அன்பானவர்களே, ஆண்டவர் உங்களைக் கண்ணோக்கிக் கொண்டிருக்கிறார். உங்கள் ஆத்துமாவை காக்கும்படி, உங்களை வழிகளைக் காக்கும்படி அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்களுக்கு தகப்பனாயிருக்கிறார். இன்றைய வாக்குத்தத்த வசனம், "கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்" (சங்கீதம் 1:6) என்று கூறுகிறது. நீங்கள் எப்படி நடக்கிறீர்கள்; எப்படி தவறுகிறீர்கள்; எப்படி இக்கட்டுகளை எதிர்கொள்ளுகிறீர்கள் என்பதை மட்டும் அவர் பார்ப்பதில்லை. "நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்" என்று வேதம் கூறுகிறது. நமக்கென்று அவர் ஆயத்தம்பண்ணியுள்ள இடத்தை சென்றடையும்படி அவர் நம்மேல் கண்ணோக்கமாய் இருக்கிறார்; போதிக்கிறார்; ஆலோசனை தருகிறார்; வழிநடத்துகிறார் (சங்கீதம் 32:8; யாத்திராகமம் 23:20).
"என் சமுகம் உனக்கு முன்பாக செல்லும்; நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்றும் அவர் வாக்குப்பண்ணுகிறார். இந்த ஆசீர்வாதம் உங்களுக்கு மாத்திரம் உரியதல்ல; இது உங்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் உரியதாயிருக்கிறது. இஸ்ரவேலை அழைத்ததுபோல, தேவன் உங்களை அழைக்கிறார்; ஆரோனை தெரிந்துகொண்டதுபோல, தமக்கு ஊழியம் செய்ய உங்களை தெரிந்துகொள்கிறார்; நீங்கள் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தில் குடும்பமாய் நடக்கும்போது, அவர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார் (சங்கீதம் 115:12-14). நல்ல மனுஷடைய நடைகளை கர்த்தர் உறுதிப்படுத்துகிறார். நீங்கள் தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாகவும் பயபக்தியாகவும் நடப்பதால், அவர் உங்கள் சந்ததி பூமியில் பெலத்திருக்கும்படி செய்வார் (சங்கீதம் 112:1,2). இன்றைக்கு இந்த வாக்குத்தத்தத்தை தேவன் தருகிறார்.
வசந்தி என்ற சகோதரியின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் கணவர் பெயர் அருணாசலம். மகன் பெயர் சரத்குமார். அவர்கள் குடும்பத்தில் இந்த சகோதரி மட்டும் ஆண்டவரை அறிந்திருந்தார்கள். அவர்கள் தன் மகனை உண்மையாய் இயேசு அழைக்கிறார் இளம் பங்காளர் திட்டத்தில் இணைத்தார்கள். அந்நேரம் முதல், தேவ ஆசீர்வாதம் அவன் வாழ்வில் விளங்கத் தொடங்கியது. அவர்கள் கணவர் வேலை இழந்ததால், பணக்கஷ்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தாலும் தேவன் அவர்கள் மகன் மூலமாக அவர்களை ஆசீர்வதித்தார். அவன் படிப்பை முடித்ததும் வளாக நேர்முக தேர்வில் ஆறு நிறுவனங்களால் பணிக்கு தெரிந்தெடுக்கப்பட்டான். அதில் ஒரு நிறுவனத்தில் அவன் பணிக்குச் சேர்ந்து இரண்டாண்டுகள் வேலை செய்தான்.
பிறகு, அவர்கள் மகன், சொந்தமாக எலக்ட்ரிக்கல் வியாபாரத்தை ஆரம்பிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் பெலப்படுத்தினார். இன்றைக்கு அவர் அநேகருக்கு வேலை கொடுக்கும் தொழிலதிபராக இருக்கிறார். உடன் படித்தவர்கள் கூட இப்போது அவருக்காக வேலை செய்கிறார்கள். தொழில் நிமித்தம் அவர் பல நாடுகளுக்கு பயணிக்கிறார். அவருக்கு திருமணமாகி மகன் இருக்கிறார். அவருடைய மகனும் இளம் பங்காளர்தான்! கர்த்தர் நீதிமானின் வழியை அறிந்திருக்கிறார்; அவனை கண்ணோக்குகிறார்; நடைகளை உறுதிப்படுத்துகிறார்; தேசத்தில் பெலத்திருக்கும்படி அவனையும் அவன் சந்ததியையும் வர்த்திக்கப்பண்ணுகிறார். இந்த தெய்வீக பெருக்கத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் அளித்து ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என்மேல் கண்ணோக்கமாயிருந்து என்னுடைய நடைகளை உறுதிப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே என் வழிகாட்டி, என்னை பாதுகாக்கிறவர், தேவையான நேரத்தில் அநுகூலமான துணையானவர். ஆண்டவரே, என் வழிகள் உமக்கு முன்பான நீதியானவையாய் இருப்பதாக. நீர் எனக்கு ஆயத்தம்பண்ணியிருக்கிற இடத்துக்கு என்னை வழிநடத்தும். என்னையும் என் பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் உம்முடைய தெய்வீக கிருபையினால் ஆசீர்வதித்தருளும். உமக்கு முன்பாக பரிசுத்தத்திலும் பயபக்தியிலும் நடக்கவும், உம்முடைய தெய்வீக ஆலோசனைமேல் நம்பிக்கை வைக்கவும் எனக்கு உதவும். ஆண்டவரே, என்னை பெருகப்பண்ணி, என் சந்ததி இந்த பூமியில் பெலத்திருக்கும்படி செய்யும். உம்முடைய பிரசன்னம் எனக்கு முன்பாக சென்று இளைப்பாறுதலையும் சமாதானத்தையும் அருளிச்செய்யட்டும். உம்முடைய அன்பு என்னை சூழ்ந்துகொள்ளட்டும். உம்முடைய நீதியின் கரத்தினால் என்னை தாங்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.