எனக்கு அன்பானவர்களே, "கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்" (சங்கீதம் 9:10) என்று வேதம் கூறுகிறது. தேவன், தம்மை தேடுகிறவர்களை ஒருபோதும் கைவிடுகிறதில்லை; இன்றைக்கு நீங்கள் அவரை தேடுகிறீர்கள்.

மகதலேனா மரியாள் இயேசுவை தேடினாள். அவரை இறந்தவராக காண்பதற்கு அவள் கல்லறைக்குச் சென்றாள். அவருடைய உயிரற்ற சடலத்தை அவள் தேடிச்சென்றாள்; ஆனால், இயேசு, பரிசுத்த ஆவியின் வல்லமையால் உயிர்த்தெழுந்திருந்தார். அவர் உயிரோடிருக்கிறவராக அவளுக்குத் தோன்றினார்; உயிர்த்தெழுந்த இயேசு, "மரியாளே, நீ என்னை மரித்தோரிடத்தில் தேடுகிறாய். ஆனால் நான் இங்கே உயிரோடிருக்கிறேன்; உயிர்த்தெழுதலின் வல்லமையோடு இருக்கிறேன்," என்று கூறினார். அன்பானவர்களே, நீங்கள் மரித்துப்போன இயேசுவை தேடவில்லை. உயிரோடிருக்கிற இயேசுவை தேடுகிறீர்கள். உயிரோடிருக்கும் ஆண்டவராக நீங்கள் அவரை அறிந்துகொள்ளும்போது, அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். நீங்கள் அவரை தேடினால், அவர் சகல ஆசீர்வாதங்களையும் உங்கள் வாழ்வில் கூடுதலாக தருவார். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்." உங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடினால் அவரை கண்டடைவீர்கள். அவர் உங்களை கிட்டிச் சேர்த்து ஆசீர்வதிப்பார். நீங்கள் அவரைத் தேடினால், அவர் உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் கொடுப்பார். அதிகாலையில் அவரைத் தேடுகிறவர்கள் அவரைக் கண்டடைவார்கள். மனுஷ உதவியை, பணத்தை, உலகரீதியான தீர்வுகளை தேடிவிட்டு, கடைசி வாய்ப்பாக அவரைத் தேடாமல், முதலாவதாக தேடுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவரைத் தேடுங்கள்; அவர் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்.

ஓர் அருமையான சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். கர்நாடகாவை சேர்ந்த யதீஷ் என்ற சகோதரர், பெருந்தொற்றுக் காலத்தில் அவரது தந்தையை இழந்தார்; பெரிய பொருளாதார சிக்கலுக்குள் இருந்தார். திருமணம், வீடு கட்டுவது, வாழ்க்கையில் முன்னேறுவது என்று அநேக கவலைகள் அவருக்கு இருந்ததால், பயம் அவரைப் பிடித்தது. அந்த இக்கட்டினால், அவருக்கு கடவுள்மீது கோபம் வந்தது; அவர் இயேசுவை புறக்கணித்தார். அவருக்கு திருமணம் நடந்தது. அவருடைய மனைவி பெயர் கீதா. அவர்கள் குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் சேரும்படி கணவரை நடத்தினார்கள். அவர்கள் பிள்ளைகளை இளம் பங்காளர் திட்டத்தில் சேர்த்தார்கள். ஒருநாள், அவரது மனைவி கீதா, "நாம் கோயம்புத்தூரில் இருக்கும் பெதஸ்தா ஜெப மையத்திற்கு போவோம்," என்று கூறினார்கள். காருண்யா பல்கலைக்கழகத்தின் அருகே அழகான மலைகள் சூழ்ந்திருக்கும் இடத்தில் அமைந்திருக்கும் பெதஸ்தா ஜெப மையம் ஆசீர்வாதம் நிறைந்திருக்கிற, பிரார்த்தனை ஏறெடுக்கப்படும் இடம். தேவ பிரசன்னத்தை தேடுகிறவர்களுக்கு அது பரிசுத்தமான ஸ்தலமாகும். அது சுற்றிப்பார்க்கும் இடமென்று எண்ணி அங்கு செல்வதற்கு யதீஷ் ஒப்புக்கொண்டார். ஆனால், அங்கு நுழைந்ததுமே, தேவ பிரசன்னம் தன்னை தொடுவதை அவர் உணர்ந்தார். அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் ஜெப வீரர்கள் மிகுந்த மனதுருக்கத்துடன் ஜெபித்தார்கள்; தெய்வீக சமாதானம் அவரது ஆவியை நிரப்பியது; தேவனுடன் அவருக்கு ஐக்கியம் ஏற்பட்டது. அவர்கள் ஊர் திரும்பியதும், வாழ்க்கை மாற தொடங்கியது. அவரது மாத ஊதியம் ரூ.30,000/- என்பதிலிருந்து ரூ.50,000/- ஆக உயர்ந்தது. அவரது மனைவிக்கு ரூ.80,000/- ஊதியத்தில் வேலை கிடைத்தது. தேவன் அவர்கள் வருமானத்தை ஏறத்தாழ நான்கு மடங்காக உயர்த்தினார். இரண்டு ஆண்டுகள் கழித்து, அவர்கள் மீண்டும் பெதஸ்தாவுக்கு வந்து மூன்று நாள்கள் ஜெபித்து தியானித்தனர். ஒரு தொழிலை ஆரம்பிக்கும்படி தேவன் அவர்களுக்கு யோசனையை கொடுத்தார். அவர்கள் ஆரம்பித்தனர். தற்போது அவர்கள் அலுவலகத்தில் 30 பேர் வேலை செய்கிறார்கள். தேவன் அவர்களை செழிப்பாக்கி, ஆசீர்வாதமாக விளங்கப்பண்ணினார்.

அன்பானவர்களே, தேவன் உங்களுக்கும் அப்படியே செய்வார். அவர் உங்களை கைவிடமாட்டார். நீங்கள் அவரை நம்புகிறதினால், கூடுதலான ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். அவர் உங்களுக்கு சமீபமாயிருக்கிறார்; உங்கள் வாழ்க்கையில் யாவற்றையும் அவர் பூரணமாக்குவார்.

ஜெபம்:
என் ஜீவனுள்ள தேவனே, நீர் ஜீவிக்கிறவராய், வல்லமையுள்ளவராய், கிருபை நிறைந்தவராய் இருக்கிறபடியினால் உம்மை தேடுகிறேன். நீர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர் என்று அறிந்து உம்மை நம்புகிறேன். உலக பிரகாரமான எல்லா உதவியையும், பெலனைக் காட்டிலும் நீரே எனக்கு முதல் அடைக்கலமாயிருக்கிறீர். உம்மை அண்டி சேரும் என்னை நீர் கிட்டிச் சேர்வீராக. உம்முடைய ராஜ்யத்தை நான் முதலாவது தேடுவதால், என் வாழ்வில் கூடுதலான ஆசீர்வாதங்களை தருவீராக. ஆண்டவரே, இன்று நான் உம்மிடம் கூறுகிற தேவைகள் எல்லாவற்றையும் அருளிச்செய்து, நான் எப்போதும் அதிகாலையில் உண்மையோடு உம்மை தேடுவதற்கு உதவி செய்யும். நீர் உண்மையுள்ளவராக இருப்பதாலும், உம்முடைய பிரசன்னம் மாறாமலிருப்பதாலும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் ஆண்டவரும் ராஜாவுமாகிய நீர் எனக்காக யாவற்றையும் செய்து முடிப்பீர் என்று அறிந்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.