எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்" (சங்கீதம் 61:2)என்ற அருமையான வசனத்தை நாம் தியானிப்போம்.

நீங்கள் மனஞ்சலித்து, சோர்ந்துபோயிருக்கிறீர்களா? உங்களைப் பெலப்படுத்தவோ, உதவி செய்யவோ யாருமில்லை என்று நினைக்கிறீர்களா? இதுபோன்ற தருணங்களில் தேவனுடைய வார்த்தை நமக்கு பெரிய ஆறுதலை தரும். யோனா என்று தேவனுடைய மனுஷனுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைக் குறித்து வேதம் நமக்குக் கூறுகிறது. அவன் பெரிய போராட்டங்களை கடந்து சென்றான். யோனா, தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், அவர் செல்லும்படி கூறியதற்கு எதிர்திசையில் சென்றான். அவனுடைய கீழ்ப்படியாமையின் காரணமாக, பயங்கரமான சூழ்நிலைக்குள் சிக்கினான். அவனை பெரிய மீன் ஒன்று விழுங்கியது; மீனின் வயிற்றுக்குள் அவன் மூன்று நாட்கள் இருந்தான்.

அந்த இக்கட்டை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? மீனின் செரிமான மண்டலம் வேலை செய்ய ஆரம்பித்ததும், யோனா, அதிக வேதனையை அனுபவித்திருப்பான். அவன் இருளுக்குள் சிக்கியிருந்தான்; பயம் அவனை பிடித்திருந்தது; ஆனால், அந்த வேதனையின் மத்தியிலும் யோனா, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். யோனா, மீனின் வயிற்றுக்குள் இருந்தாலும் கர்த்தர் அவன் ஜெபத்தைக் கேட்டார் என்று வேதத்தில் பார்க்கிறோம். "என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்" (யோனா 2:1,2). அவன் கீழ்ப்படியாமற்போனாலும், தேவன் அவன் கூப்பிடுதலுக்குச் செவிகொடுத்து, மீனுக்குள் இருந்து அவனை உயிரோடு வெளியே கொண்டு வந்தார்.

யோனாவை போல, தாவீது ராஜாவும், நெருக்கத்தின் மத்தியில் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். "நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்" (சங்கீதம் 5:2)என்று அவன் வேண்டிக்கொண்டான். யோனாவும் தாவீதும் தங்களுக்கு உதவி தேவைப்படும்போது தேவனை நோக்கிப் பார்த்தார்கள். அவர்கள் உதவி கேட்டு கூப்பிட்டதற்கு தேவன் பதிலளித்தார். யோனாவை மீன் கக்கிவிட்டது. தாவீது, தேவ பெலத்தினால் தப்பினான். தம் பிள்ளைகளின் ஜெபங்களை கேட்பதற்கு தேவன் எப்போதும் ஆயத்தமாயிருக்கிறார்.

"நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" (யாக்கோபு 5:16)என்று வேதம் கூறுகிறது. நாம் உண்மையான வாஞ்சையோடு ஜெபிக்கும்போது தேவன் கேட்டு பதிலளிக்கிறார்.  "நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" (பிலிப்பியர் 4:6)என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது.  கலக்கம் நம்மை பிடித்துக்கொள்ள அனுமதிக்காதபடி, எல்லா கவலைகளையும் பயத்தையும் போராட்டங்களையும் ஜெபத்தில் ஆண்டவரிடத்தில் கொண்டு வருவோம். தேவன் நம் ஜெபத்தைக் கேட்பார் என்று வேதம் வாக்குக்கொடுக்கிறது (சங்கீதம் 65:2). மீனின் வயிற்றுக்குள் இருந்து யோனா கூப்பிட்டதைக் கேட்டு அவனை விடுவித்த தேவன், உங்கள் கூப்பிடுதலையும் கேட்டு உங்கள் உபத்திரவங்களிலிருந்து உங்களை விடுவிப்பார். சூழ்நிலை ஆழமாகவும், நீங்கள் மூழ்கக்கூடியதாகவும் இருந்தாலும், உங்கள் மீட்பதற்கு தேவன் ஆயத்தமாயிருக்கிறார். இப்போதும் உங்கள் இருதயத்தை திருப்பி தேவனை நோக்கி கூப்பிடுங்கள்; அவர் உங்கள் பாரங்கள் எல்லாவற்றையும் நீக்கி, உங்கள் வாழ்வில் அற்புதங்களைச் செய்வார். தேவன், யோனாவுக்கு செய்ததைப்போல, உங்களுக்கும் செய்வார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீரே என் கன்மலையும் அடைக்கலமுமாயிருக்கிறீர். நான் பெலவீனமாகும் தருணத்தில் பெலனையும் வழிகாட்டுதலையும் நாடி உம்மிடம் வருகிறேன். நீர் என்னிலும் உயர்ந்த கன்மலையாயிருக்கிறீர்; என்னுடைய எல்லா உபத்திரவங்களின்போதும் உம்மை மறைவிடமாய் கொள்கிறேன். யோனா, ஆழத்தில் மீனுக்குள் இருந்து கூப்பிட்டதை நீர் கேட்டதுபோல, இன்றைக்கு என்னுடைய கூப்பிடுதலுக்குச் செவிகொடுத்து, என்னுடைய இக்கட்டுகளிலிருந்து மீட்டுக்கொள்ளும். ஆண்டவரே, நீர் என்னை விடுவிக்கிறவராயிருக்கிறீர்; உம்முடைய சமுகத்தில் நான் பாதுகாப்பாய் இருக்கிறேன். உம்முடைய பிள்ளைகளின் ஜெபங்களை நீர் எப்போதும் கேட்டு, பதிலளிப்பீர் என்று அறிந்து உம்மேல் முழு நம்பிக்கை வைப்பதற்கு உதவும். அனுதினமும் உம்முடைய வார்த்தைக்கு நேராக என்னை வழிநடத்தி, சமாதானத்தினாலும் பெலத்தினாலும் என் இருதயத்தை நிரப்பும். என்னுடைய கன்மலையாக இருந்து, உபத்திரவங்களுக்கு மேலாக என்னை எப்போதும் உயர்த்துவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.