எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்" (ரோமர் 10:9) என்று வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்துவே மெய்யான ஆண்டவரும் இரட்சகருமாயிருக்கிறார். அதை நாம் அறிக்கை செய்யும்போது, நம்முடைய பாவங்களின்மேல் வெற்றி சிறக்க முடியும். "கர்த்தர் எனக்கு இரட்சிப்புமானார்" (யாத்திராகமம் 15:2; சங்கீதம் 118:14) என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் ஆண்டவரைப் பார்த்து, "ஆண்டவர் எனக்கு இரட்சிப்பானார். நான் பாவியாக வாழ்வதற்கு விரும்பவில்லை. சிலுவையின் மூலம் ஆண்டவர் சம்பாதித்த இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்," என்று சத்தமாகக் கூறுவீர்களா?
"நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை" (அப்போஸ்தலர் 4:12) என்று வேதம் கூறுகிறது. ஆகவே, மிகுந்த வல்லமையான 'இயேசு' என்ற நாமத்தையே எப்பொழுதும் கூறி கூப்பிடுங்கள். எல்லா நாமங்களுக்கும் மேலான இந்த நாமம் உங்களுக்கு இரட்சிப்பையும் சுகத்தையும் அளிக்கும். இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். சிலுவையையும், அதில் இயேசு சகித்த பாடுகளையும் நோக்கிப் பாருங்கள்; ஆண்டவர் உங்கள் வாழ்க்கையை மறுரூபப்படுத்துவார்.
"பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் " (1 தீமோத்தேயு 1:15) என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. அன்பானவர்களே, ஏதாவது அடிமைத்தனத்துடன் அல்லது உங்களை அழுத்துகிற பழக்கத்துடன் போராடுகிறீர்களா? சிலுவையையே நோக்கிப் பாருங்கள். வேறு வழியேதும் இல்லை. சிலுவையின் மூலமாக மாத்திரமே உங்களால் மெய்யான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் உங்கள் வாழ்க்கை முற்றிலுமாக மறுரூபமாக்கப்படும்.
"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்" (1 தீமோத்தேயு 2:4) என்றும், "இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல" (மத்தேயு 18:14) என்றும் வேதம் தேவனுடைய இருதயத்தைக் குறித்து அருமையான விளக்குகிறது. "பிரியமானவர்களே ...அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்." (பிலிப்பியர் 2:12) என்றும் வேதம் கூறுகிறது.
அன்பானவர்களே, இன்றைக்கு உங்கள் வாழ்க்கையை முற்றிலும் தேவனுக்கு அர்ப்பணியுங்கள். அவர், எல்லா பாவங்களிலிருந்தும் உங்களை விடுவிப்பார். உங்கள் பாரம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், நீங்கள் அனுமதித்தால் இயேசுவால் அதை இப்போதே அகற்ற முடியும். இயேசுவே உங்கள் ஆண்டவர் என்றும், இரட்சகர் என்றும் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, தாழ்மையான இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன்;என் வாழ்வின் ஆண்டவரும் இரட்சகரும் நீரே என்று அறிக்கையிடுகிறேன். என்னை மீட்பதற்காக நீர் மரித்து, மறுபடியும் உயிருடன் எழுந்தீர் என்று விசுவாசிக்கிறேன்; நீரே என் இரட்சிப்பு என்று பிரஸ்தாபிக்கிறேன். ஆண்டவரே, நான் பாவத்தை விட்டு திரும்பி, உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னை சுத்திகரிக்கவேண்டும் என்று வேண்டுகிறேன். இனிமேலும் பாவியாக வாழ்வதற்கு நான் விரும்பவில்லை. சிலுவையின் மூலம் நீர் அருளும் விடுதலையோடு வாழ்வதற்கு விரும்புகிறேன். உம்மால் மாத்திரமே என் ஆத்துமாவை இரட்சித்து குணப்படுத்த முடியும் என்று அறிந்து, எல்லா நாமங்களுக்கும் மேலான இயேசு என்ற உம்முடைய பரிசுத்த நாமத்தைக் கூறி கூப்பிடுகிறேன். என் வாழ்வை முற்றிலும் உமக்கு அர்ப்பணித்து, உம்முடைய கிருபையால் என்னை மறுரூபமாக்கியருளும்படி கேட்கிறேன். என் இரட்சிப்பை பயபக்தியுடன் நிறைவேற்றுவதற்கு எனக்கு உதவி செய்து என்னை வழிநடத்தும். என்னை இரட்சித்து புதுச்சிருஷ்டியாக்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், ஆமென்.