அன்பானவர்களே, இன்றைக்கு நம்மை பெலப்படுத்தும் வார்த்தையை தேவன் தந்திருக்கிறார். வேதாகமத்தில், அவர் உங்களை பராக்கிரமசாலி என்று அழைக்கிறார். அந்த பராக்கிரமசாலிக்கு அவர் எப்படி உதவி செய்வார் என்பதை தியானிப்போம். "உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்" (ஏசாயா 41:13)என்று இன்றைக்கான வாக்குத்தத்த வசனம் கூறுகிறது.

தேவன் நம் வலதுகையைப் பிடித்திருக்கிறார் என்று இந்த வசனம் கூறுகிறது. பலர், வலது கையினால்தான் வேலைகளைச் செய்கிறோம்; தேர்வு எழுதுகிறோம்; அன்றாட கடமைகளை செய்கிறோம். கைக்குலுக்கும்போது அல்லது மைக்கை பிடித்து பேசும்போது சிலருடைய கைகள் நடுங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம். பெரிய வேலைகள் அல்லது சவாலை நாம் எதிர்கொள்ள நேரிடும்போது பயம் நம்மை பிடிக்கிறது. ஆனால், தேவன், "நான் உன் வலதுகையைப் பிடித்திருக்கிறேன். என் கரத்தை உன்மேல் வைப்பேன்; நீ பயப்படமாட்டாய்," என்று கூறுகிறார். அவரே உங்களுக்குச் சகாயர். ஆகவே, பயப்படாதிருங்கள்.  

அவர் மோசேயிடம், "நான் உன்னை தனியே அனுப்புவதில்லை. என் வார்த்தைகளை உன் வாயில் போடுவேன். அடையாளங்களை, அற்புதங்களை, அதிசயங்களை செய்யும்படியாய் நான் உன்னுடன் வருகிறேன்," என்று கூறியதுபோல, உங்கள் இருதயத்தினுள் தமது ஞானத்தை ஊற்றும்படி அவர் உங்களுடன் வருகிறார். நீங்கள் செய்து முடிக்கவேண்டிய காரியங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான திறனையும் பெலனை அவர் உங்களுக்கு தருவார்.

இளைஞர் ஒருவர் தன் சாட்சியை பகிர்ந்துகொண்டார். அவர், "நான் படிக்க முடியாமல் சிரமப்பட்டபோது, இளம் பங்காளர் திட்டத்தில் சேர்ந்தேன். ஆச்சரியவிதமாக தேவன் எனக்கு உதவி செய்ய ஆரம்பித்தார். அவர் கரம் செயல்பட்டு என்னை படிப்பில் முன்னேறச் செய்வதை கண்டேன். பள்ளி தேர்வில் 85% மதிப்பெண்கள் பெற்றேன். மேற்படிப்பு படித்தபோது, மற்றவர்களுக்கு போதிக்கும்படியான அழைப்பு இருப்பதாக உணர்ந்தேன். பேராசிரியர் வேலைக்குச் செல்ல முடிவு செய்தேன். அதற்கு தேசிய அளவிலான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியதிருந்தது. அதில் தேர்ச்சி பெற முடியாது என்று அனைவரும் கூறினர். அந்தத் தேர்வை 70,000 பேர் எழுதினார்கள். அதற்காக நான் ஆயத்தப்பட்டபோது, தேவன் எனக்கு உதவி செய்வதையும், பெலப்படுத்துவதையும், கடினமாக உழைக்கும்படி ஒழுங்குப்படுத்துவதையும் உணர்ந்தேன். 70,000 பேரில் 134 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். இந்திய அளவில் நான் 21வது இடத்தில் தேர்ச்சி பெற்றேன். தற்போது புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிகிறேன்," என்று அவர் கூறினார். அன்பானவர்களே, இது எவ்வளவு பெரிதான சாதனை!

தேவன் நம்மை இவ்விதமாகவே வழிநடத்துகிறார். அவர் உங்களுக்கும் வழிகாட்டுவார். இளம் பங்காளர் திட்டத்தில் சேருங்கள். நீங்கள் இளம் பங்காளராகும்போது, ஜெப வீரர்கள் தினமும் உங்கள் பெயரை உச்சரித்து, உங்களுக்காக ஜெபிப்பார்கள். தேவாதி தேவன் உங்களுடன் பங்காளராகி, உங்களை கரத்தைப் பிடித்து, உங்களுக்கு உதவி செய்வார். நம் எதிர்காலத்தை இயேசுவின் கரங்களில் கொடுப்போமா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வலதுகையைப் பிடித்து, நான் ஒருபோதும் தனியே இல்லை என்பதை எனக்கு நினைவுப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் பயப்படுகிற வேளையில், எதுவும் நிச்சயமில்லாத குழப்பத்தின் மத்தியில் உம்முடைய பெலனையே நான் நம்புகிறேன். என் இருதயத்தை உம்முடைய ஞானத்தினால் நிரப்பும்;  இக்கட்டுகளின் வழியாக நான் செல்லும்போது எனக்கு வழிகாட்டும். நீர் மோசேயுடன் இருந்ததுபோல என்னுடனும் இருப்பீராக; உம் வார்த்தைகளை என் வாயில் போடுவீராக. செய்யவேண்டிய வேலைகளை முடிக்கும்படி என் கரங்களை பெலப்படுத்தும்; நடுங்குகிற என் ஆவியை சாந்தப்படுத்தும். என் எதிர்காலத்தை உம்முடைய அன்பின் கரங்களில் ஒப்படைக்கிறேன். நீர் மாத்திரமே தரக்கூடிய திறமையையும் வல்லமையையும் எனக்கு தந்து என்னை வழிநடத்தும். நீர் இப்போதும் எப்போதும் எனக்கு சகாயராக இருக்கிறபடியினால் நான் பயப்பட மாட்டேன் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.