அன்பானவர்களே, "நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது" (சங்கீதம் 103:5) என்பதே இன்றைய வாக்குத்தத்தமாயிருக்கிறது. இந்த வசனம் கூறுகிறபடி, ஆண்டவர் உங்களை நன்மையினால் திருப்தியாக்குவார்.

இதுவே தேவன் உங்களுக்கு தரும் வாக்குத்தத்தமாயிருக்கிறது. அவர் கழுகைப்போல வாலவயதின் புதுப்பெலனை உங்களுக்குத் தர விரும்புகிறார். இன்றைக்கு நீங்கள் களைத்துப்போயிருக்கலாம். "எல்லாவற்றையும் இழந்துபோனேன். செய்தவை எல்லாவற்றிலும் தோற்றுப்போனேன். தொடர்ந்து செல்வதற்கு பெலனே இல்லை. எதிர்காலத்தை குறித்து எந்த வெளிப்பாடும் கிடைக்கவில்லை," என்று நீங்கள் கூறலாம். திடன்கொள்ளுங்கள். தேவன், நன்மையை தந்து உங்கள் விருப்பங்களை திருப்தியாக்கி, கழுகைப்போல உங்களை உயர்த்துவார்.

ஒருவேளை, நீங்கள் செய்யும் பிரயாசத்திற்கு ஏற்ற பலன் கிடைக்காமல் இருக்கலாம். நீங்கள் மனம் தளர்ந்துபோயிருக்கலாம். ஆனால், உங்களுக்கு நன்மைகளை தந்து உங்கள் இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். நீங்கள் உலகத்தின் வழிகளில் நடந்தால், உலகபிரகாரமான காரியங்களையே பெறுவீர்கள். ஆனால், பிசாசு கொண்டு வந்த தீங்கானவற்றையும், உலகத்தையும், தாம் சிலுவையில் செய்த தியாகத்தினால் இயேசு மேற்கொண்டபடியினால் அவரால் உங்களுக்கு அழியாத நன்மைகளை தர முடியும். ஆகவே, உங்களையே பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான பலியாக இயேசுவுக்கு ஒப்புக்கொடுங்கள். "ஆண்டவரே, நான் உம்மை நம்புகிறேன். உம்மால் மாத்திரமே எனக்கு நன்மைகளை தர இயலும். ஆகவே, என் வாழ்க்கையை உமக்கு அர்ப்பணிக்கிறேன். எப்போதும் உம்மை மாத்திரமே நம்பி, ஜீவபலியாக பரிசுத்த பாதையில் நடப்பேன்," என்று கூறுங்கள். நீங்கள் இந்தப் பாதையில் நடக்கும்போது, இயேசு தம்முடைய தியாகத்தின் மூலம் உங்களுக்காக விலைக்கிரயம் செய்த நன்மைகள் உங்கள் வாழ்வில் பாய்ந்து வரும். ஆண்டவரின் ஆசீர்வாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து சேரும்.

யாக்கோபின் வாழ்க்கையை பாருங்கள். அவன், "ஒரு கோலுடன் தனியாக சென்றேன். தேவன் என்னை சந்தித்தார்; நான் அவரை சந்தித்தேன். நான் அவருடன் நடந்தேன்; அவர் என்னை வழிநடத்தினார். இன்றைக்கு நான் இரட்டிப்பான பங்குடன் திரும்புகிறேன். இரட்டிப்பான ஆசீர்வாதம்; மிகுதியான ஐசுவரியம், கனம் ஆகியவற்றை பெற்று பரிபூரணமாய் இருக்கிறேன். தேவன் என்னுடன் பேசினார்; என்னுடைய தேவனாக இருக்கிறார்," என்று கூறினான். ஈசாக்கின் வாழ்க்கையை பாருங்கள். தேசத்தின் ராஜா அவன்மீது பொறாமை கொண்டு அவனுக்கு விரோதமாக வேலை செய்தான். ஈசாக்கு, துரவை வெட்டும்பொழுதெல்லாம் ராஜாவின் வேலைக்காரர்கள் வந்து அதை மூடிப்போட்டார்கள். ஆனாலும் ஈசாக்கு வேலையை தொடர்ந்து செய்தான். அவன் இன்னொரு கிணற்றை வெட்டினான். தேவன் அதில் தண்ணீர் கொடுத்து ஆசீர்வதித்தார். ஆனால், அவன் விரோதிகள் வந்து அவனை விரட்டினர். இறுதியாக, ஈசாக்கு இன்னொரு இடத்தில் தோண்டினான். தேவன் அங்கும் தண்ணீர் கொடுத்தார். இந்த சமயம், விரோதிகள் அவனை விட்டுவிட்டனர். பிறகு, தேவன், ஈசாக்கை பெயர்செபாவுக்கு அழைத்துச் சென்று நூறுமடங்கு அதிகமாய் பெருகப்பண்ணி ஆசீர்வதித்தார். பொல்லாத மக்கள் அவனுக்கு தீங்கு செய்ய முயற்சித்தபோதும், ஈசாக்கு தேவன்மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து வேலை செய்தான். தேவன் அவனுக்கு நூறுமடங்கு ஆசீர்வாதத்தை கொடுத்தார்.

அன்பானவர்களே, அவர் உங்களுக்கும் இப்படியே செய்வார். தேவன் உங்கள் குடும்பத்தில், ஆரோக்கியத்தில், ஞானத்தில், நற்பெயரில், பொருளாதாரத்தில் மிக முக்கியமாக அவருடனான உறவில் நூறுமடங்கு ஆசீர்வாதத்தை தருவார். உங்களுக்காக சிலுவையில் விலைக்கிரயம் தந்த இயேசுவை பின்பற்றுங்கள்; எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் அவரையே நோக்கிப் பாருங்கள்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நன்மையானவற்றை தந்து என் விருப்பங்களை திருப்தியாக்குவதாக வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் விடாய்த்து, உடைந்துபோன நிலையில் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கை வைத்து உம்மிடம் வருகிறேன். கழுகைப்போல என் பெலனை புதுப்பியும்; என் வாழ்க்கையை உம் ஆசீர்வாதங்களால் நிரப்பும். நீர் என்னை பரிசுத்தப்படுத்தி, உமக்கு உகந்தனவனா(ளாக)க மாற்றுவீர் என்று விசுவாசித்து என் வாழ்க்கையை உமக்கு ஜீவபலியாக அர்ப்பணிக்கிறேன். வேதாகமத்தில் காணப்படும் ஈசாக்கையும் யாக்கோபையும்போல, நானும் உம்முடைய பரிபூரண ஆசீர்வாதங்களையும் உண்மையையும் காண்பதற்கு உதவும். எனக்கு வேண்டியவற்றை நீர் அருளிச்செய்து, என்னை தாங்கி, இரட்டிப்பான ஆசீர்வாதங்களை தருவீர் என்று நம்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.