அன்பானவர்களே, இன்றைக்கு இயேசு உங்களோடு கூட இருந்து, உங்களோடு பேசி, உங்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தை அளிக்கப் போகிறார்; நீங்கள் மகிழ்ச்சியினால் புன்னகைப்பீர்கள். "தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" (ரோமர் 8:32)என்று வேதம் அருமையாகக் கூறுகிறது.
தேவன் தம்முடைய சொந்தக்குமாரனையும் நமக்காகக் கொடுத்தார் என்று இந்த வசனம் கூறுகிறது. தேவன் இந்த உலகிற்கு மனித உருவில் வந்ததை இது குறிக்கிறது. இது பரலோகத்தில் இருக்கிற பிதாவுக்கும், பூமியில் இருக்கிற குமாரனுக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்துகிறது; நம்முடனான பிதா - குமாரனின் உறவை விளக்குகிறது. இயேசு, தேவ குமாரன் என்று அழைக்கப்படுகிறார். தேவன் தம்முடைய சொந்தக்குமாரனையும் தந்துவிட்டார் என்று வசனம் கூறுகிறது. ஆண்டவர் நமக்காக எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. தம் சொந்தக்குமாரனையே தந்த தேவன், மற்ற எல்லாவற்றையும் நமக்கு கிருபையாக அருளாதிருப்பது எப்படி? தமது குமாரனாகிய இயேசுவை தந்ததன் மூலம் தேவன் நம் ஜீவனை காத்தார். இயேசு தம்முடைய பரிசுத்த இரத்தத்தை சிந்த அவர் அனுமதித்தார்; அந்த இரத்தம் நம் ஆத்துமாக்களை கழுவி இரட்சித்தது. அப்படிச் செய்வதற்கு, அவர் தம்முடைய சொந்தக்குமாரனாகிய இயேசுவை கொடுக்க மனதாயிருந்தால், நாம் விரும்புவதையும் அவர் கொடுக்கமாட்டாரா?  

பல வேளைகளில் நாம் இதை நம்புகிறதற்கு அல்லது போதுமான அளவில் விசுவாசிக்கிறதற்கு முடியாமல் தவிக்கிறோம்; ஆகவே, ஏதாவது ஒன்றை வெற்றிகரமாக செய்வதாக இருக்கலாம்; கடனை அடைப்பதாக இருக்கலாம்; நமக்கு அன்பானோரின் கர்ப்பம் ஆசீர்வதிக்கப்படுவதாக இருக்கலாம், இதுபோன்ற காரியங்களில் என்ன நடக்கும் என்று கவலைப்பட நேரிடுகிறது. தம்முடைய சொந்தக்குமாரனாகிய இயேசுவையே தந்து நம்மேல் தாம் வைத்திருக்கிற அன்பை காட்டிய தேவன், நமக்குத் தேவையான எல்லாவற்றையும் அருளாமலிருப்பாரா? என்று இந்த வசனம் நினைவுப்படுத்துகிறது. மத்தேயு கூறியுள்ளபடி, ஆகாயத்து பறவைகள் தங்களுக்கு வேண்டியவற்றை பரம பிதா அருளிச் செய்வார் என்று நம்புவதுபோல, நாமும் தேவனை விசுவாசிப்போம். உங்களுக்கு தினமும் வேண்டியவற்றை அவர் அருளிச்செய்வார். உங்களை போஷித்து திருப்தியாக்குவார். ஆகவே, "ஆண்டவரே, நீர் என்னோடு இருப்பதற்காகவும், எல்லாவற்றையும் அருளிச்செய்வதாகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்," என்று அவரை துதித்துக்கொண்டே இருப்போமா?  

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய அருமையான வாக்குத்தத்தத்தினால் என் வாழ்க்கையில் நீர் ஆசீர்வாதத்தை அருளியுள்ளதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர், எனக்காக பலியாகி, உம்முடைய இரத்தத்தை சிந்தி, என் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளும்படி உம்முடைய சிங்காசனத்தை விட்டு, பூமிக்கு வந்தீர்.  நீர் எவ்வளவாய் என்னை நேசிக்கிறீர் என்பதையும், எனக்கு எல்லாவற்றையும் தருவதற்கு மனதாயிருக்கிறீர் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. ஆதலால், எனக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடிய வல்லமை உமக்கு இருக்கிறது. நீர் பிழைக்கிறபடியினால், ஜெபத்திற்கு பதில் அளிக்கிற தேவனாகிய நீர் என் தேவைகள் எல்லாவற்றையும் அருளிச்செய்வீர் என்றும், எனக்கு சுகத்தை, சமாதானத்தை, சந்தோஷத்தை மறுபடியும் தருவீர் என்றும் நான் அறிந்து நம்பிக்கையோடு நாளைய தினத்தை எதிர்கொள்ள முடியும். எனக்கு எந்த நன்மையையும் தடைபடவிடமாட்டீர். உம்முடைய தயவுக்காகவும் இரக்கத்திற்காகவும் நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.