவன் இவ்வாறே உங்களையும் இரட்டிப்பாய் ஆசீர்வதிப்பார். இந்த ஆசீர்வாதத்திற்கான கிரயத்தை இயேசு செலுத்திவிட்டார். நீங்கள் நீதியாய் வாழ்ந்திருக்கிறீர்கள்; இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் மூலம் மற்றவர்களுக்காக ஜெபித்திருக்கிறீர்கள். நிச்சயமாகவே தேவன் உங்களுக்கு இரட்டிப்பான பங்கை தருவார்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் திரும்ப தருவேன் என்று சொல்லிய வாக்குத்தத்தத்தை நம்பி, விசுவாசத்துடன் உம்மிடம் வருகிறேன். ஆண்டவரே, என் வாழ்வில் உடைந்திருக்கும் பகுதிகளையும், எல்லா இழப்புகளையும், கண்ணீர் எல்லாவற்றையும் நீர் காண்கிறீர். உம்முடைய இரட்டிப்பான ஆசீர்வாதத்தினாலும், ஆரோக்கியத்தினாலும் இந்த வெறுமையான இடங்கள் எல்லாவற்றையும் நிரப்புவீராக. உடைந்துபோன நிலையிலிருந்து என்னை தூக்கியெடுத்து, என் பெலனை திரும்ப தந்தருளும். நீர் வாக்குப்பண்ணியபடியே, இழந்துபோனவை எல்லாம் இரட்டிப்பான பங்காய் திரும்ப கிடைக்கட்டும். இந்த ஆசீர்வாதத்திற்கான கிரயத்தை நீர் செலுத்தியுள்ளதற்காகவும், இந்த நம்பிக்கையை எனக்கு அளிப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய அன்பிலும் உண்மையிலும் நான் உறுதியாய் நிற்பதற்கு உதவி செய்தருளும். நான் உம்மையே தொடர்ந்து தேடுவதாலும், மற்றவர்களுக்காக ஜெபிப்பதாலும் நீர் அளிக்கும் இரட்டிப்பான பலன் என் வாழ்வில் நிறைந்து வழியவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.