அன்பானவர்களே, "தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்" (1 கொரிந்தியர் 8:3) என்ற இன்றைய வாக்குத்தத்த வசனம், தேவன் நம்மை அறிந்திருக்கிறார் என்ற சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. நீங்கள் இயேசுவை அதிகமாய் நேசிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அவரைப் பின்பற்றுவதற்கு எவ்வளவோ தியாகத்தை செய்திருக்கிறீர்கள். அச்சுறுத்தல்களின் மத்தியிலும் அவரை நேசிக்கிறீர்கள்; மனந்தளரச்செய்யும் சூழ்நிலையிலும் அவருடைய ஊழியத்திற்குக் கொடுக்கிறீர்கள்; ஜெப கோபுரத்தில் மற்றவர்களுக்காக உண்மையாக ஜெபிக்கிறீர்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக தடைகளை தாண்டிச் செல்கிறீர்கள். உங்களுக்காக தம்முடைய ஜீவனை கொடுத்த அவரை எவ்வளவு தியாகத்தோடு நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதை அவரும் அறிந்திருக்கிறார். உங்கள் வாழ்க்கையை முழுவதுமாக அவருக்குக் கொடுத்திருக்கிறீர்கள். நிச்சயமாகவே அவர் உங்களைப் பற்றி அறிந்திருக்கிறார். உங்கள் வழிகளை, நீங்கள் செய்யும் தியாகத்தை, உங்கள் தாழ்மையை, உங்கள் பொறுமையை அவர் காண்கிறார். உங்களைக் குறித்து தாம் வைத்திருக்கிற திட்டங்களை அவர் நிறைவேற்றுவார். உங்களைப் பற்றிய தம்முடைய எண்ணங்களை அவர் அறிந்திருக்கிறார்; அவர் அவற்றை நிறைவேற்றுவார்; ஆகவே, பயப்படாதிருங்கள்.

நிச்சயமாகவே தேவன் உங்களை அறிந்திருக்கிறார். உங்கள் வழிகளை, நீங்கள் செய்த தியாகங்களை, உங்கள் தாழ்மையை, நீங்கள் காட்டும் பொறுமையை அவர் காண்கிறார். உங்களுக்கென்று தாம் வைத்திருக்கும் எல்லா திட்டங்களையும் அவர் நிறைவேற்றுவார். உங்களைக் குறித்து தாம் கொண்டிருக்கும் எல்லா எண்ணங்களையும் அவர் அறிந்திருக்கிறார்; அவற்றை நிறைவேற்றுவார். ஆகவே, பயப்படாதிருங்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் விரார் என்ற இடத்தை சேர்ந்த புல் சிங் பிராமணி என்ற சகோதரர் தன்னுடைய சாட்சியை பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் மனைவி பெயர் கேசர். அவர்களுக்கு ரவீந்திரா, அருணா, கல்பனா என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். சகோதரர் பிராமணி செருப்பு செப்பனிடும் கடையை நடத்தி வந்தார். மிகுந்த பணக்கஷ்டத்தின் மத்தியில் அவர்கள் 22 ஆண்டுகள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிந்து, அவரை அதிகமாய் நேசித்து, அவரைப் பின்பற்ற தொடங்கினர். சொந்த வீடு வேண்டும் என்று கடந்த ஏழு ஆண்டுகளாக ஜெபித்து வந்தனர். அதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் வாய்க்காதேபோயின. அந்த சமயத்தில், அவர்கள் தங்கள் குடும்பத்தை இயேசு அழைக்கிறார் குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் இணைத்து, மாதந்தோறும் ஊழியத்தை தாங்கி வந்தனர்.

சகோ. பிராமணியின் பெயர் மாத்திரமே குடும்ப ஆசீர்வாத திட்ட பங்காளராக பதிவு செய்யப்பட்டிருந்தது. 2020ம் ஆண்டு அவர்கள் இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல்படி நான் அவரது மகளின் பெயரை அழைத்தேன். "கல்பனா, தேவன் உங்களுக்கு சொந்த வீட்டை கொடுக்கிறார். அவர் உங்கள் வீட்டைக் கட்டுவார்," என்று கூறியுள்ளேன். எவ்வளவு அற்புதமான தீர்க்கதரிசனம்! தேவன் அந்த வார்த்தையைக் கேட்டு அதைக் கனப்படுத்தினார்; அவர்கள் ஜெபத்தையும் கேட்டார். அப்படி உரைக்கப்பட்டதற்கு அடுத்த வருடம் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பில் 14வது தளத்தில் அழகிய வீட்டை அவர்களுக்குக் கொடுத்தார். சகோ.பிராமணி குடும்பத்தினருக்கு உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறும்படி அந்த கட்டுமான நிறுவனத்தினரை தேவன் வழிநடத்தினார். இப்போது அவர்கள் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள். நீங்கள் தேவன்பேரில் அன்புகூருகிறபடியினால், அவர் உங்களை அறிந்திருக்கிறார்; உங்களை காண்கிறார்; அவரே உங்களுக்கென்று ஆசீர்வாதங்களை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நீர் என்னையும், என்னுடைய தியாகத்தையும், விசுவாசத்தோடு நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நீர் அறிந்திருப்பதாலும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய இருதயத்தையும், பயத்தின் மத்தியிலும் அதைரியப்படுத்தும் சூழ்நிலையின் மத்தியிலும் நான் உம்மீது அன்பு வைத்திருப்பதை நீர் அறிந்திருக்கிறீர். எந்த தடைகள் எதிர்ப்பட்டாலும் உம்மை பின்பற்றும்படி என்னை பெலப்படுத்தும்;உம்முடைய சமுகத்தால் என்னுடைய ஆவியை உயிர்ப்பியும். என்மீது அளவுகடந்த பொறுமையாயிருப்பதற்காகவும், இக்கட்டுகளின் நடுவே என்னை மெதுவாய் வழிநடத்துவதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். பாதைகள் தெளிவாக தெரியாதபோதிலும், உம்முடைய திட்டங்களின்மேல் நம்பிக்கை வைத்து, எப்போதும் தாழ்மையாயிருக்க எனக்கு உதவும். எனக்கு நீர் தந்திருக்கும் எல்லா வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றுவீர் என்று அறியும்படி, உம் அன்பின் மூலம் எனக்கு தைரியத்தை தந்தருளும். நீர் எனக்கென்று ஆசீர்வாதங்களை ஆயத்தம்பண்ணியிருக்கிறீர் என்று நம்பி, என்னை உம்முடைய சித்தத்திற்கு ஒப்படைத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.