அன்பானவர்களே, "கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்" (உபாகமம் 28:8) என்பதே இன்றைக்கு உங்களுக்கு தேவன் தரும் வாக்குத்தத்தமாகும். தேவன் உங்கள் களஞ்சியத்தை ஆசீர்வதிக்கிறார்; தம்முடைய தயவு அதன்மேல் விளங்கும்படி கட்டளையிடுகிறார். களஞ்சியம் என்பது அறுவடை செய்யப்பட்ட தானியங்களை சேமித்து வைக்கப்படும் இடமாகும். நீங்கள் தினந்தோறும் இயேசுவை இருதயத்தில் சுமந்துசெல்லும்படி, உங்கள் இருதயம் ஒரு களஞ்சியமாயிருக்கிறது. அப்படிச் செய்யும்போது, தேவன் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பார். உங்கள் குடும்பமும் ஒரு களஞ்சியமாயிருக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது நீங்களும் உங்கள் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று வேதம் கூறுகிறது. உங்கள் குடும்பத்தினர் அனைவரின் இருதயங்களிலும் இயேசு வாசம்பண்ணுவதால், அவர்கள் அனைவரும் அவரை சுமந்துசெல்வதால் உங்கள் குடும்பமே ஒரு களஞ்சியமாக விளங்குகிறது. இயேசுவின் நாமத்தை உலகமெங்கும் பரவச்செய்யும்படி நீங்கள் காணிக்கைகளை கொடுக்கும் தேவனுடைய ஊழியமும் ஒரு களஞ்சியமாயிருக்கிறது. அது இயேசு வாசம்பண்ணும் இடமாக விளங்குகிறது. ஜெப கோபுரங்களில் அவரது பிரசன்னம் தங்கியிருக்கிறது. எங்கு இயேசு அழைக்கிறார் கூட்டங்கள் நடந்தாலும் அல்லது மீடியா, பத்திரிகை, சமூக ஊடக தளங்கள் மற்றும் நாம் அனுப்பும் கடிதங்கள் இவற்றின் மூலமாகவும் இயேசு தம் பிள்ளைகளின் இருதயங்களை நிரப்புகிறார். நீங்கள் ஊழியத்தை தாங்குவதால், களஞ்சியங்களை இயேசுவால் நிரப்புகிறீர்கள். ஆசீர்வதிக்கும் இயேசுவை கொண்டு வருவதால், தேவன் உங்கள் களஞ்சியங்கள்மேல் ஆசீர்வாதத்தைக் கட்டளையிடுகிறார். நாம் தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வதற்காக, இயேசு சாபமானார் என்று வேதம் கூறுகிறது (கலாத்தியர் 3:13). நம்முடைய இருதயத்தினுள் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது, நம் குடும்பத்தினுள் அவரை அழைக்கும்போது, ஜெபத்தின் மூலமாகவும், காணிக்கை மூலமாகவும் அவருடைய ராஜ்யத்தின் விதைக்கும்போது, தேவன் நம் வாழ்வில் ஆசீர்வாதத்தை பொழிகிறார்.

உங்கள் இருதயம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் ஊழியம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வேலை, படிப்பு, வியாபாரம், உறவுகள், சமுதாய வாழ்க்கை, உங்கள் கையின் பிரயாசங்கள் யாவும் தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறது. சூழ்நிலைகள் அநியாயமானவையாக காணப்பட்டாலும், தேவனுடைய ஆசீர்வாதங்கள் உங்கள்மேல் தங்கும். யோசேப்பு பொய்யாய்க் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டான்; ஆனால், தேவன் அவனோடிருந்தார். கர்த்தர், அவன் கரத்தின் கிரியைகளை ஆசீர்வதித்தார்; விரைவிலேயே அவன் யாவற்றின்மேலும் அதிகாரியாக நியமிக்கப்பட்டான். இன்றைக்கு இதே ஆசீர்வாதத்தை தேவன் உங்களுக்கென்று வைத்திருக்கிறார்.

எல்லாவற்றிலும் இயேசு உங்களோடிருக்கிறபடியினால், அவரது தெய்வீக கிருபையை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். ஆகவே, எதையும் செய்ய ஆரம்பிக்கும் முன்னர், உங்கள் கிரியைகளில் அவரே முக்கியமானவராக விளங்கும்படி அவரிடம் ஜெபித்து, அவரை அழைத்திடுங்கள். சமையல் செய்யும் முன்னர், தொலைபேசியில் ஓர் அழைப்புக்கு பதில் கூறும் முன்னர், கதவை திறக்கும் முன்னர், படிப்பதற்கு, வேலை செய்வதற்கு, வேதாகமத்தை வாசிப்பதற்கு முன்னரும் கூட ஜெபியுங்கள். "இயேசுவே, இந்தக் காரியத்தை ஆசீர்வதியும்," என்று கேளுங்கள். அப்போது, நீங்கள் செய்கிற யாவும் ஆசீர்வதிக்கப்படும்; நீங்கள் செழிப்பீர்கள். தேவன்தாமே இந்த கிருபையை உங்களுக்குத் தருவாராக.

தேவனுடைய ஊழியத்தில் உங்கள் காணிக்கைகளை விதைப்பதற்கு முன்னரே, அதை அவர் ஆசீர்வதிக்கவேண்டும் என்று ஜெபியுங்கள். அது சென்று, பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை தொடும்; அதன் பலனாக தேவ ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்க்கையில் நிரம்பி வழியும்.

நாமக்கல் பகுதியில் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த சித்ரா என்ற சகோதரி தன்னுடைய சாட்சியை பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள் குடும்பத்தின் தொழில் விவசாயம். மழை வந்து தங்களுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கவேண்டும் என்று அவர்கள் காத்திருந்தனர். ஆனால், 2018ம் வருடம், மழையில்லாமல் கொடிய பஞ்சம் உண்டாகி, விளைச்சல் இல்லாமற்போனது. விளைச்சல் இல்லாததால், வருமானம் இல்லை; செலவு செய்ய பணமுமில்லை. உழவு செய்யவும், விவசாய வேலையாட்களுக்கு கூலி கொடுக்கவும், வீட்டின் அன்றாட தேவைகளை சந்திப்பதற்கும் பணமில்லாமல் தவித்தனர். இந்த அவலநிலையில், இயேசு அழைக்கிறார் ஜெப வீரர்கள், ஜெப கோபுரத்திலிருந்து அவர்கள் வீட்டுக்குச் சென்று ஜெபித்தனர். "ஆண்டவரே, உமது பிள்ளைகளுக்கு எந்தத் தீங்கும் நேரக்கூடாது. அவர் கண்ணீரோடே விதைத்திருக்கிறார்கள்; இப்போது சந்தோஷத்துடனே அறுக்கும்படி செய்யும்; அவர்கள் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றும்," என்று அவர்கள் ஆண்டவரிடம் மன்றாடினர். 2019ம் ஆண்டும் வந்தது. மழை பெய்தது; நிலம் விளைச்சலுக்கு ஏற்றதாக மாறியது. வேர்க்கடலை நன்றாக வளர்ந்தது. ஆனால், கடலை பறிக்கும் காலம் நெருங்கியபோது, புயல் வரப்போவதாக எச்சரிக்கை விடப்பட்டது. புயல் வந்தால் பயிர் அனைத்தும் அழிந்துபோகுமே என்ற கவலை அவர்களைப் பிடித்தது. அவர்கள் ஜெப கோபுரத்தை தொடர்பு கொண்டார்கள். ஜெப வீரர்கள் ஊக்கமாக ஜெபித்தார்கள். புயல் வராமல் அற்புதவிதமாய் நின்றுபோனது. சூரியன் பிரகாசித்தது. வேர்க்கடலை காய்வதற்கு வெயில் தேவை. விளைச்சல் அமோகமாக இருந்தது. ஆண்டுக்கணக்கில் இருந்த வேதனை, இழப்பு அனைத்தும் மாறியது. அவர்கள் வருமானம் பெருகியது; குடும்பம் செழித்தது; அவர்கள் வேலையாட்களும் ஆசீர்வதிக்கப்பட்டனர். விதைக்கும்போது, வளரும்போது, பறிக்கும்போது என்று எல்லா நிலைகளிலும் ஜெப கோபுரத்திலிருந்து ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. தேவன் அவர்கள் விசுவாசத்தை கனப்படுத்தினார். நீங்கள் ஜெப கோபுரத்தின் மூலமாக மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது, தேவன் உங்கள் களஞ்சியங்களை ஆசீர்வதிப்பார். இயேசுவுக்கே முக்கியத்துவம் கொடுங்கள்; அவருடைய வாக்குத்தத்தங்களை நம்புங்கள்; அப்போது உங்கள் வாழ்க்கையில் அவருடைய பரிபூரண ஆசீர்வாதங்கள் விளங்குவதை காண்பீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என் கையின் பிரயாசங்களை ஆசீர்வதிப்பதாக நீர் வாக்குப்பண்ணியிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய இருதயம், குடும்பம், வேலை, நான் செய்கிற பிரயாசங்கள் யாவற்றையும் உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். என் இருதயத்திலும் வீட்டிலும் நீர் தங்கியிரும்; உம்முடைய பிரசன்னத்தினாலும் சமாதானத்தினாலும் என் வாழ்க்கையை நிரப்பும். என்னுடைய வேலை, படிப்பு, உறவுகள் எல்லாவற்றின்மேலும் உம்முடைய தெய்வீக தயவு தங்கி, எனக்கு வெற்றியை அளிக்கட்டும்; என்னை செழிக்கப்பண்ணட்டும். இக்கட்டின் மத்தியில் யோசேப்பை ஆசீர்வதித்ததுபோல, கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும் என்னை ஆசீர்வதியும்.  ஆண்டவரே, என்னுடைய காணிக்கைகளையும் ஜெபங்களையும் உமக்கு நேராக ஏறெடுக்கிறேன். அவை மக்களை தொட்டு, அநேகரை உம்முடைய ராஜ்யத்தில் சேர்க்கட்டும். என் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பி வழியட்டும்; நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.