அன்பானவர்களே, தேவன் உங்களை பரிபூரணமாக நேசிக்கிறார்; உங்களை அதிகமாய் ஆசீர்வதிக்க அவர் விரும்புகிறார். ஆகவே, மனந்தளர்ந்துபோகாமல், அவரையே எதிர்பாருங்கள். "சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்" (கொலோசெயர் 2:10) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். ஆண்டவராகிய இயேசுவுக்குள் மெய்யான பரிபூரணம் இருக்கிறது. அவர்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையில் தளராதிருங்கள். ஒருபோதும் அவரையோ, அவர்மீதான விசுவாசத்தை விட்டுவிடாதிருங்கள். நம் வாழ்வில் தம் பரிபூரணத்தை விளங்கச் செய்வதாக இன்றைக்கு தேவன் உறுதியாய் கூறுகிறார்.
பாவனா என்ற சகோதரிக்கு திருமணம் நடைபெற்றது. அவர்கள் ஆனந்தமான இல்லற வாழ்வை எதிர்நோக்கி, மிகுந்த சந்தோஷமாக கணவருடன் கர்நாடக மாநிலத்திற்குச் சென்றார்கள். அவர்களுக்கு வங்கியில் நிரந்தர வேலை இருந்தது. ஆகவே, எதிர்காலம் நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள். ஆனால், ஆறுமாத காலத்திற்குள் அனைத்தும் மாறிப்போனது. அவர்களுக்கும் கணவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் தோன்றின; விரைவிலேயே முரண்பாடு ஏற்பட்டது. கணவர், அவர்களை அதிகமாய் திட்டினார்; சில நேரங்களில் அடிக்கவும் செய்தார். குடும்பத்தில் மகிழ்ச்சி மறைந்தது. கணவர், எங்கு சென்றார் என்பது தெரியாமலே அவர்களை விட்டுச் சென்றார். எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று திகைத்து, என்ன செய்வதென்று தெரியாமல் மனமுடைந்துபோனார்கள் பாவனா. ஓராண்டு பிரிந்து வாழ்ந்த நிலையில் விவாகரத்து பெறுவதென இருவரும் தீர்மானித்தார்கள். இவ்வளவு துயரத்தின் மத்தியிலும் அவர்கள் ஆண்டவர் மீதிருந்த விசுவாசத்தை இழந்துபோகவில்லை. அவர்கள் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனக்காக ஜெபிக்கக் கேட்டுக் கொண்டதுடன், தன்னுடைய வேதனையான சூழ்நிலையை விளக்கி, அவர்களுக்காக ஜெபிக்கும்படி கேட்டு என் தந்தை Dr. பால் தினகரனுக்கு கடிதமும் எழுதினார்கள். என் தந்தை அவர்களுக்காக ஜெபித்து, "கர்த்தர் உங்களுக்காக யாவற்றையும் செய்துமுடிப்பார். கவலைப்படாதிருங்கள்," என்று பதில் எழுதினார். புது நம்பிக்கையுடன் சகோதரி பாவனா, இந்த வாக்குத்தத்தத்தை பற்றிக்கொண்டு, ஊக்கமாய் ஜெபித்தார்கள். அவர்கள் விவாகரத்துக்கான ஆவணங்களில் கையெழுத்திட வேண்டிய நாளும் வந்தது. அவற்றை ஆயத்தம் செய்வதற்காக அவர்கள் ஆந்திர பிரதேசத்திலுள்ள தங்கள் சொந்த ஊருக்குச் சென்றார்கள். அவர்கள் கையெழுத்திடுவதற்கு முன்னர், நம்பவே இயலாத ஒரு விஷயம் நடந்தது. அவர்கள் கணவர், கர்நாடகாவிலிருந்து, ஆந்திர பிரதேசத்தில் அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். "என்னை சேர்த்துக்கொள். நாம் இணைந்து வாழலாம்," என்று அவர் மனந்திரும்பி கேட்டுக்கொண்டார். சகோதரி பாவனா மிகுந்த சந்தோஷத்துடன் அவருடன் இணைந்து மீண்டும் இல்லறம் நடத்த கர்நாடகாவுக்கு திரும்பினார்கள். இன்றும், "அது எப்படி நடந்ததென்றே தெரியவில்லை. ஆண்டவரையே துதிக்கிறேன்," என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார்கள். இப்போது அவர்களுக்கு அழகிய மகள் இருக்கிறாள். குடும்பமாக சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள். அன்பானவர்களே, சகோதரி பாவனாவின் வாழ்க்கையை தேவன் மறுபடியும் கட்டி எழுப்பியதுபோல, உங்களுக்கும் பரிபூரணம் திரும்பச் செய்வார். அவரை நம்புங்கள்; அசையாத விசுவாசத்துடன் ஜெபித்திடுங்கள்; அவருடைய பரிபூரணம் உங்கள் வாழ்வில் விளங்குவதை காண்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் யாவற்றையும் செய்துமுடிக்கிற தேவன் என்று நம்பி, விசுவாசம் நிறைந்த இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். ஆண்டவரே, உம்முடைய பரிபூரணம் வரும்போது, குறைவு, முறிவு அனைத்தும் மறைந்துபோகும் என்று அறிந்திருக்கிறேன். நீர் உம்முடைய வேளையில் எல்லாவற்றையும் நேர்த்தியாகச் செய்து முடிப்பீர். என் வாழ்க்கையைக் குறித்த உம்முடைய தெய்வீக திட்டத்தை நம்புகிறேன். என்னுடைய நம்பிக்கையை, பாரங்களை உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன். என் காத்திருக்குதலை நீர் பார்க்கிறீர்; என் விண்ணப்பங்களை அறிந்திருக்கிறீர்; என் உள்ளிந்திரியம் உமக்கு தெரியும். ஆண்டவரே, நீர் எனக்காக ஆயத்தம்பண்ணிவைத்திருக்கிற வெற்றியின் பாதையில் என்னை நடத்தும். எல்லா தடைகளையும் அகற்றி, நீர் எனக்கென்று திட்டம்பண்ணியுள்ள சிறப்பான எதிர்காலத்தை நோக்கி என் அடிகளை வழிநடத்தும். என் வாழ்க்கை உம்முடைய மகிமையை காண்பிக்கட்டும். நீர் எனக்கு வாக்குப்பண்ணியுள்ள பரிபூரணத்திற்கு நான் நடக்கும்படி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.